Thursday, May 7, 2015

எம் ஜி சுரேஷுடன் நேர்காணல் - மனோமோகன்

ஒரு தொலைக்காட்சிப் 
பெட்டியைப் போல் 
இயங்கினேன்

எம்.ஜி.சுரேஷுடன் ஒரு நேர்காணல்
மனோமோகன்

உங்கள் எழுத்து வாழ்க்கையில் ஏறத்தாழ நாற்பது வருடங்களையும் மார்க்ஸியம், இருத்தலியம், பின் நவீனத்துவம் என்பதாகப் பல்வேறு சித்தாந்தங்களையும் கடந்துவந்திருக்கிறீர்கள். Post - Post Modernism குறித்த கட்டுரைகளையும்கூடச் சமீப காலத்தில் எழுதியுள்ளீர்கள். உங்கள் எழுத்து வாழ்க்கை மார்க்ஸிய வாசிப்பிலிருந்தே தொடங்கியதாகப் பதிவு செய்துள்ளீர்கள். இந்த நாற்பது வருடங்களுக்குப் பிறகு மார்க்ஸியம் குறித்த உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

எதுவுமே நிலையானதாக இல்லை.எல்லாமே இயக்கத்தில் இருக்கின்றன. என்றார் ஹெகல். மாறாதது என்று எதுவும் இல்லை என்றார் புத்தர். எல்லாமே உருவாக்கத்தில் (becoming) இருக்கின்றன என்பது தெலூசிய கோட்பாடு. எனது நாற்பதாண்டுகால வாழ்க்கை இதைத்தான் எனக்குப் போதிக்கிறது என்று நம்புகிறேன்.

எழுபதுகளில் மார்க்ஸீயம் என்னை வசீகரித்தது. மனிதனை அவனது விலங்குகளிலிருந்து விடுவிக்க வந்த மாபெரும் தத்துவம் அது என்று நம்பினேன். மார்க்ஸீயத்தின் பெயரால் சோவியத் யூனியனில் நிகழ்ந்த விபரீதங்கள்  என்னை வியப்பிலாழ்த்தின. அப்போது என் விரலைப் பிடித்து வழி நடத்த ஒருவர் வந்தார். அவர் பெயர் சார்த்தர். ‘எந்த ஒரு கோடபாடும் அடிப்படையில் உன்னதமாகத்தான் இருக்கிறது. அது நிறுவனமயமாகும்போது மாசு அடைந்து விடுகிறது’ என்றார் அவர். ’மனிதன் சுதந்திரமாக இருக்கும்படி சபிக்கப்பட்டவன். அவன் வாழ்க்கைக்கு அர்த்தங்கள் ஏதும் இல்லை. தனது வாழ்க்கைக்கான அர்த்தத்தை அவன் கற்பித்துக் கொள்ள வேண்டும்’ என்றார் அவர். அவர் விரலைப் பிடித்துக் கொண்டு சில வருஷங்கள் நடந்தேன்.மார்க்ஸீயத்திலிருந்து இருத்தலியவாதியாக உருவாக்கம்(Become) அடைந்தேன். இருத்தலியம் ஒரு பேரலையாக மாறி உலகையே புரட்டிப் போட்டபோது நானும் அந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டேன். பின் நவீனவாதிகளால் சார்த்தர் கொட்டிக் கவிழ்க்கப்பட்டபோது நான் பின் நவீனவாதிகளின் கை பற்றி நடந்தேன். இருத்தலியல்வாதியிலிருந்து பின் நவீனவாதி எனும் ’உருவாக்க’த்துக்கு ஆளானேன். எனவே நான் கடந்து வந்திருக்கிறேன் என்பதை விட உருவாக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்டாலின் காலத்தில் மார்க்ஸீயம் ஒரு ஆக்டோபஸைப்போல் உலகையை தனது கரங்களால் வளைத்துப் பற்றி இருந்தது. கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில் முதலாளியம் தன்னை சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொண்டு வளர்ந்து உச்சமடைந்து கொண்டு இருக்கிறது. மார்க்ஸீயம் இத்தனை ஆண்டுக்காலத்தில் கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றபடி தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. பைபிளில் வரும் அரக்கன் கோலியாத்தை டேவிட் என்கிற சின்னஞ்சிறுவன் ஒரு கவண் க்ல்லை எறிந்து கொன்று விடுவான். இன்றைக்கு முதலாளியம் கோலியாத்தைப் போல் விசுவரூபம் எடுத்து நிற்கிறது. எதிரில் மார்க்ஸீயம் சிறுவன் டேவிட் போல் குறுகி நிற்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த டேவிட்டின் கையில் கவண் கல்லும் இல்லை. இதுதான் இன்றைய மார்க்ஸீயத்தின் நிலை. டேவிட்டின் கையில் கவண் கல் கிடைக்க வேண்டுமே என்கிற பதற்றம் என்னுடைய நிலைப்பாடு எனலாம்

உங்கள் எழுத்தில் மதம், இனம், மொழி மற்றும் கலாச்சாரம் சார் கூறுகள் பலவற்றின் மீதுமான அரசியல் நையாண்டிகளை நிகழ்த்திக் கொண்டு வந்துள்ளீர்கள். இந்திய தேசக் கட்டமைப்பின் மீதான அவ நம்பிக்கையையும் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளீர்கள். இப்போது உங்கள் எழுத்தின் முதன்மையான அரசியல் செயல்பாடு என்பதாக எதைப் பிரதிநிதித்துவப் படுத்த விரும்புகிறீர்கள்?

எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு என்பதை நான் அறிவேன். அதிகாரம் தனது அரசியலை பிரதியாகக் கட்டமைக்கிறது. கட்டவிழ்ப்பு என்கிற அரசியல் செயல்பாட்டினால் அதை ஒரு பின் நவீனவாதி எதிர்கொள்கிறான் என்பதையும் நான் அறிவேன். இந்த சந்தர்ப்பத்தில் எனது எழுத்தின் மொத்த அரசியல் செயல்பாடுமே அதிகாரத்தின் அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல் செயல்பாடாகத்தான் இருக்கும். அதைத்தான் நான் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன்.

உங்கள் வாழ்க்கைச் சூழல் எந்தெந்த விதங்களில் உங்கள் எழுத்துக்களைப் பாதிப்பதாகக் கருதுகிறீர்கள்? உங்கள் பணி முதலான வாழ்வியல் கூறுகள் உங்கள் கதைகளில் எத்தனை சதவிகிதம் ஊடாடுகின்றன?

