Thursday, April 30, 2015

a so so film by mani rathnam

ஐ.ட்டி என்றாலே
கொழுத்த பணம்,
ஒழுக்க அத்துமீறல்கள் கொண்டது
என்பது ஒரு பொதுப்புத்தி.

ஒரு தமிழ் இயக்குநரின் தமிழ் மனம்

*
எம்.ஜி.சுரேஷ்


றாராகச் சொல்வதென்றால், தமிழில் புதுவகை சினிமாவை அறிமுகப் படுத்தியவர்களாக மகேந்திரனையும், பாலு மகேந்திராவையும் மட்டுமே குறிப்பிட முடியும். மற்ற இயக்குநர்கள் எல்லோருமே புதுவகை சினிமாவைப் போன்ற சினிமாவைத்தான் எடுத்தார்கள். எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பாரதிராஜாவின் சினிமா ஒரு வகை மசாலா என்றால், பாலசந்தரின் சினிமா இன்னொருவகை மசாலா. அமீர், பாலா போன்றவர்கள் தயாரிக்கும் மசாலாக்கள்  வேறு தினுசான மசாலாக்கள். இவர்கள் ஃபார்முலாக்களை உடைக்க வந்தவர்கள். தங்களுக்கு என்று புதிய ஃபார்முலாக்களை உருவாக்கிக் கொண்டு, சிலந்தி தன் வலையிலேயே சிக்கிக்கொண்டது போல், அதிலேயே சிக்கிகொண்டு திணறியவர்கள். இவர்களைப் போன்றும், அப்படி இல்லாமலும் படம் எடுக்கும்  ஒரு இயக்குநர் நம்மிடையே இருக்கிறார். அவர்தான் மணிரத்னம்.

மணிரத்னத்தின் மனம் உயர் மத்தியவர்க்க மனம். தீவிரவாதிகளைக் கெட்டவர்களாகவும், திருத்தப்படவேண்டியவர்களாகவும் பார்க்கும் மனம். தீவிரவாதிகள் ஏன் உருவாகிறார்கள், அதற்கு யார் காரணம் என்பதைப் பார்க்கத் தவறும் மனம். ரோஜா படத்தில் வரும் தீவிரவாதி ‘மனம் திருந்தும்’ சம்பவத்தை எடுத்துரைப்பது இந்த மத்தியதர வர்க்க மனம்தான். ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும் ஒரு டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்ய முன்வந்தால் என்ன ஆகும். அப்படித்தான் இவரும் இவரது படங்களும் ஆகி விடுகின்றன.

இதற்கு உதாரணமாக, அண்மையில் வெளி வந்த அவரது ஓகே கண்மணி படத்தைக் கூறலாம்.


படம் ஆரம்பிக்கிறது. கதாநாயகனின் அறிமுகத்துக்குப் பின் கதாநாயகியின் அறிமுகம். கதாநாயகி தாரா (நித்யா மேனன்) ஒரு ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் நிற்கிறாள். பிளாட்பாரத்தின் ஓரத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதன் முன் விழ முயல்கிறாள். நமக்கோ பகீர் என்கிறது. உலகப் புகழ் பெற்ற கொரியன் திரைப்படமான ‘மை சாஸி கேர்ல்’ என்ற திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியல்லவா இது? நல்லவேளையாக, மணி யூ டர்ன் அடித்துத் திரும்பி கதையை வேறு பக்கம் நகர்த்துகிறார்.

மும்பையில் ஒரு ஐ. ட்டி கம்பெனியில் வேலை கிடைத்து வருகிறான் கதாநாயகன். வழக்கமாக தமிழ் சினிமாவில் நிகழ்வது போலவே கதாநாயகியை ரயில்வே ஸ்டேஷன், சர்ச் என்று எதிர்பாராதவிதமாகச் சந்திக்கிறான். இருவருக்கும் பிடித்துப் போகிறது. கதாநாயகன் ஒரு வயதான தம்பதிகளின் வீட்டில் பேயிங் கெஸ்டாகத் தங்குகிறான். கதாநாயகியையும் தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறான். இருவரும் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இது போன்ற கதைகளை ஹாலிவுட் அரைத்துத் தேய்த்து விட்டது. ‘நோ ஸ்ட்ரிங்க்ஸ் அட்டாச்ட்’, ‘ஃப்ரண்ட்ஸ் வித் பெனெஃபிட்ஸ்’ போன்ற பல படங்கள் ஹாலிவுட்டில் வந்து போய்விட்டன. அந்தப் படங்கள் மணிக்கு ஆதர்சமாக இருந்திருக்க வேண்டும். மணி அதுபோன்ற படங்களை   பார்த்துச் சுட்டுவிட்டார் என்று பிலாக்கணம் பிடிப்பதல்ல நமது நோக்கம். அதிலுள்ள ஜீவனைப் பயன்படுத்தத் தவறிவிட்டாரே என்பதுதான் நமது ஆதங்கம்.

பேருக்குத்தான் கதை ஐ.ட்டி உலகத்தைப் பற்றிப் பேசுகிறதே தவிர, அந்த உலக மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றிப் பேசுவதில் பதுங்கி ஒளிகிறது. அமெரிக்காவில் ஐ.ட்டி மக்கள் ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது சர்வ சாதாரணம். அவர்களுக்குள் பற்றிக் கொள்வதும் அதைவிட சாதாரணம். ஆண் - பெண் என்கிற பாலியல் வேறுபாட்டைத் தவிர, வேறு எந்தவிதமான செண்டிமெண்டுக்கும் அங்கே இடமில்லை. மணியின் படத்தில் வரும் கதாநாயகி தன் சொத்துக்கு ஆசைப்படாத, தன்னை மட்டுமே காதலிக்கிற ஒரு கதாநாயகனைத் தேடுகிறாள். இது ஐ.ட்டி மனம் அல்ல. இந்திய மனம். அதிலும் தமிழ் மனம். இது சராசரி கதைக்குரிய கதாநாயகிகளுக்கு மட்டுமே இருக்க வேண்டிய மனம். ஒரு ஐ.ட்டி துறையில் இருக்கும் பெண்ணுக்கு இருக்க சாத்தியமில்லாத மனம். கல்யாணமில்லாமல் உடலுறவு கொள்ளும் ஒரு இளம் ஜோடி, வயதான இன்னொரு ஜோடியின் அன்னியோன்னியத்தைப் பார்த்து திருமணம்தான் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்களாம். இதுதான் இந்தப் படம் முன்வைக்கும் நீதி.

ஐ.ட்டியில் வேலை பார்ப்பவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல. நம்மிடையே வாழ்பவர்கள்தான். வேலையின் நிமித்தம் அவர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் காதலிக்க முடிவதில்லை. திருமணம் செய்ய முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் பிராஜக்ட் பிராஜக்ட் என்றே ஓடுகிறது. காமத்தை மனம் மறுத்தாலும் உடல் மறுப்பதில்லை. இது ஒரு நெருக்கடி. இதற்கு அளவுகோல்கள் இல்லை. ஒழுக்கவிதிகள் இல்லை. காமம் என்பது ஓர் உடல் உபாதை. அதை அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள். அது அவர்கள் செய்து கொண்டிருக்கும் பிராஜக்டுக்கு உதவியாக இருக்கிறது. எனவே, கல்யாணத்தைவிட இது பரவாயில்லாமல் இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நவீன சித்தாந்தம். இவர்கள் தங்களையும் அறியாமல் அதைத் தகர்க்கிறார்கள். தங்களுக்கே தெரியாமல் இவர்கள் குடும்பம் என்ற நிறுவனத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்.

இதே போன்ற கதையமைப்புக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள் எதிர்பாராத விதமாகக் கர்ப்பம் தரித்து விடுவார்கள். அவர்கள் துறக்க விரும்பும் குடும்பம் என்ற நிறுவனம் அவர்களின் காதைப் பிடித்துத் திருகி இழுத்துப் போகும் வேடிக்கையை ரசிக்கும்படி எடுத்துரைப்பார்கள். மணியின் நிலையோ ரெண்டும் கெட்டான் நிலைமை. ஐ.ட்டி கதையையும் எடுக்க வேண்டும். ஆனால், தமிழ் மனத்துக்கு எதிராகவும் போய்விடக்கூடாது. காதலிக்கும் போது நவீன உடைகளில் திரியும் கதாநாயகி, சட்டென்று தழையத் தழைய புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டித் திருமணம் செய்து கொள்வது பழைய தமிழ் மரபு. அதைத் தான் ஓகே கண்மணியும் செய்கிறாள். அதனால் மணிரத்னத்தின் மற்ற படங்களான, அக்னிநட்சத்திரத்தில் வரும் அமலா, இதயத்தைத் திருடாதே படத்தில் வரும் கதாநாயகி ஆகியோரைவிட பின்தங்கி இருக்கிறாள்.