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுமே தங்கள் வாழ்க்கைச் சூழல் மற்றும் பணிச்சூழல் ஆகியவற்றை முன் வைத்தே எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். தனது ஐரிஷ் வாழ்வியல் கூறுகளை வைத்து ஜேம்ஸ் ஜாய்ஸ் ‘டப்ளினர்ஸ்’ சிறுகதைகளை எழுதினார். புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் பிள்ளைமார் சமூகப் பின்னணி கொண்ட கதைகள். மௌனியின் கதைகள் அக்கிரஹாரப் பிராம்மண சமூக வாழ்வியல் கூறுகள் கொண்டவை. ப. சிங்காரத்தின் கதைகள் அவ்ரது புலம்பெயர்ந்த வாழ்க்கைச் சூழல், பணி ஆகியவற்றின் அடிப்படை கொண்ட்து.  இது போலவே என் கதைகளும் என் வாழ்க்கைச்சூழலின் பாதிப்பில் உருவானவை எனலாம்.

நான் படித்துவிட்டு வேலை இல்லாமல் திரிந்த காலங்களில் என்னுடைய அப்போதைய வாழ்க்கைச்சூழலின் அடிப்படையில் உருவானவையே ‘இரண்டாவது உலகைத் தேடி’,’கண்ணாடிச்சிற்பங்கள்’ போன்ற கதைகள். பின்னர் வேலை கிடைத்தபின்னர், அலுவலகப் பின்புலத்தில், ‘கடிகார மனிதர்கள்’, ’ங’ போன்ற கதைகள் உருவாயின. பின்பு நான் அடுக்ககக் குடியிருப்பில் குடியேறிய போது அந்தக் குடியிருப்புவாசிகளின் மனநிலையை ‘சேம் சைட் கோல்’ என்ற கதையில் விவரித்திருந்தேன்.

நான் பொது சுகாதாரத் துறையில் தணிக்கையாளனாகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவங்களின் அடிப்படையில் ‘அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்’ நாவலை எழுதினேன். கிட்டத்தட்ட என்னுடைய சுயவாழ்க்கைச் சரிதம் போலவே 37 நாவலை எழுதினேன். சுயசரிதப் புனைவு(Bio-fiction)  என்றே சொல்லக்கூடிய அளவுக்கு அதில் என் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் இருக்கின்றன. அதே சமயம் அதில் வரும் கா என்ற கதாபாத்திரத்தின் கதை வேறு என்பதால் 37 நாவல் தனது  சுயசரிதப் புனைவுத் தன்மையை இழக்கிறது.

எனவே எனது கதைகளில் எனது வாழ்க்கைச் சூழலும், பணி முதலான வாழ்வியல் கூறுகளும் கிட்ட்த்தட்ட ஐம்பது சதவீதம் ஊடாடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. 

1999 - ஆம் ஆண்டு உங்கள் அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் நாவல் வெளிவந்தது. நீங்கள் பின் நவீனத்துவம் சார்ந்து இயங்க ஆரம்பித்த காலமாக அந்த நாவல் உருவான காலத்தைக் குறிப்பிட இயலும். பின் நவீனத்துவத்தை உங்கள் எழுத்திற்குகந்த கருத்தாக்கமாக நீங்கள் கண்டடைந்ததின் பின்னணி என்ன?

எனக்குப் பொதுவாகவே இலக்கியம் மட்டுமல்லாமல் தத்துவம், வரலாறு, கலை இலக்கியக் கோட்பாடுகள் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகம். கம்பன், காளிதாசன், ஷேக்ஸ்பியர், ஜேம்ஸ் ஜாய்ஸ், தாஸ்தாவ்ஸ்கி ஆகியோரை விரும்பிப் படிக்கும் போதே, பெர்ட்ரண்ட் ரசல், பௌத்தம், இந்தியத் தத்துவ நூல்கள் போன்றவற்றையும் ஈடுபாட்டுடன் படிப்பேன். கோட்பாட்டுகளான ‘இசங்கள்’ பற்றியும் படிப்பதில் ஆர்வம் காட்டுவேன். எனவே என்னையும் அறியாமல் நான் ரியலிசம், நேச்சுரலிசம்,சர்ரியலிசம். சொஷியலிச ரியலிசம் போன்ற இசங்களைப் பற்றிப் படிக்கலானேன். தொடர்ந்து வந்த இருத்தலியம் உறுதியாகக் கால் பரப்பி நின்றது. நானும் ரியலிசம், இருத்தலியம் என்று எனது அடுத்தடுத்த நகர்வுகளில் இருந்தேன்.

தொண்ணூறுகளில் தமிழவன், நாகார்ஜுனன், நோயல் ஜோசப் இருதயராஜ், க. பூரணசந்திரன், அ மார்க்ஸ் ஆகியோர் மூலம் பின் நவீனத்துவம் எனக்கு அறிமுகமானது. இவர்கள் பின் நவீனம் சார்ந்த கட்டுரைகள் எழுதியவர்கள். பின்னர் கதை எழுதுபவர்கள் வந்தார்கள். சில்வியா, ரமேஷ்-பிரேம், சாரு நிவேதிதா, தி.கண்ணன் போன்றவர்கள் பின் நவீன கதைகள் எழுதினார்கள். இவர்கள் மூலம்தான் எனக்கு பின் நவீனத்துவம் அறிமுகமானது. சதுரம், கல்குதிரை, மையம், வித்தியாசம், சிதைவு, நிறப்பிரிகை போன்ற சிறு பத்திரிகைகள் மூலம் பின் நவீனம் சார்ந்த ஒரு உரையாடலை கவனிக்கலானேன்.
தொண்ணூறுகளின் இறுதியில்தான் என் மேல் எனக்கே தெரியாமல்  பின் நவீனத்துவத்தின் பாதிப்பு  வந்திருந்த விஷயம் தெரிந்தது. அது என்னுடைய  அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் நாவலை எழுதிய போதுதான் எனக்கே தெரிந்தது.  அந்த நாவலை ஒரு பின் நவீன நாவல் என்று நான் அடையாளப்படுத்தவில்லை. ஆனால், ப்டித்துப்பார்த்த பலராலும் அது அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டது. ’தமிழின் மிகச்சிறந்த பின் நவீன நாவலான இது – இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று’ என்று ரமேஷ் பிரேதன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிபிட்டிருந்தார். அந்த நாவல் பெரிய வெற்றி பெற்றது. அது வரை நேரில் நான் பார்த்திராத பலரும் எனக்கு நேரில் பழக்கமானார்கள். அவர்களில் ரமேஷ்-பிரேம் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் இல்லை என்றால் எனது எழுத்து உரிய கவனம் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. பின் நவீனத்துவம் சார்ந்த பல நூல்களை அவர்கள்தான் எனக்கு அறிமுகம் செய்தார்கள். இவர்களைத் தவிர ஆல்பர்ட், நோயல், அ.மார்க்ஸ் ஆகியோரும் என் எழுத்தைப் பாராட்டினார்கள். இன்னொரு தளத்தில் கோவை ஞானி, எஸ்.என். நாகராஜன் ஆகியோரும் இந்த நாவலைப் பாராட்டினார்கள். இந்த இரண்டு குழுக்களோடு சேராத சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்றோரும் பாராட்டினார்கள். எனவே, நான் தொடர்ந்து பின் நவீனத்துவத்தை எனது எழுத்தின் கருத்தாக்கமாகக் கண்டடைய நேர்ந்தது. தவிரவும், பின் நவீனம் சார்ந்த எழுத்தை எழுதுவதன் மூலம் எனது காலத்தின் தேவையை நான் பூர்த்தி செய்வதாகவும் நான் உணர்ந்தேன்.

நீங்கள் உங்கள் நாவல்களைப் பின் நவீனத்துவப் பிரதிகள் என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் பின் நவீனத்துவம் பிரதியின் பொருள் வாசகரோடு தொடர்புடையது என்கிறது. அப்படியாயின் பின் நவீனத்துவப் பிரதி என்று சொல்வதையே கூட ஒரு வாசகன் தட்டையான பிரதியாக வாசிக்க முடியும் என்றாகிறது. அதே சமயம் யதார்த்தத் தன்மை கொண்ட பிரதியை ஒரு வாசகன் பின் நவீனத்துவப் பிரதியாகவும் வாசிக்க சாத்தியமிருக்கிறது. ஒரு பிரதி எல்லா இட, கால, சூழ்நிலையிலும் பின் நவீனத்துவப் பிரதியாக இயங்கும் சாத்தியமில்லை என்பதுதானே இதற்கு அர்த்தமாகிறது! அப்படியிருக்க ஒரு பிரதிக்குப் பின் நவீனத்துவப் பிரதி என்கிற அடையாளம் சரியானதுதானா? (உங்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் உலகம் முழுக்க இப்படி அடையாளப் படுத்துகிற ஒவ்வொருவருக்குமான கேள்வியாக இதை நீட்டித்துக் கொள்ளலாம்.) 

என் நாவல்களை  பின் நவீனத்துவப் பிரதிகள் என்று நான்  குறிப்பிட்டதாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு வேளை நான் அப்ப்டிக் குறிப்பிட்டிருந்தால் அது கவனக் குறைவினால் நேர்ந்ததாக இருக்கும். ஒரு பிரதியை பின் நவீனத்துவப் பிரதி என்று யார் சொன்னாலும் அது பிழையே. நான் அவற்றை பின் நவீன பிரதிகள் என்றுதான் குறிப்பிடுவேன். நவீனம்(modern) என்பது வேறு. நவீனத்துவம்(modernismmomodernism) என்பது வேறு.நவீன தன்மை (modernity) என்பது வேறு.  ’நவீன’ என்பது தற்கால என்ற பொருளில் பயன் படுகிறது. தற்கால கலை, தற்கால இசை அல்லது நவீன கலை, நவீன இசை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நவீனத்துவம் என்பது வேறு. அது இருபதாம் நூற்றாண்டில் மத்தியில் நிலவிய கலை இலக்கியப் போக்கினைக் குறிக்கும் தத்துவம் சார்ந்தது. மரபிலிருந்து பிய்த்துக் கொண்டு நவீனத்துவம் குதித்தது.

அதே போல் ’பின் நவீன’ என்ற சொல்லாடல் பின் நவீன யுகத்தின் சிக்கல்கள், பிரச்சனைப்பாடுகள், சிடுக்கு முடிச்சுகள் ஆகியவற்றைக் குறிக்கும். எனவே,  பின் நவீன கதை என்பது பின் நவீன சூழலில் நிகழும் பின் நவீன சிக்கல்களைக் குறிக்கும்.  பலர் இந்த இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். பின் நவீனத்துவக் கதை அல்லது கவிதை என்றால் பின் நவீனத்துவம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப் பட்ட கதை என்ற பொருள் வருகிறது. பின் நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடு அல்ல. அது ஒரு ஆய்வு முறை. எனவே,  இது பின் நவீனத்துவத்துக்கே எதிரானது.

பின் நவீனத்துவம் என்ற பகுப்பாய்வு முறை வாசிப்பில்தான் தொடங்கியது. தெரிதாவின் கட்டவிழ்ப்பு எழுதப்பட்ட பிரதிகளை புது மோஸ்தரில் வாசித்துக் காட்டியது. அதே சமயம் பார்த்தின் கட்டுரை எழுதுவது பற்றியும்  பேசுகிறது. ரொலாண்ட் பார்த் குறிப்பிடும் பூஜ்ய பாகைக் கோண் எழுத்து முறை பின் நவீன பிரதி எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.
‘ஒரு தீவிர இலக்கியப் பிரதி, மரபார்ந்த இலக்கியப் பிரதிகள் கோரும் அர்த்தம், ஒழுங்கு ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். ஒரு தீவிர இலக்கியம் தன்னைத் தானே கேள்விக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் தன்னை ஒழுங்குபடுத்தும் மரபுகளையும் கலாச்சாரத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.’ என்று எழுதும் பார்த் ஒரு பிரதி இன்பம் தரத்தக்கதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ‘பிரதி தரும் இன்பம் என்பது, உடல் சார்ந்த ஆடை அவிழ்ப்பு அல்லது மர்மத்தன்மை வாய்ந்த வ்ர்ணனைகளையோ குறிப்பது அல்ல.சந்தைக் கதைகளில் சராசரி வாசகன் துய்க்கும் வாசிப்புச் சுகமும் அல்ல. ... ஒரு பிரதியை நான் வாசிக்கும் போது நான் அனுபவிப்பது அதன் வடிவத்தையோ அல்லது உள்ளடக்கத்தையோ அல்ல. அதில் உள்ள என்னைச் சிராய்த்துக் கொண்டு போகும் ஒரு அம்சத்தை மட்டுமே நான் ரசிக்கிறேன். ஒரு பிரதியில் இங்குமங்கும் அலைந்து திரியும் போது ஆங்காங்கே தென்படும் வரிகள் இன்பத்தைத் தருகின்றன.’ என்கிறார் பார்த். இதில் அவர் குறிப்பிடும் இன்பம் தரும் பிரதியை பின் நவீன பிரதியாக நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, பின் நவீனத்துவம் வாசிப்பை மட்டுமல்ல; எழுதுவதையும் உள்ளடக்கியது. ஆகவே தாமஸ் பிஞ்சனின், ‘புவி ஈர்ப்பின் வானவில்’ (gravities rainbow),   அம்பர்த்தோ எக்கோவின், ‘ரோஜாவின் பெயர்’ (The name of the rose) , அமெரிக்க எழுத்தாளரான டொனால்ட் பார்த்தல்மேயின் சிறுகதைகள் போன்றவற்றை நாம் பின் நவீன (பின் நவீனத்துவ-அல்ல) புனைவுகளாக அடையாளப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