கல்யாணம் ஆகாமலேயே ஒரு பெண் உடலுறவு கொள்வது காலங்காலமாக நடந்துதான் வருகிறது. மகாபாரதத்தில் குந்தி கல்யாணம் ஆகாமல்தான் கர்ப்பம் தரித்தாள். அதுவும் ஐந்து முறை! அது தாய்வழிச் சமூகம். பின்னாளில் தந்தைவழிச் சமூகம் வந்தபோதுதான், தனி சொத்துரிமையைக் காக்கும் பொருட்டு, ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற சொல்லாடல்கள் பிறந்தன. தனக்குப் பின் தனது சொத்து தன்னுடைய விதையில் பிறந்த குழந்தைக்குத்தான் போய்ச்சேர வேண்டும் என்ற அடிப்படையில் தான் திருமணம் என்ற சடங்கும், குடும்பம் என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டன. மணி நினைப்பது போல் கல்யாணமாகமாலேயே கன்னி கழிவது சாகச வேலை அல்ல. அதைப்பார்த்து மூக்கில் விரல் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அது தரும் அதிர்ச்சி முக்கியமானது. அதை இந்தப் படம் தரவே இல்லை.

ஐ.ட்டி மனிதரும் எழுத்தாளருமான சேத்தன் பகத்தின் நாவல் ஒன்றில் ஒரு காட்சி வரும். ஒரு கார். அதில் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் உடலுறவு கொள்வார்கள். உடலுறவு முடிந்ததும், அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு அவளிடம் கேட்பான். உரையாடல் கிட்டத்தட்ட இந்த ரீதியில் இருக்கும்.

‘எப்ப கல்யாணம்?’

‘அடுத்தவாரம்’

‘மாப்பிள்ளை எங்கே இருக்கிறான்?’

‘யு.எஸ்ஸில்.’

-    ‘கல்யாணம் ஆகிவிட்டால் உன்னைப் பார்க்க முடியாதே. அதனால்; உன்னுடன் ஒருதடவை இருந்துவிட்டுப் போக விரும்பினேன்’ என்பாள் அவள்.

அப்போதுதான் நமக்குத் தெரியும், அந்தப் பெண்ணும் அந்த ஆணும் காமம் வேறு கல்யாணம் வேறு என்ற கோட்பாட்டில் இருக்கிறார்கள் என்று. இதுதான் ஐ.ட்டி கலாசாரம். இந்தக் காட்சி தரும் அதிர்ச்சி சற்றும் எதிர்ப்பாராதது. இது ஒரு நிதர்சன உண்மை. இதுபோன்ற ஒரே ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் இல்லை. தவிரவும், இந்தப் படத்தில் வரும் ஐ.ட்டி இளைஞன் தாறுமாறான வேலை நேரத்தில் சிக்குண்டு அலைக்கழிக்கப் படுவதில்லை. நினைத்த நேரத்தில் தன் அலுவலகத்தை விட்டு வெளியேறி, காதலியுடன் வெளியூர் எல்லாம் போகிறான். அவனைக் கம்பெனி ‘எஸ்கலேட்’ செய்வதில்லை. அந்தப் பெண்ணும் தனது அலுவலகத்துக்குள் நுழைந்ததும், இவன் போனில் அழைக்க உடனே வெளியேறிப் போய்விடுகிறாள். அவனுடன் பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஓர் இடத்தில் காஃபி சாப்பிடுகிறாள். இதெல்லாம் கல்லூரியில் படிக்கும் காதலர்களுக்கான காட்சிகள். ஐ.ட்டி மக்களுக்கான காட்சிகள் அல்ல. இப்படி நிறைய சொல்லலாம். இந்தக் கதையை ஐ.ட்டி பின்புலத்தில் வைத்துத்தான் எடுத்திருக்க வேண்டும் என்றில்லை. வேறு எந்தப் புலத்தில் வைத்து வேண்டுமானாலும் எடுத்திருக்க முடியும். இதில் ஐ.ட்டி மக்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசப்படவே இல்லை. ஐ.ட்டி என்றாலே கொழுத்த பணம், ஒழுக்க அத்துமீறல்கள் கொண்டது என்பது ஒரு பொதுப்புத்தி. இது மத்தியவர்க்க மனித மனத்தால்  கட்டமைக்கப்பட்டது. மணியின் பொதுப்புத்தியும் அதுவே. அதைத்தான் மணி இந்தப் படத்தில் விநியோகம் செய்திருக்கிறார்.

                          <><><><><>




Friday, April 24, 2015

திரைப்படம் / கியூபா - சவத்துடன் ஒரு பயணம்


சவத்துடன் ஒரு பயணம்
(guantanamera – Cuba - 1995)
• • •
எம்.ஜி. சுரேஷ்


கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் வசிக்கும் யோயிதாவுக்கு திடீரென்று ஓர் ஆசை முளைக்கிறது. தனது சொந்த ஊரான குவாண்டனமோவுக்குப் போக வேண்டும் என்பதுதான் அது. அங்கிருந்து ஹவானாவுக்கு வந்த பிறகு, கடந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில் ஒரு தடவை கூட குவாண்டனமோவுக்கு அவள் போனதே இல்லை. தனது உற்றார், உறவினர், நண்பர்கள் என்று பலரும் குவாண்டனமோவில்தான் இருக்கிறார்கள். சாவதற்குள் ஒருமுறை அவர்களைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கான சந்தர்ப்பமும் வருகிறது. யோயிதா ஒரு பாடகி. அவளை குவாண்டனமோ ஊர் மக்கள் பாராட்டி கௌரவிக்க விரும்புகிறார்கள். அதற்கான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். உடனே அவளும் புறப்பட்டு வருகிறாள்.

     குவாண்டனமேரா என்றால் குவாண்டனமோவைச் சேர்ந்த பெண் என்பது பொருள். தவிரவும் குவாண்டனமேரா என்பது புகழ்பெற்ற கியூபாவின் நாடோடிப் பாடலும் கூட. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான யோயிதா ஒரு பாடகி என்பதால், இந்தப் படத்தில் அந்தப் பாடல் ஆங்காங்கே பின்னணியாக இசைக்கப்பட்டிருப்பது நேர்த்தியாகவும் பொருத்தமாகவும்  இருக்கிறது.

     குவாண்டனமோ விமானநிலையத்துக்குப் பறந்து வரும் உலோகப்பறவை தரை இறங்கி, ரன்வேயைத் தொடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. இவளை வரவேற்பதற்காக உறவுக்காரியான ஜார்ஜினா விமான நிலையத்துக்கு வந்திருக்கிறாள். அவளைப்பார்த்ததும் யோயிதா பரவசமடைகிறாள். தொடர்ந்து போகும் வழியில் தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பலரைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள். எல்லாவற்றுக்கும் உச்சமாக கிழவர் கேண்டிடோவைப் பார்த்து அளவற்ற ஆனந்தம் அடைகிறாள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கேண்டிடோ அவளது காதலனாக இருந்தார். இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர். அந்தக் காலத்து நினைவுகள் அவர்களை எங்கெங்கோ இழுத்துப் போகின்றன. 

     ’உனக்குத் தெரியுமா? நீ கொடுத்த நீல ரிப்பனை நான் இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறேன்?’ என்கிறார் கேண்டிடோ.

     ’அப்படியா?’ என்று அளவற்ற வியப்புடன் கேட்கி|றாள் யோயிதா. மனம் நெகிழ்ந்து அப்படியே அவரை அணைத்துக் கொள்கிறாள். அவரும் அவளை பதிலுக்கு அணைத்துக் கொள்கிறார். உணர்ச்சிப் பெருக்கில் அவள் கைகால்கள் துவள்கின்றன. அந்தத் தருணத்தில் அவள் உயிர் சட்டென்று பிரிந்து விடுகிறது.

     இப்போது ஒரு பிரச்சனை முளைக்கிறது. யோயிதாவின் உடலை இங்கிருந்து ஹவானாவுக்குக் கொண்டு போகவேண்டும். அங்குதான் சவ அடக்கம் செய்ய வேண்டும். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், அது அத்தனை சுலபமான காரியம் அல்ல.

     கியூபா நாட்டுச்சட்டப்படி ஒருவர் எங்கு இறக்கிறாரோ, அந்தப் பிராந்தியத்துக்குரிய நகரசபைதான் அந்தச் சடலத்துக்குப் பொறுப்பு. இறந்த நபர் அதே ஊரில் அடக்கம் செய்யப்படாமல், வேறு ஊருக்குக் கொண்டுபோய் அடக்கம் செய்யக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுமானால், அதற்கான ஏற்பாடுகளையும் அந்த நகரசபைதான் செய்ய வேண்டும். அதாவது, இறந்த உடலை, எந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டுமோ, அந்த ஊருக்கு நகரசபைதான் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான வாகனம், ஓட்டுநர், எரிபொருள் எல்லாவற்றையும் அதுதான் ஏற்க வேண்டும்.

வழக்கமான இந்தச் சட்டத்தை அரசு உயர் அதிகாரியான அடால்ஃபினோ மாற்றுகிறான். அவனது புதிய சட்டப்படி, ஒரு சடலத்தை வேறு ஊருக்குக் கொண்டுபோக வேண்டுமானால், அந்தச் சடலத்தை அப்படியே ஒரே வண்டியில், போக வேண்டிய ஊருக்குக் கொண்டு போய்விடமுடியாது. வழியில் வரும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கல்லறை நிலையங்களில் வண்டியை நிறுத்தி, அங்கிருந்து வேறு ஒரு வண்டியில் சடலத்தை மாற்றி வைத்துக் கொண்டு அடுத்த ஊர் வரை கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் வாகனம், எரிபொருள், டிரைவர் பயன்பாடு ஆகியவற்றில் சோஷலிசத்தை பிரயோகம் செய்ய முடியும். அடால்ஃபினோ ஜார்ஜினாவின் கணவன். ஜார்ஜினாவின் அத்தையான யோயிதாவின் மரணத்தின் மூலம் இப்போது அவன் குடும்பத்திலேயே ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது. தனது புதிய சட்டத்தைத் தானே பரிசோதித்து சரிபார்க்க முடியும். அதில் அவனுக்கு மகிழ்ச்சி.

     இப்போது யோயிதாவின் உடலை குவாண்டனமோவிலிருந்து ஹவானாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை ஜார்ஜினாவின் கணவன் அடோல்ஃபோ சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான். அடால்ஃபோ ஒரு சிடுமூஞ்சி. ஆணாதிக்கவாதி. மனைவியை அடிமைபோல் நடத்துபவன். ஜார்ஜினா அவனுடன் விருப்பமின்றி வாழ்க்கை நடத்துகிறாள். கம்யூனிஸ்ட் கியூபாவின் அதிகார வர்க்கத்தினரில் அவனும் ஒருவன். சடலத்தை ஆங்காங்கே மாற்றி மாற்றி எடுத்துப் போக வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்திருக்கிறான். எனவே, இப்போது இது வெற்றி அடைந்தால் இந்த முறை தொடர்ந்து கையாளப்படும். அவனுக்கும் பேரும் பதவி உயர்வும் கிடைக்கும்.

      அடோல்ஃபோ, அவன் மனைவி ஜார்ஜினா, யோயிதாவின் பால்யகால காதலர் கேண்டிடோ ஆகிய மூவரும் ஒரு காரில் டிரைவருடன் ஹவானாவுக்குப் புறப்படுகின்றனர். அவர்களுக்கு முன்பாக யோயிதாவின் உடலைச் சுமந்து செல்லும் சவ ஊர்தி போகிறது.

     இவர்கள் மூவரும் புறப்படும் அதே சமயத்தில், குவாண்டனமோவிலிருந்து இரண்டு பேர் ஹவானாவுக்குப் புறப்படுகின்றனர். டிரைவர் மரியானோவும் அவனது நண்பர் ரேமனும்தான் அந்த இரண்டு பேர். ஆங்கிலத்தில் friend, philosopher, guide என்று சொல்வார்களே அதைப் போல்தான் மரியானோவுக்கு ரேமன். அவனுக்கு சதா அறிவுரைகள் வழங்கியபடியே இருப்பார். மரியானோ பாவாடைகளின் பின்னால் சுற்றித் திரிபவன். லாரி டிரைவரான அவனுக்குப் போகும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு காதலி இருக்கிறாள். அவர்களைச் சமாளிப்பதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. இப்போது கூட அவன் ஹவானாவுக்குப் போவதே தனது உள்ளூர்க் காதலியிடமிருந்து (மணமாகி கணவனுடன் வாழ்பவள்!) தப்பி ஒடுவதற்காகவே. அவளுக்குப் பயந்து ஹவானாவுக்குத் தெறித்து ஓடுகிறான். ரேமன் அவனுக்கு அறிவுரை கூறுகிறார். ‘இப்படி எத்தனை நாளைக்குத்தான் ஓடிக்கொண்டிருப்பாய்? யாராவது ஒருத்தியுடன் செட்டில் ஆகப்பார். இளமையில் இந்த வாழ்க்கை ருசியாகத்தான் இருக்கும். வயதான பின் யாரும் வரமாட்டார்கள். நீ தனிமையில் வாழ்ந்து சாக வேண்டும். நீ சாகும்போது உன் கண்களை மூட, கண்ணீர் சிந்த ஒரு பெண் வேண்டாமா? யோசி’

     லாரியில் ஏறும் முன் ரேமன் மதுவைக் கொப்பளித்து லாரியின் டயர்களில் துப்புகிறான். பின்பு சிகரெட்டைப் பிடித்து டயர்களில் ஊதுகிறான். இது கியூப நாட்டு ஐதீகம். நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது, இப்படிச் செய்தால், போகும் வழியில் வாகனத்துக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்பது நம்பிக்கை. பின்பு, இருவரும் லாரியில் ஏற லாரி புறப்படுகிறது.

     போகும் வழியில் ஒரு உணவு விடுதியில் ரேமன் வண்டியை நிறுத்துகிறான். அங்கே ஒரு பெண்ணின் மீது மரியானோ இடித்துக் கொள்கிறான். ‘ஸாரி’ சொல்லத் திரும்பும் அவன் திடுக்கிடுகிறான். இடிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் திகைக்கிறாள். இருவர் மனங்களிலும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன. அந்தப் பெண் வேறு யாருமல்ல. அடோல்ஃபோவின் மனைவி ஜார்ஜினாதான். பல ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் இப்போது எதிர்பாராதவிதமாக மரியானோவும் ஜார்ஜினாவும் சந்தித்திருக்கின்றனர்.  வியப்பில் ஆழ்கின்றனர். அவள் அவனது முதல் காதலி. வாழ்க்கையில் மறக்கவே முடியாத விஷயங்களில் ஒன்று முதல் காதல் அல்லவா?

மரியானோ கல்லூரியில் படித்த காலத்தில், அதே கல்லூரியில் ஜார்ஜினா பேராசிரியராக இருந்தாள். இளைஞனான மரியானோவுக்கு அவள் மேல் ஒரு மயக்கம் இருந்தது. அவளோ ஓர் ஆசிரியை. இவனோ மாணவன். இவர்களுக்குள் காதல் எப்படி சாத்தியப்படும்? எனவே, அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துவதில் அவனுக்கு மனத்தடை இருந்தது. இருந்தாலும் ஒருநாள், அவன் தன் காதலை வெளிப்படுத்தி ஒரு கடிதம் எழுதி ஒரு புத்தகத்தில் வைத்து அவளிடம் கொடுத்து விட்டான். அதன் பிறகு அவளை அவன் பார்க்கவே இல்லை. அந்தக் கடிதத்துக்கான அவளின் எதிர்வினையைக் கூட அவனால் பெற முடியவில்லை. அதற்குப் பின் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நடந்து விட்டன. அவள் தன் வேலையை விட்டு விட்டாள். அடோல்ஃபோவுடன் திருமணம் ஆகிவிட்டது. இவன் பொறியியல் படிப்புப் படித்துவிட்டு லாரி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். காலம்தான் எத்தனை விரைவாக ஓடிவிட்டது. அந்த நிகழ்வுக்குப் பின்னர் இப்போதுதான் அவளை மீண்டும் பார்க்கிறான். அவளும்தான்.

     இந்தச் சந்திப்பு இருவருக்குள்ளும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தி விடுகிறது. இருவராலும் ஒன்றும் பேச முடிவதில்லை. பக்கத்தில் சிடுமூஞ்சிக் கணவன் அடோல்ஃபோ. கூடவே இருக்கும் வயோதிகர் கேண்டிடோ. நடப்பதையெல்லாம் உற்றுக் கவனிக்கும் டிரைவர். இவர்கள் முன்னிலையில் என்ன பேசுவது. ஹலோ, சௌக்கியமா போன்ற முகமன் வார்த்தைகளுடன் அந்தச் சந்திப்பு அகாலமாக முடிந்துவிடுகிறது. இருவரும் மனச்சுமையுடன் அவரவர் வாகனங்களில் புறப்பட்டுப் போகின்றனர். அதன் பிறகு அவர்கள் தொடரும் தங்கள் பயணத்தில் வழி நெடுக அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். பெட்ரோல் பங்க், உணவு விடுதி, சிற்றூர், வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில்வே கேட், சவத்தை வேறு வண்டியில் மாற்றும் நிலையங்கள் என்று பல இடங்களில் அவர்களுக்கிடையே சந்திப்புகள் நிகழ்கின்றன. அந்த இடங்களில் முன்னாள் காதலிகளைச் சந்திக்கும் தருணங்களும் நிகழ்கின்றன. பழைய காதலிகள் ஜார்ஜினாவின் கணகளில் படாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு அவனைப் பிடித்து ஆட்டுகிறது.

     அடிக்கடி நிகழும் இந்தச் சந்திப்புகளின் போது இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் துண்டுத் துண்டாகத் தெரிந்து கொள்கின்றனர். இருவருக்குள்ளும் ஒளிந்திருந்த காதல் துளிர்விட ஆரம்பிக்கிறது.

     இதற்கிடையில் யோயிதாவின் சடலம் ஆங்காங்கே சவ நிலையங்களில் நிறுத்தப்பட்டு வேறு வேறு வாகனங்களில் மாற்றப்படுகிறது. அடோல்ஃபோ எரிச்சலும் கோபமுமாக இருக்கிறான். கார்ப்பயணத்தின் போது, ஜார்ஜினாவும் கிழவர் கேண்டிடோவும் சகஜமாகப் பேசிகொண்டே வருகின்றனர். கிழவர் யோயிதாவின் மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி உருகுகிறாள் ஜார்ஜினா. தன் கணவன் இப்படி இல்லையே என்று நினைக்கிறாள். கிழவரும் தன் மனைவி ஜார்ஜினாவும் இப்படி வழி நெடுகப் பேசியபடியே வருவது அடோல்ஃபோவுக்குப் பிடிப்பதில்லை.