உங்கள் ஒவ்வொரு நாவலுக்கும் பன்முக நாவல், தன் பெருக்கி நாவல் என்பதுபோல ஒவ்வொரு அடையாளத்தைக் கொடுக்கிறீர்கள். உதாரணத்திற்கு 37 நாவலை ‘POLYPHONY’ நாவல் என்று அடையாளப்படுத்துகிறீர்கள். ஆனாலும் அந்த நாவலைத் தோற்ற நிலை மெய்ம்மை நாவலாகவோ பன்முக நாவலாகவோகூட வாசிக்கச் சாத்தியமுள்ளது. அப்படியே உங்கள் ஒவ்வொரு நாவலையும் ஒரு தேர்ந்த வாசகரால் உங்கள் அடையாளப் படுத்தலுக்கு வெளியே வேறொரு வகை நாவலாக வாசிக்க இயலும். அப்படியிருக்க, ஒரு நாவலுக்கு நீங்கள் ஒற்றை அடையாளத்தைத் தருவதென்பது வாசிப்பு எல்லைகளைக் குறுக்கி வாசகனுக்குக் கடிவாளம் போட்டதுபோலாகாதா?

ஒரு புது வகை கலை முயற்சிக்கு ஒரு பெயர் தந்து அடையாளப்படுத்துவது மேற்கத்திய பாணி. சர்ரியலிஸத்தின் தந்தை என்று அறியப்படும் ஆந்திரே பிரதான் நாவலின் மரணத்தை அறிவித்தவர். அவர் தான் எழுதிய ’நாடியா’ (Nadja) என்ற நாவலை ‘சர்ரியலிஸ நாவல்’ என்றே அடையாளப்படுத்தினார்.  சார்லஸ் சோரெல் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் தனது ‘லெ பெர்ஜெர் எக்ஸ்ட்ராவகண்ட்’ என்ற நாவலை எதிர்-நாவல் (Anti-novel) என்று அறிவித்துக் கொண்டார்.
நதாலி சரௌத் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின், ’தெரியாத மனிதனின் உருவப்படம்’ என்ற நாவலை சார்த்தர் ஒரு எதிர்-நாவல் என்று அறிவித்தார். (Nathalie Sarraut’s ‘Portrait of a man unknown’) அடுத்து அவர் எழுதிய ‘பிளானிடோரியம்’ என்ற நாவலை நதாலி ‘எதிர் நாவல்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அது எதிர் நாவல் இல்லை என்றார் சார்த்தர். அமெரிக்க எழுத்தாளரான ஜான் டாஸ் பாஸோஸின் நாவல்கள் கலைடாஸ்கோப் (Kalaeidoscope) நாவல்கள் என்றே அடையாளப்படுத்தப்படுகின்றன.

இதெல்லாம் வாசகனை ஒரு புதிய முயற்சி வந்திருக்கிறது என்று கூறி கவனப்படுத்தும் முயற்சி. அதையே நான் செய்தேன். என்னுடைய நாவலை நான் பன்முக நாவல் என்று கூறுவது என் கருத்து. அதை ஒப்புக் கொள்வதும் ஒப்புக் கொள்ளாததும் வாசகனின் உரிமை. எழுதும் வரைதான் ஒரு பிரதி ஆசிரியனுக்குச் சொந்தம். எழுதி முடித்தபின் அது வாசகனுக்குச் சொந்தம். அதில் நான் ஏன் தலையிட வேண்டும்? என்னுடைய நாவலை நான் பன்முக நாவல் என்று அடையாளப்படுத்தினேன். அதை ரமேஷ்-பிரேமும், பிரம்மராஜனும் மறுத்துவிட்டார்கள். அதனால் தவறில்லையே. நான் சொன்னது கருத்து. அவர்கள் சொன்னது அதன் மீதான விமர்சனம். இதன் மூலம் ஓர் உரையாடல் சாத்தியப்படுகிறதல்லவா. அது மிக முக்கியமானது.

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் நாவலை நீங்கள் AUTO-FICTION என்று அறிமுகப் படுத்துகிறீர்கள். ஆனாலும் AUTO-FICTION என்னும் கலைச்சொல் சுய வரலாற்றையும் புனைவையும் இணைத்தெழுதும் சுய வரலாற்றுப் புனைவு வகைகளில் ஒன்றைக் குறிப்பதாக இருக்கிறது. தமிழில் அதை மற்ற எழுத்தாளர்கள் சுய புனைவு என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் AUTO-FICTION என்பதைத் தன் பெருக்கி நாவல் என்று மொழி பெயர்த்திருக்கிறீர்கள். உங்களுடைய கருத்துக்கு ஆதாரமாக நீங்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன என்பதை விளக்குவீர்களா?