போகும் வழிதோறும் தொண்ணூறுகளில் இருந்த கியூபா படம் பிடித்துக் காட்டப்படுகிறது. கியூபாவின் வீடுகள், சாலைகள், நிலப்பரப்பு ஆகியன அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாடுகளில் கியூபாவும் ஒன்று. கியூபாவில் உடனடியாக பணவீக்கம், உற்பத்தியில் தேக்கம், அத்தியாசவசியமான பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியன ஏற்படுகின்றன. கடைகளில் கியூபாவின் கரன்சியை யாரும் மதிப்பதில்லை. அமெரிக்க டாலர் இருந்தால்தான் பொருள் வாங்க முடியும். மக்கள் வேண்டிய உணவுப் பொருள் கிடைக்காமல் வாழைப்பழங்களைத் தின்று காலத்தை ஓட்டுகின்றனர். எங்கும் ரேஷன். எதிலும் ரேஷன். தொண்ணூறுகளில் கியூபா கடத்தல்காரர்களின் சொர்க்கமாக இருந்தது. படித்தவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காது. பயணம் செய்பவர்களுக்கு நேரத்துக்கு பஸ் கிடைக்காது. வழியில் வரும் லாரி, வேன் என்று எது கிடைக்கிறதோ அதில்தான் பிரயாணம் செய்ய முடியும்..  அது கூட நிம்மதியான பயணமாக இராது. பாதி வழியில், யாராவது ஓர் அரசு அதிகாரி நினைத்தால் போதும். போகும் வாகனத்தின் செல்லும் திசையை மாற்றிவிட முடியும். கிழக்கு நோக்கிப் பயணம் செய்பவன் தன் விருப்பத்துக்கு மாறாக மேற்கு நோக்கிப் பயணம் செய்ய வேண்டிய தர்மசங்கடம் நேரும். கியூப மக்களின் வாழ்க்கையில் அரசின் அதிகாரவர்க்கம் (Bureacracy) நுழைந்து எப்படியெல்லாம் மக்களை அலைகழிக்கிறது என்பதை இந்தப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.

இவர்கள் பயணம் தொடர்கிறது. மக்கள் ஆங்காங்கே அகதிகள் போல் திக்குத் தெரியாமல், திசை புரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில் தெருவில் ஒரு ஆள் வெள்ளைப்பூண்டு விற்றுக் கொண்டிருக்கிறான். உடனே, அடோல்ஃபோவும், கார் டிரைவரும் அவனிடம் பூண்டு வாங்கிக் கொள்கின்றனர். எந்தப் பொருள் எங்கே கிடைக்கிறதோ அதை உடனே வாங்கிக் கொண்டால்தான் உண்டு. இப்போது விட்டால் அப்புறம் கிடைக்காது. இந்த அவலமான சூழ்நிலையில் மரியானோ - ஜார்ஜினாவின் காதல் பூத்துக் குலுங்குவது இயற்கையின் விசித்திரம்.

ஒரு துணிக்கடையில் பெண்களுக்கான அழகிய உடை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கிழவர் அதை ஜார்ஜினாவிடம் சுட்டிக் காட்டி, ’என்ன அழகான உடை, இதை யோயித அணிந்தால் எத்தனை அழகாக இருக்கும் தெரியுமா?’ என்கிறார். ஜார்ஜினாவுக்கு அந்த உடையைப் பிடித்து விடுகிறது. அவள் உடனே அதை வாங்கி அணிந்து கொள்கிறாள். இதைப் பார்த்த அடோல்ஃபோ, ‘என்ன சிங்காரம் வேண்டிக் கிடக்கிறது? என்று அவளைத்திட்டுகிறான். ‘எல்லாம் இந்தக் கிழப்பயாலால் வந்தது, என்று அவரைத் திட்டுகிறான். பின்பு தன் மனைவியை சாலையில் அடி அடி என்று அடித்து நொறுக்குகிறான். அப்போது அங்கே வரும் மரியானோ ஓடி வந்து ஜார்ஜினாவைக் காப்பாற்றுகிறான். கிழவர் காரை விட்டு இறங்கி விடுகிறார். தனியே ஹவானாவுக்குப் போக முடிவு செய்கிறார். பல வாகனங்களில் மாறி மாறி அவர் பயணம் செய்கிறார்.

போகு வழியில் ஒரு ரயில்வே கிராஸிங்கில் வேலை செய்யும் ஒரு பெண் மரியானோவிடம் நெருக்கமாக நடந்து கொள்கிறாள். இதைப் பார்க்கும் ஜார்ஜினா மனம் உடைந்து போகிறாள். அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு அழுதபடியே போகிறாள். மரியானோவும் செய்வதறியாது விழிக்கிறான்.

போகும் வழி முழுக்க அடோல்ஃபோவும், ஜார்ஜினாவும் சண்டை போடுகின்றனர். அவள் அணிந்திருக்கும் புதிய உடை நாகரிகமாக இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதைக் கழற்றி எறியுமாறு வற்புறுத்துகிறான். அவள் முடியாது என்று மறுக்கிறாள். ஒரு வழியாக கார் ஓரிடத்தில் உணவுக்காக நிற்கிறது. அப்போது அங்கு வரும் மரியானோ ஜார்ஜினாவிடம் கொடுக்குமாறு சொல்லி ஒரு கடிதத்தை டிரைவரிடம்  கொடுக்கிறான். அவன் வாங்கி வைத்துக் கொண்டு அடோல்ஃபோவுக்குத் தெரியாமல் ஜார்ஜினாவிடம் ரகசியமாகக் கொடுக்கிறான். அதைப் படிக்கும் ஜார்ஜினா ஒரு முடிவுக்கு வருகிறாள்.

கடைசியில் அவர்கள் ஹவானாவுக்கு வருகின்றனர். அங்கே இருக்கும் கல்லறை அலுவலகத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கே கிழவரும் வந்து சேர்கிறார். யோயிதாவின் சவப்பெட்டி ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் திறந்து பார்க்கும் கிழவர் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுகிறார். அனைவரும் கிழவரை நோக்கி ஓடி வருகின்றனர்.  மூடி திறந்த நிலையில் இருக்கும் சவப்பெட்டியை எட்டிப்  பார்க்கும் அடோல்ஃபோ திடுக்கிடுகிறான். ஏனெனில், அதில் யோயிதாவின் சடலம் இல்லை. வேறு யாரோ ஒரு ஆப்பிரிக்க மனிதனின் சவம் இருக்கிறது. அதைப் பார்த்துதான் கிழவர் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். யாரும் கவனிக்கவில்லை. யாரும் பார்ப்பதற்குள் சட்டென்று சவப்பெட்டியை மூடிவிடுகிறான் அடோல்ஃபோ. வழி நெடுக சவப்பெட்டிகளை மாற்றி மாற்றிக் கொண்டு வந்ததில் குளறுபடி நேர்ந்துவிட்டது தெரிகிறது. வழியில் எங்கோ பிணம் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. மயங்கி விழுந்த  கிழவரும் சுவாதீனம் வராமல் இறந்து விடுகிறார். பிணம் மாறியதற்கு ஒரே சாட்சி அவர்தான். அவரும் இறந்து விட்டார். தனது புதிய திட்டம் தோல்வி அடைந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் கமுக்கமாக இருந்துவிடுகிறான். பின்பு சவப்பெட்டியை அதற்குரிய காஸ்கட்டில் போட்டு மூடிவிடுகிறான்.

பிணம் மாறிவிட்ட உண்மையை மறைத்துவிட்டு தனது இரங்கல் உரையை நிகழ்த்துகிறான் அடோல்ஃபோ. யோயிதா எவ்வளவு சிறந்த பெண்மணி. அன்பான ஆத்மா. என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறான். பக்கத்திலேயே கிழவரின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. இருவரும் எவ்வளவு சிறந்த காதலர்கள். இறக்கும் போது இப்படி சேர்ந்து விட்டார்களெ என்றெல்லாம் பேசுகிறான். அப்போது மழை பிடித்துக் கொள்கிறது. அடாத மழையிலும் விடாது பேசுகிறான் அடால்ஃபோ.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, ஜார்ஜினா அங்கிருந்து தனியே புறப்பட்டுப் போகிறாள். அடோல்ஃபோவிடமிருந்து விலகும் மனோபாவம் அவளிடம் தெரிகிறது. சற்றுத் தொலைவுக்கு வரும் அவளை நோக்கி ஒரு சைக்கிள் வருகிறது. அதை மரியானோ ஓட்டி வருகிறான். அவளருகே வந்து நிறுத்துகிறான். இருவரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அதில் ஆயிரம் அர்த்தங்கள் தெரிகின்றன. மரியானோ ஜார்ஜினாவை முத்தமிடுகிறான். பின்னர், ஜார்ஜினா சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து கொள்ள மரியானோ ஒட்டிக்கொண்டு போகிறான். இவ்விதமாக இந்தப் படம் முடிகிறது. கியூபாவில் அதிகாரவர்க்கம் கொண்டு வரும் எந்தச் சீர்த்திருத்தமும் நடைமுறையில் வெற்றி அடைவதில்லை என்ற விமர்சனத்தை இந்தப் படம் பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது.