எனக்குப் பிடித்தமான அமெரிக்கப் பின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர் ஜெர்ஸி கோஸின்ஸ்கி. அவரது Being there, Painted bird, Pinball போன்ற நாவல்கள் புகழ் பெற்றவை. அவர் எழுதிய நாவல் ஒன்றின் தலைப்பு: ‘the hermit of the 69th street’  1988 ஆம் ஆண்டு வெளீயான அந்த நாவலில் வரும் பிரதான  கதாபாத்திரம் ஓர் எழுத்தாளர். அவர் பெயர் நார்பர்ட் கோஸ்கி. ஒரு  ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஒரு சிறு வீட்டில் தங்கிக் கொண்டு ஒரு புது வகை நாவல் எழுத வேண்டும் என்பது அவரது திட்டம். திடீரென்று ஒருநாள் அவர் காணாமல் போகிறார். அவரைத் தேடி வரும் ஒரு நபருக்கு அதுவரை அந்த எழுத்தாளர் தனது நாவலுக்காகத் தயாரித்து வைத்திருக்கும் குறிப்புத் தாள்கள் கிடைக்கின்றன. அந்த்த் தாள்களின் ஒழுங்கற்ற விவரணையே அந்த நாவல். அந்தக் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ ஃபிக்‌ஷன் எழுத வேண்டும் என்ற தனது ஆவலை ஒரு குறிப்புத்தாளில் அவர் எழுதியிருப்பார்.
ஜெர்ஸி கோஸின்ஸ்கி சொல்லும் ஆட்டோ ஃபிக்‌ஷன் வேறு; நீங்கள் சொல்லும் கலைச்சொல் மூலம் கண்ட ஆட்டோ ஃபிக்‌ஷன் வேறு. ஆட்டோ ஃபிக்‌ஷன் என்றாலே சுயவரலாற்றுப் புனைவு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பது நம் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. அந்தப் பரிச்சயத்தை (familarise) பரிச்சய நீக்கம்(De-familiarise) செய்யும் பொருட்டே இந்த நாவலுக்கு ஆட்டோ ஃபிக்‌ஷன் என்று பெயரிட்டேன்.

ஆட்டோலைடஸ் (autolytus) என்ற ஒரு புழு புணர்ச்சி இன்றி தன்னைப் பெருக்கிக் கொள்ளும். அது தன்னை இரண்டு நான்கு என்று பிரிந்து பெருக்கிக் கொண்டே போகும். அதே போல் என்னுடைய இந்த நாவலும் தன்னைப் பெருக்கிக் கொண்டு போகும். அந்த நாவலில் முதலில் ஒரு அலெக்ஸாண்டரின் கதை வரும். பின்பு இரண்டு அலெக்ஸாண்டர்கள் வருவார்கள். அதன் பிறகு நான்கு அலெக்ஸாண்டர்கள் வருவார்கள்.  அந்த அடிப்படையில் கோஸின்ஸ்கி தன்னுடைய நாவலை எழுதவில்லை என்ற போதிலும், நான் அவரது கருத்தை அடிப்படையாக் வைத்து ஒரு தன்பெருக்கி நாவலை எழுதினேன். இதை ஜெர்ஸி கோஸின்ஸ்கிக்கான என்னுடைய அஞசலி (tribute) யாக நினைக்கிறேன்.

பிரம்ம ராஜன், ரமேஷ் பிரேதன் ஆகியோர் உங்கள் அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் நாவலில் நீங்கள் அடையாளப்படுத்திய கியூபிஸ அடையாளத்தை மறுதலித்துள்ளார்களே!

என்னுடைய நாவல் அட்லாண்டிஸ் மனிதன் ஒரு க்யூபிஸ் நாவல் என்பது என் கருத்து. அமெரிக்க எழுத்தாளர் ஜான் டாஸ் பாஸோஸ், பிரெஞ்ச் எழுத்தாளர் சார்த்தர் போன்றோர் ஏற்கெனவே இது போன்ற பாணியில் எழுதி இருக்கிறார்கள்.

ஒரு பொருளை ஏக காலத்தில் பல்வேறு கோணங்களில் பார்க்குமாறு செய்வது க்யூபிஸ ஓவியம் என்றால், ஒரு நிகழ்ச்சியை ஏக காலத்தில் பல்வேறு கோணங்களில் படிக்குமாறு செய்வது  ஏன் க்யூபிஸ் எழுத்து ஆகாது என்று எனக்குத் தெரியவில்லை.
என்றாலும், ஒரு பிரதி விமர்சகனுக்கானது. அவன் சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன்.

அமரந்தா உங்கள் அட்லாண்டிஸ் மனிதன் நாவல் பெண்ணியம், தலித்தியம் மற்றும் மார்க்ஸியம் என்னும் மூன்று போராட்ட வடிவங்களுக்கும் எதிரானதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளாரே! அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அமரந்தா அட்லாண்டிஸ் மனிதன் நாவலைப் பற்றிய விமரிசனத்தில் ‘இது ஒரு சமனிலை குலைந்த பிராமண மனத்தின் வெளிப்பாடு’ என்று குறிப்பிட்டார். அதாவது நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்று அவராகவே முன் தீர்மானம் எடுத்துக் கொண்டு என்னையும் எனது பிரதியையும் அவ்விதம் சாடினார். பிராமணன் அல்லாத என்னை ஒரு பிராமணன் என்று நினைத்துக் கொண்டு அவர் எழுதும் விமர்சனம் எந்த அளவுக்கு நியாயமானதாக இருக்க முடியும்? தவிரவும் ‘சமனிலை குலைந்த பிராமண மனதின் வெளிப்பாட்டை’ ஏன் எழுதக் கூடாது?
மேலும், பெண்ணியம், தலித்தியம் மற்றும் மார்க்ஸீயத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கும் கோவை ஞானி, எஸ். என். நாகராஜன், அ. மார்க்ஸ் போன்றவர்கள் இந்த நாவலை அவற்றுக்கு எதிரான நாவல் என்று கூறவில்லையே.

விமர்சனம் என்பது வேறு. அவதூறு என்பது வேறு. அமரந்தா செய்திருப்பது அவதூறு.

ஒரு பிரதியை மூன்று விதமாக விமர்சனம் செய்யலாம், ஒன்று: மரபார்ந்த முறை. இரண்டு: நவீன விமர்சன முறை; மூன்று: பின் நவீனத்துவ விமர்சன முறை; .அதாவது பிரதியியல் ஆய்வு. இந்த எந்த அடிப்படையிலும் இயங்காத ‘விமர்சனம்’ அவருடையது.
பொதுவாக மார்க்ஸீயர்கள் வறட்சியான மனநிலை கொண்டவர்கள். கலை இலக்கியத்தை ரசிக்கும் மனநிலை அற்றவ்ர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.பலர்  சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அமரந்தாவை நேரில் பார்க்கிறேன்.

உங்கள் பின் நவீனத்துவ பாணியிலான கதைகூறலில் தொடர்ச்சியறுத்தலும் கூறுபடுத்துதலும்தான் முதன்மையான பங்குவகிக்கின்றன எனலாம். அப்படி இருக்க யுரேகா என்றொரு நகரம் நாவலில் மட்டும் நேரான எடுத்துரைப்பையே பயன்படுத்தியுள்ளீர்களே! அதற்கான காரணமென்ன?