கியூபாவின் மாபெரும் இயக்குநரான தாமஸ் ஏலியா தனது படங்களுக்காக இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இப்படத்தை இயக்கிய போது, படம் முடியும் தருவாயில் மரணமடைந்து விட்டார். எனவே, படத்தின் இணை இயக்குநரான யுவான் கார்லோஸ் டேப்லோ முடித்துத் தந்தார்.  இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவு செய்திருப்பது ஹான்ஸ் பர்மன். அவரது ஒளிப்பதிவு யதார்த்தமான வெளிச்சத்தில் கியூபாவைக் காட்டுகிறது. படம் முழுக்க நகைச்சுவை. கிண்டல் தெறிக்கிறது. தொண்ணூறுகளில் இருந்த கியூபாவின் அரசியல், பொருளாதாரச் சூழல், மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார். ஏலியா. அப்போதிருந்த கியூபாவில் உயிருள்ளவனும் நிம்மதியாக இல்லை; செத்தவனுக்கும் நிம்மதியான சவ அடக்கம் கிடைக்கவில்லை என்ற கடும் விமர்சனத்தை வைக்கும் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. வெனிஸ், சன் டான்ஸ், ஹவானா, ஹுயெல்வா சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றது.

ஒரு சோஷலிஸ தேசத்தை ஒரு சோஷலிஸ்டே இப்படி விமர்சிக்கலாமா என்று எழுந்த கேள்விக்கு, ஏலியா பின்வருமாறு பதில் சொன்னார்: ‘புரட்சி வளர்வதற்கும், நமது தேசம் சுபிட்சம் பெறுவதற்கும், விமர்சனம் கண்டிப்பாக அவசியம்’


நமது யுகத்தில் திரைப்படங்கள் வெறும் கதையையும் கேளிக்கைகளையும் மட்டுமே நம்பி இருக்கலாகாது. கதையை மீறிய சமூக அக்கறை மற்றும் உள்ளொளி பாய்ச்சும் தருணங்களையும் கொண்டதாக அது இருக்க வேண்டும். அதுதான் நமது காலத்தின் தேவை. இந்தப்படம் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. 

• • •

Friday, April 17, 2015

king jong un - N Korea இடதுசாரி மன்னரின் அந்தப்புரம்

king jong un
*
இடதுசாரி மன்னரின்
அ ந் த ப் பு ர ம்
*
எம்.ஜி.சுரேஷ்

ன்னராட்சிக் காலத்தில் பெண்கள் ஆணின் உடைமைகளாக, போகப் பொருள்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். இன்றைய நாகரிக யுகத்திலும் அந்தப்புரங்கள் இருக்கின்றன, அதில் பெண்கள் அலங்காரப் பதுமைகளாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் செய்தியாகும். எகிப்திய அதிபர் கடாஃபி கொல்லப்பட்டபோது,அவரது அரண்மனையிலிருந்து பல அழகான இளம்பெண்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதேபோல், முன்னாள் இத்தாலிய அதிபர் பெர்லுஸ்கோனி பல அழகிகளுடன் தகாத உறவுகள் வைத்திருந்ததால் பெயர் கெட்டுப்போய் மூலையில் உட்கார வைக்கப்பட்டார். இவர்களெல்லாம் முதலாளியவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். ஆனால், கம்யூனிஸ்டுகளின் தலைவர் ஒருவரே அப்படி இருக்கிறார் என்பது அதிர வைக்கும் விஷயமாக்கும்.

வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் யூன் தனக்கென்று ஓர் அந்தப்புரத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது நம்பமுடியாத உண்மையாகும். ஜாங் சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல. பாரம்பரியம் மிக்க கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய அப்பா முன்னாள் கொரியாவின் அதிபர். அவருடைய தாத்தாவும் முன்னாள் அதிபரே. 2010 ஆம் ஆண்டு இவரது தாத்தா காலமானபோது இவர் அதிபரானார். ‘இவர் தனது தாத்தா, அப்பா ஆகியோரைப் போலவே, கருத்தியல், தலைமைப்பண்பு, நற்குணங்கள், மன உறுதி ஆகியவற்றுடன் இருப்பதாக’ இவர் பதவி ஏற்றபோது கொண்டாடப்பட்டார். ஆனால், அந்தப்புரம் அமைக்கும் அளவுக்கு முற்போக்காக இருப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சோவியத் யூனியனில் புரட்சி நடந்து, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த போது அக்கம் பக்கத்திலிருந்த நாடுகளான வியத்நாம், கொரியா போன்ற நாடுகளும் கம்யூனிசத்தின் கைகளில் விழுந்தன. உலகமே கம்யூனிசமயமாகப் போகிறது என்ற எண்ணம் உலகத்தைக் கலக்கியது. கொரியாவின் முதல் அதிபராக கிம் இல் சுங் பதவி ஏற்றபோது உலகம் அவரை ஒரு லெனின் போல் பார்த்தது. கொரியாவை வறுமையிலிருந்து நல்ல நிலைமைக்கு அவர்தான் உயர்த்தினார். 46 ஆண்டுகளவர் வடகொரியாவின் அதிபராக இருந்தார். வெகு காலம் அதிகாரம் ஒருவர் கையில் இருந்தால் அது துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் இருக்கிறது போலும். பொதுவாக ஒரு மனிதன் ஒழுங்காக இருக்க விரும்பினாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று விடுவதில்லை. அதன் விளைவாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

32 வயதான இவருக்கு ஓர் ‘இன்பக்குழு’ தேவையாம். அதற்காக, இளம் பெண்களை நியமிக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறார். ஊரில் உள்ள இளம் அழகிகளின் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். இத்தனைக்கும் இவர் ஏற்கெனெவே திருமணமானவர். ஒரு பாடகியை மணந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகவும் இருக்கிறார். இவர் அப்படிச் செய்வதில் திடுக்கிட ஒன்றும் இல்லை. இவர் தந்தையார் கிம் ஜாங் இல்லும் இப்படிப்பட்டவர்தான். அவர்காலத்தில் அரசு ஊழியர்களின் வேலை, தலைவருக்கு அழகான இளம் பெண்களை வேட்டையாடித் தருவதுதான். பழைய தலைவர் காலமானதும், அவரது ‘இன்பக்குழு’ இழுத்து மூடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இன்பக்குழுவின் சேவை உணரப்பட்டதால், அதற்கான வேலைகள் நடக்கின்றன.

இந்தப் பழக்கம் இவரது தாத்தா கொரிய அதிபராக இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது என்றும் ஒரு கருத்து உலவுகிறது. அவர் காலத்தில் இன்பக்குழுவைத் தேடிப்பிடிக்க ஒரு அலுவலர்குழுவே முழு வீச்சில் இயங்கியதாம். அவர்கள் ஆண்டுக்கு முப்பது, நாற்பது அழகிய பெண்களை அள்ளிக்கொண்டு வருவார்களாம். அவர்களுக்கு நேர்முகத்தேர்வின் மூலம் தகுதிக்கேற்ப பணிப்பெண், பாடகி, நடன மங்கை போன்ற பதவிகள் தரப்படுமாம். அவர்களில் மிக அழகான பெண் தலைவரின் ஆசை நாயகியாக அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ளப்படுவாளாம்.. புதிய பெண்கள் வர வர பழைய பெண்கள் கீழே இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவார்களாம். ஒவ்வொரு பெண்ணுக்கு 4,000 டாலர் சன்மானமும், வீட்டுக்கான பொருட்களும் வழங்கப்படுமாம்.
ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரம் கைக்கு வரும் போது மனிதன் ஒரேமாதிரிதான் நடந்து கொள்கிறான் என்று தெரிகிறது. அதிகாரம் ஓர் இடத்தில் குவியும் போது இது தவிர்க்க முடியாதுதான். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் அதிகார மையம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. சோவியத் உடைந்தது.

நாளைய தினம் வட கொரியாவில் மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தால் கம்யூனிசத்துக்கு எதிரான மக்கள் புரட்சி என்றே அது பார்க்கப்படும். அது கம்யுனிசக் கோட்பாட்டுக்கு நல்லதல்லவே.
எனவே, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு முக்கியமான விஷயம். இது பற்றி கம்யூனிஸ்டுகள் சிந்திக்க வேண்டும்.