ஒரு பின் நவீன கதை என்பது தொடர்ச்சியற்றும். கூறுபடுத்தப்பட்டும்தான் இருக்க வேண்டும் என்றில்லை. நேரான கதை சொல்லலிலும் இருக்க்  முடியும். அதை எடுத்துக் காட்டவே யுரேகா என்றொரு நகரம் நாவலை நேரான எடுத்துரைப்பில் எழுதினேன். ஜெர்ஸி கோஸின்ஸ்கி, கர்ட் வானேகட் போன்றவர்கள் நேரான எடுத்துரைப்பில் பின் நவீன பிரதிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

என்னுடைய நாவல் சொல்லப்பட்ட விதம்  நேரான விவரிப்பு என்ற போதிலும் அதை கடந்த கால (Past tense) விவரிப்பில் சொல்லவில்லை. வ்ரலாறு கடந்த காலத்துக்குரியது. எனவே, கடந்த காலம் சந்தேகத்துக்குரியதாக ஆகிறது. வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் நாவல் என்பதால் நிகழ் கால விவரணையில் அந்த நாவல் அமைந்திருக்கிறது.

பின் நவீனக் கூறுகளான பகடி, கேள்விக்குள்ளாக்கும் தன்மை ஆகியன அந்த நாவலை ஒரு பின் நவீன நாவலாக ஆக்குகின்றன.

உங்கள் பின் நவீனத்துவ பாணியிலான நாவல் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டதொரு அடையாளத்திற்குட்படுத்தும் நீங்கள் யுரேகா என்றொரு நகரத்தை எந்த அடையாளத்திற்குள்ளும் அடக்கவில்லையே! அது புது யதார்த்தவாத நாவல் என்று அடையாளப்படுத்தப்பட்டதைக் கூட நீங்களே மறுத்துள்ளீர்கள். இது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இயலுமா?

பின் நவீனத்துவ நாவல் என்றாலே ஏதாவது ஒரு அடையாளத்துடன் தான் எழுத வேண்டும் என்கிற தவறான புரிதலை விலக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். புது யதார்த்த நாவல் என்ற அடையாளம் கூட வேண்டாம் என்று நினைத்து அதையும் தவிர்த்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

’37’ நாவலைப் பல குரல் நாவல் என்கிறீர்கள். ஆனாலும் அதன் மொழி நடையில் நீங்கள் ஏதும் வேறுபட்ட குரல்களைப் பரிசோதனை செய்ததாகத் தெரியவில்லையே! ஒரு வகையில் அதன் இயல் தலைப்புகளை மறந்துவிட்டு வாசித்தால் ஒரே மாதிரியான மொழி நடையும் அதனடியாக ஒரே குரலும் மட்டுமே ஒலிப்பதாகத் தெரிகிறதே!

பலர் என்னிடம் இந்த நாவலைப் பற்றி இப்படித்தான் கேட்கிறார்கள். 37 நாவலின் 86ஆம் பக்கத்தில் இதற்கான பதில் இருக்கிறது,. கதையின் நாயகன் காவிடம் சொல்கிறான்: ‘நமது கதை சொல்லல் முறையை மாற்றிப் போட வேண்டும்’ அதற்கு கா ‘நல்ல யோசனைதான்’ என்கிறான்.

‘எங்களுக்கென்று புராதன கதை சொல்ல்ல் மரபு இருந்தது.........இதில் உயர்திணை, அஃறிணை கதாபாத்திரங்கள் எல்லாம் பேசும். திரைச்சீலை ஒரு கதை சொல்லும். திரி விளக்கு வேறு ஒரு கதை சொல்லும். இந்தப் பாணியில் நம் கதைகளை நாம் சொல்லிக் கொண்டே போனால் என்ன?

குரல்கள்
பல குரல்கள்
ஆமாம் பலகுரல்கள்
...............

இந்த நாவலில் வரும் குரல்கள் பல குரல்களைப் போல் தோற்றம் தந்தாலும் அவை யாவும் நரேந்திரன் மற்றும் கா வின் குரல்களே. இவர்கள் வேறு வேறு பாத்திரங்களைப் போல் பேசுகிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் வெண்ட்ரிலோகிஸம் என்பார்கள். இதனால்தான் மொழி நடையும் குரலும் ஒரே மாதிரி ஒலிப்பதாகத் தெரிகிறது.

மிகயீல் பக்தின் சொல்லும் ‘பல குரல்’ வேறு. இந்த நாவ்லில் வரும் ‘பல குரல்’ வேறு.

ஒரு பொருளுக்கு ஒரே அர்த்தம் கற்பிக்கும் வன்முறையை தெரிதா தனது கட்டவிழ்ப்பின் மூலம் ரத்து செய்தார். ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றை லக்கான் தனது S/s சமன்பாட்டின் மூலம் வெட்டி எறிந்தார். இச்சூழ்நிலையில் ஆட்டோஃபிக்‌ஷன், பலகுரல் நாவல் போன்ற சொற்களோடு கட்டப்பட்டிருக்கும் வழக்கில் உள்ள அர்த்தங்களை நான் ஏன் மாற்றிப் போடக்கூடாது?

சிலந்தி நாவலில் தோற்ற நிலை மெய்ம்மையைக் கையாண்டதற்கான பின்னணி குறித்துக் கூறுங்களேன்! அந்த வடிவத்தை எப்படி நீங்கள் கண்டடைந்தீர்கள்?

சிலந்தி நாவல் ஒரு விளையாட்டாக வடிவமைக்கப்பட்டது. ஆசிரியனும் வாசகனும் பங்கு பெறும் விளையாட்டு. இது கணினி யுகம்.இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களில் முதலாளிகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தொழிலாளிகள் க்ணினி முன் உட்கார்ந்து இங்கே வேலை செய்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதில்லை. ஆனாலும் அவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த இருத்தல்தான் தோற்ற நிலை இருத்தல்  (virtual reality)  நிகர் நிலை இருத்தல் என்றும் கூறலாம். இன்றைக்கு ஒரு அமைச்சர் சென்னையில் இருந்து கொண்டே வேளியூரில் இருக்கும் ஒரு கட்ட்ட்த்தை வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் திறந்து வைக்கு முடிகிறது. இதெல்லாம் தோற்றநிலை இருத்தல் அல்லாமல் வேறென்ன?