Friday, April 10, 2015

ஜெயகாந்தன் 

நினைவுகள்

எம்.ஜி.சுரேஷ்
*

·       
இன்று தலித் இலக்கியம் என்று அறியப்படும் எழுத்துகளை 
அறுபதுகளிலேயே அவரால் எழுத முடிந்திருக்கிறது. 
அவரால் ஏக காலத்தில் தலித் சமூகம் சார்ந்த கதையையும், 
பிராமண சமூகம் சார்ந்த கதையையும் எழுத முடிந்தது 
என்பது குறிப்பிடத்தக்கது.
*


ஜெயகாந்தன் காலமாகிவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்த போது நான் ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டேன். சில வினாடிகளில் மீண்டேன். யோசித்துப் பார்க்கையில், அவருக்கும் எனக்குமான பரிச்சயம் என் மனத்தில் மின் வெட்டாய் ஒடி மறைந்தது.

அவர் மரணம் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. ஏனெனில், அவர் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர். தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சமூகத்தையும் செதுக்க வந்தவர். சமரனில் எழுதினாலும், குமுதத்தில் எழுதினாலும் ஒரே அடர்த்தியிலான கதைகளை எழுதியவர். தமிழ்ச்சூழலில் வெறும் எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். வாழ்நாளில் ஒரு தமிழ் எழுத்தாளன் அடையமுடியாத கௌரவங்களையும் அடைந்தவர். தமிழ்நாட்டைக் கடந்து வெளியேயும் புகழ் பெற்றவர். விருதுகள் அவர் காலடியில் வந்து விழுந்தன. அவர் ஒரு சகாப்தமாக இருந்தவர். இதற்கு மேல் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்? மரணம் என்பது ஒரு உயிரியல் மாற்றம். அது அவர் உடலுக்கு மட்டுமே தவிர, அவரது பிரதிகளுக்கல்லவே?

எழுபதுகளில் படித்து முடித்துவிட்டு, மேற்கொண்டும் படிக்க முடியாமல், வேலைக்கும் போகாமல் திரிந்து கொண்டிருந்த எனக்கு நூலகங்கள்தான் புகலிடங்களாக இருந்தன. எதிர்ப்படும் எந்தக் காகிததையும் கடித்துத் தின்றுவிடும் புத்தகப்பூச்சியைப் போல் நான் இருந்தேன். வெகு ஜன இதழ்கள், சிற்றிதழ்கள், நாளிதழ், வார இதழ் என்று எது கையில் கிடைத்தாலும் நான் விடுவதில்லை. முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை படித்து விடுவேன். பொருளாதாரச் சிக்கல்களில் நசுங்கிக் கொண்டிருந்த எனக்குப் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுதலையைப் பெற இந்தச் செயல்பாடு  உதவியது. எனக்கே தெரியாமல் வாசிப்பு ஒரு தெரபியைப் போல் எனக்குப் பயன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த வாசிப்பின் மூலம் பலவிதமான பிரதிகளை நான் கடந்து செல்ல நேர்ந்தது. பெரும்பாலோரைப் போலவே, நானும், கல்கி, அகிலன், நா.பா., சாண்டில்யன், ராஜேந்திரகுமார் (ராஜேஷ்குமார் அல்ல) ஸ்ரீவேணுகோபாலன், ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் அடர்த்தி குறைவான கதைகளைப் படித்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது.

என்னுடைய மாமா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என்று வாசிப்பவர். அவர் ஜெயகாந்தனின் ரசிகர். அவர் மூலம்தான் எனக்கு மார்க்ஸியமும் அறிமுகமானது. ஜெயகாந்தனும் அறிமுகமானார்.

நான் மாமா வீட்டில் வளர்ந்தேன். மாமா வாரா வாரம் ஜன சக்தி, தாமரையுடன் குமுதம், விகடனும் வாங்குவார். விகடனில் அப்போதெல்லாம் முத்திரைக் கதைகள் வெளிவரும்.  ஜெயகாந்தன் எழுதிய முத்திரைக் கதைகள் அடிக்கடி வரும். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை உரக்க வாசிக்குமாறு மாமா என்னிடம் சொல்லுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். நான் அருகில் தரையில் உட்கார்ந்து உரக்க வாசிப்பேன். வாசித்து முடித்ததும் அந்தக் கதையைப் பற்றி என்னிடம் பேசுவார். இப்படித்தான் ஜெயகாந்தனின் கதைகள் எனக்கு அறிமுகமாயின.

ஒருதடவை ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் ‘இருளில் ஒரு துணை’ என்ற கதை வெளியாகி இருந்தது. கோபுலுவின் கோட்டோவியம். இந்தக் கணத்திலும் விகடனின் அந்தப் பக்கம் என் நினைவில் துலக்கமாக இருக்கிறது. அந்தக் கதையையும் நான் மாமாவுக்காக உரக்க  வாசித்தேன். கதையை வாசித்து முடித்ததும் மாமா சொன்னார். ‘இது தியாகராஜ பாகவதரின் கடைசிக்காலம். அதை வைத்து எழுதி இருக்கிறார்’ இந்த விஷயத்தை இதைவிட யாரும் இவ்வளவு சிறப்பாக எழுதி விட முடியாது. நம்ப ஊரு மாக்ஸிம் கார்க்கி இவர்’ என்றார்.

அதன் பிறகு ஜெயகாந்தன் எழுதும் எழுத்து எந்தப் பத்திரிகையில் வெளி வந்தாலும், அதைத் தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன்.      அதன்பிறகு வேறு யார் கதைகளிலும் எனக்கு ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. பின்பு என் மாமா மூலம் ருஷ்ய இலக்கியம் எனக்குப் பரிச்சயமாயிற்று. மாக்ஸிம் கார்க்கி, செகாவ், கோகோல் தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் என்று எனது வாசிப்பு விஸ்தாரமானது.  அப்போதுதான் ஜெயகாந்தன் உலகத்தரத்தில் எழுதுகிறார் என்று தெரிந்து கொண்டேன். எனக்கும் அதுபோல் கதைகள் எழுதவேண்டும் என்று ஆசை வந்தது. இருந்தாலும் அதற்கான தைரியம் இல்லை.

தீபம், தாமரை போன்ற இதழ்களில் ஓரிரு கவிதைகள் எழுதினேன். அதன் மூலம் ஒரு நண்பர் எனக்குக் கிடைத்தார். அவர் பெயர் இளவேனில். அவர் கார்க்கி என்ற இடது சாரி இலக்கிய இதழ் நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு சிறுகதை கொடுக்குமாறு கேட்டார். நான் திகைத்தேன். நானா… சிறுகதையா, அதெல்லாம் நமக்கு வருமா.. என்று யோசித்தேன். அவர் கொடுத்த தைரியத்தில் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதை இளவேனிலுக்குப் பிடித்தது. அது உடனே வெளி வந்தது.

ஜெயகாந்தன் ஆரம்பத்தில் சமரன், சரஸ்வதி போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளில் கதைகள் எழுதினார்.  அவரது எழுத்துகள் கல்கி, விகடன் போன்ற பத்திரிகைகளின் கதைகளுக்கு மற்றமையாக (other) இருந்தன. பின்னர் அதே மாதிரி கதைகளை விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளிலும் எழுதி அனைவரையும் திடுக்கிட வைத்தார்.  இன்று தலித் இலக்கியம் என்று அறியப்படும் எழுத்துகளை அறுபதுகளிலேயே அவரால் எழுத முடிந்திருக்கிறது. அவரால் ஏக காலத்தில் தலித் சமூகம் சார்ந்த கதையையும், பிராமண சமூகம் சார்ந்த கதையையும் எழுத முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது. அதுவும் நிறைவேறியது.

இளவேனிலுக்கு ஜெயகாந்தனுடன் பரிச்சயம் உண்டு. அவர் மூலம் எனக்கு ஜெயகாந்தனின் பரிச்சயம் கிடைத்தது. ரஜினி ரசிகனுக்கு ரஜினியின் நேர்ப்பழக்கம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பிறகு அவரை அடிக்கடி நான் போய்ப்பார்க்க ஆரம்பித்தேன். என்னைத் தனியாக ‘சுரேஷ்’ என்று அழைத்துப் பேசும் அளவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்தும் கொண்டேன். அப்போது சென்னை, எல்டாம்ஸ் ரோடு முடியும் இடத்தில், சற்றுத் தள்ளி வலது புறம் இருந்த ஒரு வீட்டின் மாடியில் அவரது அலுவலகம் இருந்தது. அங்கு நான் தினமும் போய்விடுவேன். ம.வே.சிவகுமார், விமலாதித்த மாமல்லன், சி.ஏ.பாலன், எடிட்டர் லெனின், இயக்குநர் கே.விஜயன் என்று பலர் அங்கு வருவார்கள்.

எழுபதுகளில் சிறுபத்திரிகைகள் மூலம் சுந்தரராமசாமி, சா. கந்தசாமி, நகுலன், பிரமிள் போன்ற தீவிர இலக்கியவாதிகள் பலருடைய பிரதிகளையும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். க.நா.சு வின் எழுத்துகளின் பரிச்சயமும், அவரது நேர்ப்பழக்கமும் ஏற்பட்டன. ஜெயகாந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார் அவரைத் தீவிர இலக்கியவாதிகளுடன் சேர்க்க முடியாது என்றெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை. எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் ஜெயகாந்தன் ஜெயகாந்தன்தான் என்றே எனக்குத் தோன்றும். அவரது கதைகள் வெகுஜனப் பத்திரிகைகளுக்குத் தீனி போடுவதற்காக எழுதப் பட்டவை அல்ல. மாறாக, வெகுஜனப் பத்திரிகைகளின் தரத்தை உயர்த்திய கதைகள்.