முதலாளியும் தொழிலாளியும் நேரில் பார்த்துக் கொள்ளாமல் தோற்ற நிலையில் வேலை செய்யும் போது ஒரு வாசகனும் ஆசிரியனும் ஏன் தோற்ற நிலையில் விளையாடக் கூடாது. இப்படித்தான் நான் யோசித்து தோற்ற நிலை நாவல் ஒன்றை உருவாக்க முடிவு செய்தேன்.
இத்தாலியில் இருக்கும் பைசா கோபுரம் ஒரு கட்டிடக்கலை விளையாட்டு.
பிரான்சில் இருக்கும் எய்ஃபல் கோபுரம் ஒரு பொறியியல் விளையாட்டு. இந்த நாவல் ஒரு இலக்கிய விளையாட்டு. அவ்வளவுதான்.

நிகாமாவின் கண்ணீர் கதை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

நிகாமாவின் கண்ணீர் ஒரு எதிர்காலப் புனைவு(Futuristic fiction).  இப்போதே பல பெண்கள் ஆண்கள் துணையின்றி தனித்து வாழ்கிறார்கள். எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். நிகாமா தொடர்ச்சியாக ஆண்களால் ஏமாற்றப்படுபவள். அவளோடு துணைக்கு இருக்கும் ஒரே ஆண் அவளது தாத்தா மட்டுமே. அதுவும் உயிரற்ற உடலாக. நிகழ்காலமோ எதிர்காலமோ ஆண் – பெண் உறவுகள் சிடுக்கு முடிச்சுகள் நிறைந்ததாகவே எனக்குப் படுகிறது.அவை தீர்க்கப்பட முடியாமல் இருப்பதற்கு உடற்கூற்று அமைப்புதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

உங்கள் சிறுகதைகளில் மிக ஆரம்ப காலத்திலேயே எழுதப்பட்டமைலாய்என்னும் சிறுகதை ராணுவ யுத்த நடைமுறையின் அபத்தங்களைப் பேசுவதாக அமைந்துள்ளது. அதுவுமின்றி அது வேற்று நாட்டுச் சூழலில் கதை சொல்வதாகவும் அமைந்துள்ளது. எந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைகளோடும் பொருந்திப் போகக் கூடிய அந்தக் கதை உங்கள் கதைகளில் தனித்து நிற்கும் தன்மையதாக இருக்கிறது. அந்தக் கதையை எழுத நேர்ந்ததின் பின்னணியைப் பகிர்ந்துகொள்ள இயலுமா?

இந்த நேர்காணலின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை நினைவு கூர்கிறேன். எழுபதுகளில் நான் மார்க்ஸீயத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அப்போது என் எழுத்து முயற்சிகள் ஒரு மார்க்ஸீய மனநிலையில் உருவாயின. அப்போது நான் அதிகம் எழுதவில்லை என்ற போதிலும் நான் எழுதிய ஒரு சில சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை மார்க்ஸீயத் தாக்கத்துடன் இருந்தன.

உலகிலுள்ள ஒவ்வொரு மார்க்ஸீயவாதியையும் மிகவும் பாதித்த விஷயம் வியட்னாம் யுத்தம். அந்தக் காலக்கட்டத்தில் உலகெங்கிலுமிருந்த பல கலைஞர்களின் கருப்பொருளாக வியட்னாம் இருந்தது. நானும் என் பங்குக்கு ஒரு சிறுகதை எழுதினேன். அதுதான் ‘மைலாய்’. அந்தக் கதை செம்மலரில் வெளியானது. பலருடைய பாராட்டுதலைப் பெற்றது. பலர் நான் வியட்னாமுக்குப் போயிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள். அமெரிக்கா தன்னை ஒரு பெரிய அண்ணனாக  நினைத்துக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் உள் நாட்டு விஷயங்களில் தலையிடுவதை நான் எதிர்க்க விரும்பினேன். என்னுடைய எதிர்ப்பை இந்தச் சிறுகதை மூலம் பதிவு செய்தேன். இன்றளவும் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறவில்லை. நாடுகளின் பெயர்கள் மாறலாம். அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாது.

2003 ஆம் ஆண்டு 37 நாவல் வெளிவந்தது. அதற்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் வேறெந்த நாவலையும் வெளியிடவில்லையே!

தொடர்ந்து ஐந்து பின் நவீன நாவல்கள எழுதிய நான் ஒரு இடைவெளி விட விரும்பினேன். நான் எழுதிய நாவல்கள் எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன; எவ்விதம் ஏற்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தேன். பழைய போஸ்டர் மேல் புதிய போஸ்டர் ஒட்டுவது போல் ஒரு நாவலை வாசகர்கள் படிக்கு முன் அடுத்த அடுத்த நாவல்களை எழுதி வெளியிடுவது கவனச்சிதறலை ஏற்படுத்தக் கூடும் என்று எனக்குத் தோன்றியது. பழைய நாவல்கள் கவனிக்கப்படாமல் போய் விடக்கூடிய அபாயம் நேரக்கூடும் என்று நினைத்தேன். அதனால்தான் நான் தொடர்ந்து நாவல்கள் எழுதவில்லை. அதற்கு மாறாக புனைவற்ற எழுத்துகள்(non fiction) எழுதுவதில் கவனம் செலுத்தினேன்.

எனக்குப் புனைவற்ற எழுத்துகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. இந்தக் காலத்தை அதற்குப் பயன் படுத்தினேன்.  இந்தக் காலக்கட்ட்த்தில்தான் பின் நவீனத்துவம் என்றால் என்ன?, இசங்கள் ஆயிரம், பின் நவீன சிந்தனையாளர்கள் வரிசை போன்ற நூல்களை எழுதினேன். பருவ இதழ்களில் தனிக்கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதினேன். அவை யாவும் கவனிக்கப்பட்டன என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.  இப்போது மீண்டும் ஒரு புதிய நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

அரசு அலுவலகப் பணி, எழுத்துப் பணி, சினிமாவில் பணியாற்றுவது - இந்த மூன்றும் வெவ்வேறு மனோநிலையை உருவாக்கக் கூடியவை. இந்த மூன்றிலும் பணியாற்றிய அனுபவம் உங்களுக்கு உண்டு. மூன்றுக்குமான வேறுபாடுகளாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? இந்த மூன்றில் உங்களுக்கு மன நிறைவைத் தந்த துறை எது? அந்தத் துறையில் நீங்கள் மன நிறைவை அடைந்ததாகக் கருதுவதின் காரணமென்ன?