அதன் பிறகு எனக்கு உலக இலக்கியம், பின் நவீனத்துவம் போன்ற பல விஷயங்கள் பரிச்சயமாயின. அவை என்னை மலைக்க வைத்தன. அப்போதும் கூட ஜெயகாந்தனின் மீதான எனது வியப்பு குறையவே இல்லை. அதுதான் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரின் ஆளுமை என்று எனக்குப்படுகிறது. இந்த ஆளுமை தனித்துவமானது. ஓரிரு வருஷங்கள் எழுதாமல் இருந்தாலே, ஒரு எழுத்தாளனை மறந்துவிடும் சமூகம் நம் தமிழ்ச் சமூகம். ஜெயகாந்தன் கிட்டத்தட்ட 40 வருஷங்கள் எழுதாமலேயே இருந்திருக்கிறார். இருந்தும் அவருக்கான புகழோ, பெருமையோ சற்றும் குறைந்துவிடவில்லை என்பது முக்கியமானது. மறுவாசிப்பில் புதுமைப்பித்தனையும், சுந்தரராமசாமியையும் குற்றம் சொல்பவர்கள் கூட ஜெயகாந்தன் மேல் குறைகள் எதும் சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது அரசியல் கொள்கைகள், சார்ந்து நின்ற கருத்தியல்கள் யாவும் சர்ச்சைக்குரியனவாக இருந்த போதிலும், அவரது கலை ஆளுமை எப்போதும் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது. அவரது எதிரிகள் கூட அவரை ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

ஜெயகாந்தன் திமிர் பிடித்தவர் என்றும், யாரையும் மதிக்காதவர் என்றும் அவருக்கு ஒரு படிமம் உண்டு. ஆனால், பழகுவதற்கு இனிய நண்பர் என்பதை அவரை நன்கறிந்த பலரும் அறிவார்கள். அவர் மனம் நுட்பமானது. எளிதில் எரிச்சலடைந்து விடுவார். பார்ப்பதற்கு அது கர்வம் போல் தோன்றும்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு சாகித்ய அகடமி பரிசு கிடைத்த போது அதைக் கிண்டல் செய்து ‘பிரம்ம தரிசனம்’ என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதினேன். ஜெயகாந்தன் கோப்படுவார் என்றே நினைத்தேன். பயந்து அவரைப் பார்க்காமல் இருந்தேன். நண்பர்களிடம் சொல்லி என்னை வரச்சொல்லி அனுப்பினார். அதை அவர் சகஜமாக எடுத்துக் கொண்டார். ‘நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர். இந்த மாதிரியெல்லாம் எழுதி உங்கள் திறமையை வீணாக்க வேண்டாமே’ என்று சிரித்துக் கொண்டே அன்புடன் சொன்னார்.

என்னுடைய கான்க்ரீட்வனம் என்ற நாவலுக்கு முன்னுரை எழுதினார். அதில் என்னை புதுமைப்பித்தனுடன் ஒப்பிட்டு எழுதி இருந்தார். என்னுடைய அட்லாண்டிஸ் மனிதன் என்ற நாவலை வெளியிட்டு என்னைப் புகழ்ந்து பேசினார். இதெல்லாம் அவர் எனக்குத் தந்த கௌரவங்கள்.

மௌனி எழுதிய ‘மாறுதல்’ என்ற கதை அவருக்குப் பிடிக்கும். மரணம் என்பது மாறுதல் என்ற கோணத்தில் மௌனி அந்தக் கதையை எழுதியிருப்பார். தான் விரும்பிய சிறுகதை கூறுவது போலவே, ஜெயகாந்தன் மரணம் என்ற மாறுதலை எய்திவிட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பொருள் ஸ்தூலமாக இருக்கிறது. அப்போது அது சொரூபம். பின்பு, ஸ்தூலத்தன்மையை இழக்கிறது. அப்போது அது அரூபம். சொரூபமாக இருந்த ஜெயகாந்தன் அரூபமாகிவிட்டார். இருத்தல் என்பது சொரூபமாக இருப்பது மட்டுமல்ல. அரூபமாக இருப்பதும் கூட. சாதாரண மனிதர்கள் சொரூபமாக இருக்கும்போது தெரிவார்கள். அரூபமானதும் காணாமல் போய்விடுவார்கள். அரூபமான பின்பும் இருப்பவர்கள் வெகுசிலரே. கம்பன். சேக்ஸ்பியர், செகாவ் ஆகியோரைத் தொடர்ந்து ஜெயகாந்தனும், தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து அரூபமாக  இருந்து கொண்டிருப்பார். அது போதும் என்று தோன்றுகிறது.

                     <><><><><>

Friday, April 3, 2015

Korean Cunema - Director Kim Ki Duk





ஒரு படகுப் பயணம்

எம்.ஜி.சுரேஷ்

* * *
யணங்கள் உயிருள்ள மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. திரைப்படக் கதாப்பாத்திரங்களுக்கும் உரியவையே. மனிதர்கள் பயணம் செய்வதைப்போல் அவர்களின் நிழல் உருவங்களும் பயணம் செய்கின்றன என்பது சுவாரஸ்யமானது. மக்கன்னாஸ் கோல்ட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முதல் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை கதாநாயகன், கதாநாயகி, வில்லன் என்று எல்லாக் கதாபாத்திரங்களும் குதிரைகளில் ஏறிப் பயணம் செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ‘பேக் டு தி பியூச்சர்’ என்ற படத்தில் வரும் கதாநாயகனும் அவனது குருவும் கால யந்திரத்தில் ஏறி இறந்த காலம், எதிர்காலம் என்று எல்லாக்காலங்களுக்கும் மாறி மாறிப் பயணம் செய்தார்கள். இன்னும் பல படங்களில் பயணங்கள் பலவிதத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

     நவீன கொரியத் திரைப்படத்தின் முகத்தை மாற்றியவர்களில் ஒருவர் கிம் கி டுக். தீவு (the isle), கனவு (Dream), த்ரீ அயர்ன் (3 iron), பைட்டா (Pieta) போன்ற நூதனமான, திகைக்க வைக்கும் படங்களை இயக்கியவர் அவர். ஏககாலத்தில் இரண்டு சிறந்த இயக்குநருக்கான விருதுகளைப் பெற்றவரும் கூட. அவர் ஒரு படம் எடுத்தார். அதில் மூன்றே கதாபாத்திரங்கள். ஒன்று, அறுபது வயதான ஒரு கிழவர். இரண்டு. பதினாறு வயதான இளம்பெண். மூன்று, ஒரு படகு. இந்த மூன்றே கதாபாத்திரங்களை வைத்து ஒரு  அற்புதமான படத்தை கிம் கி டுக் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். இது ஒரு பயணம். படகுப் பயணம். கிழவரும், இளம் பெண்ணும் சேர்ந்து பயணிக்கும் பயணம். இந்தப் பயணம் அவர்கள் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பயணத்துக்கு ஒரு குறியீடாக இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் வில் (the bow).

     எப்போதும் சிடுசிடுக்கும் கிழவர். சதா புன்னகையை அணிந்து வலம் வரும் இளம் பெண். இவர்கள் இருவரையும் சுமக்கும் படகு. அந்தப் படகு நாற்பது அடி நீளம் கொண்டது. ஒற்றை அறை வசிப்பிடம் போல் படுக்க, சமைக்க, பொருட்களைச் சேமித்து வைக்கக் கூடிய அளவுக்கு இடம் கொண்டது.  அந்தக் கிழவர் வில் வித்தையில் தேர்ந்தவர். குறி தவறாமல் அம்பு ;எய்வதில் வல்லவர். அந்தப் பெண் கிழவருக்கு உதவியாக இருக்கிறாள். அந்தக் கிழவரிடம் வில்லைப் பயன்படுத்துவது தவிர, இன்னொரு திறமையும் இருக்கிறது. அது குறி சொல்வது. அவரிடம் குறி கேட்பதற்காகப் பலர் வருவதுண்டு. அவர் சொல்வது பெரும்பாலும் பலிப்பதால் அவரை பலர் மதிக்கிறார்கள். தவிரவும், கிழவருக்கு வேண்டிய பொருட்களை விற்பதற்கும் வணிகர்கள் வருவதுண்டு. இவரைப் பார்க்க வரும் மனிதர்கள் அந்தப் பெண்ணையும், கிழவரையும் வைத்து விவாதிப்பார்கள்.

     ’அந்தப் பெண் யாரோ. கிழவன் அவளைக் கடத்திக் கொண்டு வந்துவிட்டான்’

     ’ஆறு வயதாக இருக்கும் போதே அவளின் பெற்றோரிடமிருந்து அவளைக் கொண்டு வந்து விட்டான். அவளது பெற்றோர் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்’

     ’ஒருவேளை அவள் அவனது மகளாக இருப்பாளோ?’

     என்றெல்லாம் வதந்திகள் கால் முளைத்து நடமாடும்.

     கிழவரின் மனத்தில் இருப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

     படம் ஆரம்பித்ததும் வரும் முதல் ஷாட். ஒரு வண்ண ஓவியம் காட்டப்படுகிறது. கொரியத் தொன்மம் சார்ந்த ஓவியம். அந்த ஓவியம் ஒரு மரச்சுவரில் வரையப்பட்டிருப்பது தெரிகிறது. அப்போது க்ளோஸ்-அப்பில் ஒரு கை ஃபிரேமினுள் எட்டிப்பார்க்கிறது. அந்தக் கையில் ஒரு வில்லின் நுனி இருக்கிறது. அந்தக் கை வில்லில் நாணைப் பூட்டுகிறது. பின்பு நாணை ஏற்றிக் குறி பார்க்கிறது. தொடர்ந்து ஒரு கிழவரின் முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது. பின்பு அந்தக் கிழவர் அந்த வில்லில் ஒரு சிறு தோல் கருவியை மாட்டுகிறார். ஏக காலத்தில் வில்லாகவும், வாத்தியமாகவும் இயங்கும் ஒரு கருவி அது என்பது பார்வையாளனுக்குப் புரிந்து விடுகிறது. கிழவர் இப்போது அந்தக் கருவியை ஓர் இசைக்கருவியாகப் பயன்படுத்துகிறார். அவர் இசைக்க அந்த இசையின் பின்னணியில் ஓர் அழகான இளம்பெண்ணின் முகம் காட்டப்படுகிறது. புன்னகை தவழும் முகம். ஒரு தேவதையைப் போன்ற வசீகரம். அந்தப் பெண் தன் கண்களுக்கருகே மூன்று வண்ணப்புள்ளிகளை இட்டுக் கொள்கிறாள். மாசு மருவற்ற தனது முகத்தின் வாயிலாக ஒரு புன்னகையை வெளியிடுகிறாள்.

     அந்தப் படகின் பக்கவாட்டில் ஒரு நீண்ட கயிறுகளால் பிணிக்கப்பட்ட ஓர் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. அதில் உட்கார்ந்து ஆடினால் கால்கள் தண்ணீரில் படும். கால்களை அதில் அளைந்தவாறே ஊஞ்சலாடுவது அவளுக்குப் பிடிக்கும்.

     அவ்வப்போது அந்தப் படகை நோக்கிப் பல படகுகள் வரும். அவற்றில் யாராவது அந்நியர்கள் வந்து போவார்கள். கிழவரிடம் குறி கேட்பதற்காகவோ அல்லது அரிசி, பருப்பை விற்கவோ அவர்கள் வருவார்கள். அவர்கள் இந்தப்பெண்ணைச் சீண்டி கேலி பேசுவார்கள். கிழவருக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை. அவர்கள் அருகே அம்பு எய்து எச்சரிப்பார். அவர்கள் பயந்து அடங்கிப் போவார்கள்.

     இப்படியே காலம் போய்க்கொண்டிருக்கிறது.

     ஒரு நாள் சிலர் கிழவரைத் தேடி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணிடம் சீண்டி விளையாடுகிறான். கிழவர் அம்பு எய்து அச்சுறுத்துகிறார். அப்போதுதான் அவர்கள் பேச்சில் கிழவர் இந்தப்பெண்ணை அவளது 17ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ளப்போகும் செய்தி பற்றிப் பேசுகிறார்கள். அவர்களில் ஒருவன் கிழவரிடம் குறி கேட்கிறான்.

     கிழவர் குறி சொல்லும் விதம் அபாயகரமானது.

     முதலில் அந்தப் பெண் படகின் பக்கவாட்டில் தொங்கும் ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து ஆட ஆரம்பிப்பாள். அவள் முன்னும் பின்னும் போய் போய் வருவாள். படகின் பக்கவாட்டுப் பகுதி பின்னணியாகத் தெரியும். அந்தப் பின்னணியில் ஒரு பெரிய புத்தரின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். கிழவர் அவளுக்கு எதிரே போய் வேறொர் படகின் மேல் ஏறி நிற்பார். அங்கிருந்து தனது வில்லிலிருந்து அம்புகள் எய்வார். அந்த அம்புகள் அந்தப் படத்தின் எந்தஎந்தப் பகுதிகளில் பாய்ந்திருக்கிறதோ அதையொட்டி குறி சொல்லுவார்.

     கிழவர் தினமும் அந்தப் பெண்ணை இரவில் குளிப்பாட்டுவார். பின்னர் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு காலண்டரில் ஒரு நாள் கழிந்ததற்கு அடையாளமாக அந்தத் தேதிக்குப் பெருக்கல் குறியிடுவார்.

     ஒரு நாள் கிழவர் மணப்பெண்ணுக்கான காலணி ஒன்றை வாங்கி வந்து அலமாரியில் வைத்துப் பூட்டுகிறார். அவர் முகம் மகிழ்ச்சியில் ஆழ்கிறது.

     ஒரு சமயம் ஒரு படகு வருகிறது. அதில் வரும் இரு அயோக்கியர்கள் கிழவரைக் கட்டிப்போட்டுவிட்டு, அந்தப் பெண்ணைக் கெடுக்கத் திட்டமிடுகிறார்கள். அந்தப் பெண் புத்திசாலித்தனமாக அவர்களிடமிருந்து தப்பி அவர்களை அம்புகள் எய்து காயப்படுத்தி விடுகிறாள். தன்னையும் கிழவரையும் காப்பாற்றுகிறாள்.

     ஒரு நாள் ஒரு படகு வருகிறது. அதில் சிலர் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அழகான இளைஞன். அவன் பால் இவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவனையே ஆசையாகப் பார்க்கிறாள். இதை கிழவர் கவனிக்கிறார். அவருக்கு இது எரிச்சலூட்டுகிறது.

     அந்த இளைஞன் ஒரு வாக்-மேன் வைத்திருக்கிறான். அதை அவள் காதில் வைத்துப் பாட்டுக் கேட்குமாறு செய்கிறான். கிழவர் அந்த வாக்-மேனைப் பிடுங்கி எறிகிறார். அவள் கோபம் கொள்கிறாள். அந்த இளைஞனுக்கும் அவளுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. கிழவரை விட்டு விட்டு அவனுடேயே ஓடிபோக அவள் தயாராகிறாள். உடனே கிழவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். உடனே மனம் மாறி அந்தப் பெண் கிழவரிடமே திரும்பி வந்து அவரையே திருமணம் செய்து கொள்கிறாள். அந்த இளைஞன் விரக்தி அடைந்து அவளை விட்டுவிட்டு தன் படகில் போகிறான். அந்தக் கிழவரோ கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான். படகில் அவள் மட்டும் தனியெ இருக்க, படகு மூழ்குகிறது. அந்த இளைஞன் இதைக் கவனியாமல் போய் விடுகிறான். அவள் அவன் போன திசையிலேயே கையசைத்தபடியே படகோடு சேர்ந்து கடலில் மூழ்கி விடுகிறாள்.

     இவ்விதம் இந்தப் படம் முடிகிறது.

     கிம் கி டுக்கின் படங்கள் குறைவாகப் பேசுவது வழக்கம். வழக்கம் போலவே இந்தப் படத்திலும் கதாபாத்திரங்கள் குறைந்த அளவு வசனங்களே பேசுகின்றன. கிழவராக வரும் சியாங் ஹ்வாங் ஜியோன் மிக அழகாக நடித்திருக்கிறார். சின்னப் பெண்ணாக வரும் யியோ ரியும் ஹான் கண்கொள்ளா அழகி. அவள் சிரிக்கும் போது அவள் உதடுகள் மட்டுமல்ல, கண்களும் சேர்ந்து சிரிக்கின்றன.

     இந்தப் படத்தைப் பற்றி விமர்சகர்கள் பேசும் போது இதை பௌத்தத்துடன் இணைத்துப் பேசுகிறார்கள். வில் தியானம் செய்வதற்கான குறியீடு. கிழவர் ஆன்மா. பெண் பர்ம்பொருள். இரண்டும் இணையத் துடிக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு இது வேறு மாதிரி தோன்றுகிறது.

     1962 ஆம் ஆண்டு ரோமன் போலான்ஸ்கி ஒரு படம் எடுத்தார். அதன் பெயர் நைஃப் இன் தி வாட்டர். அதுவும் இதே போல் பயணம் சார்ந்த படமே. அதிலும் ஒரு படகு வரும். அதிலும் ஒரு வயதான மனிதரும் அவரது இளம் மனைவியும் வருவார்கள். அதிலும் ஒரு இளைஞன் வருவான். அந்தப் படத்தில் அந்த இளம்பெண் அந்த இளைஞனுடன் உடலுறவு கொள்வாள். இந்தப் படத்தில் இந்தப் பெண் தன் கணவனுடன் சேர்ந்து சாகிறாள். போலான்ஸ்கியின் படம் மேற்கத்தியப் பெண்ணின் மனநிலையைக் காட்டுகிறது. இந்தப் படம் கிழக்கத்திய மனநிலையைக் காட்டுகிறது. அந்தப் படத்துக்கான கீழை நாட்டு எதிர்வினைதான் இந்தப் படமோ என்று சொல்லத்தோன்றுகிறது.

                         #########