என்னைப் பொறுத்த வரை ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் போல் இயங்கினேன் என்றுதான் சொல்ல வேண்டும். தொலைக் காட்சிபெட்டியில் பல சேனல்கள் இருக்கும். ஒரு சேனல் இயங்கும் போது பிற சேனல்கள் தெரியாது. அதே போல், அலுவலகப்பணி புரியும் போது அது ஒரு சேனல். சினிமாவில் பணிபுரியும் போது அது இன்னொரு சேனல். எழுத்துப் பணியில் இயங்கும் போது அது வேறொரு சேனல். அப்படி நான் இயங்கி இருக்காவிட்டால் என்னால் மூன்றையும் சமாளித்து இருக்க முடியாது.

மூன்றுக்குமான் வேறுபாடுகளாக நான் பார்ப்பது இதைத்தான்: விருப்பமில்லாமல் அரசு அலுவலகப்பணியைச் செய்தேன். விருப்பத்துடன் எழுத்து, சினிமா பணிகளைச் செய்தேன். விருப்பமில்லாமல் செய்த பணிதான் என்னை உணவு, உடை, இருப்பிடம் தந்து காப்பாற்றியது. விருப்பத்துடன் செய்த தொழில்கள் எனக்குப் பொருளாதார ரீதியாக்க் காப்பாற்றவில்லை. ‘விரும்புகின்ற ஒன்றைச் செய்ய முடியாமல் போகிற கையாலாகாத்தனம்; விரும்பாத ஒன்றைச் செய்ய நேரும் அபத்தம்; இந்த இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு உழல்வதால் ஏற்படும் வலி என்னுடையது’ என்றார் மார்லன் பிராண்டோ. என்னுடைய வலியும் அதுதான்.

இந்த மூன்று துறைகளிலும் எனக்கு மன நிறைவைத் தந்த துறை எழுத்துத் துறை. ஏனெனில், இங்குதான் நான் எனது அடையாளத்தைப் பெற்றேன்.

இதுவரை நீங்கள் பெற்ற விருதுகள் மற்றும் பிற அங்கீகாரங்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

·      எனது அட்லாண்டிஸ் மனிதன், அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத்தேநீர் ஆகிய இரு நாவல்களும், கோவை பி.எஸ்.ஜி க்ல்லூரி மற்றும் சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரிகளில் எம்.ஏ., தமிழ் பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டன.

·      என் மகளுக்கு அவள் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்காக,  தமிழ் நாட்டின் மிகப் பெரிய கல்லூரி ஒன்றில் குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிப்பதற்கு தமிழ்க அரசு தமிழறிஞர் கோட்டாவில் இடம் தந்து உதவியது.

·      என்னுடைய அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சில்ருடன் நாவலுக்கு, 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்த்து.

·      என்னுடைய 37 நாவலுக்கு, 20006 ஆம் ஆண்டின்  சிறந்த நாவலுக்கான த.நா.க.இலக்கியப் பெருமன்றத்தின் பாரதியார் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

·      நான் எழுதிய பின் நவீனத்துவம் என்றால் என்ன நூலுக்கு ஏலாதி இலக்கியப் பரிசு 2006ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

·      மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைத் துறை என்னை கௌரவிக்கும் பொருட்டு திரைப்படச் சான்று அளிக்கும் குழுவின் ஆலோசனை வழங்கும் உறுப்பினராக நான்கு ஆண்டுக்காலம் பணி புரியுமாறு நியமித்தது.

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய எழுத்து சார்ந்த ஒரு லட்சியம் அல்லது அடைய வேண்டிய இலக்கு என்று ஏதேனும் இருக்கும். உங்களுக்கும் அப்படிப்பட்ட இலக்கு இருந்திருக்குமில்லையா! உங்கள் எழுத்தின் இலக்கு குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள். நாற்பது வருடத்திற்கும் மேலான உங்கள் எழுத்தில் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்ததாகக் கருதுகிறீர்களா?

ஒரு நல்ல கதை எழுதவேண்டும் என்பதே எனது எழுத்து சார்ந்த லட்சியம் எனலாம். அந்த லட்சியத்தை நான் ஈடேற்றும் பொருட்டு நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளே நான் இதுவரை எழுதிய எல்லாமும். இன்னும் கூட நான் என் முயற்சிகளைத் தொடரவே செய்கிறேன். முழுமையான முற்றான என்று எதுவும் இல்லை. எனவே எனது லட்சியமும் கூட முழுமையான ஒன்றாக இருக்க முடியாது. எனவே அது அடைய முடியாத இலக்கு என்றுதான் சொல்ல வேண்டும். அதை நோக்கி நகர்தலே என்னுடைய இயக்கம்.

தவிரவும், நான் நிகழ்த்துதலை (Performance)  மதிக்கிறேன். ஒவ்வொரு கதையும், கவிதையும், கட்டுரையும் ஒவ்வொரு நிகழ்த்திக் காட்டுதலே.
நாட்டியம் வேறு; நாட்டியக்காரி வேறு என்று பிரித்துக் காட்டினார் பால் டெ மான். நான் நன்கு நிகழ்த்திக் காட்டும் நாட்டியக்காரியாக இருக்க விரும்புகிறேன்.

நவீனத்துவமோ, பின் நவீனத்துவமோ அல்லது வேறு எதுவோ கலையின் நோக்கம் நிகழ்த்திக் காட்டுதலே என்றும் ஒரு கலைஞனின் லட்சியம் சிறப்பான நிகழ்த்திக் காட்டுதலாக மட்டுமே இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதுவே எனது லட்சியமும் கூட.

என்னுடைய இலக்கை இன்னும் நான் அடையவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்று என் லட்சியத்தை நான் எய்தி விட்ட்தாக நினைக்கிறேனோ அப்போதே நான் எழுதுவதை விட்டு விடுவேன்.                
தற்போது ஏதேனும் எழுதும் திட்டத்தில் இருக்கிறீர்களா? உங்களுடைய அடுத்த கட்ட எழுத்து முயற்சி என்ன? 

எனது அடுத்த கட்ட முயற்சி அடுத்த நாவல்தான். இடையில் உதிரி உதிரியாக சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்த நான் இப்போது மறுபடியும் நாவல் எழுத வந்துவிட்டேன். எழுத ஆரம்பித்தும் விட்டேன். அனேகமாக இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரும் சாத்தியம் இருக்கிறது.

*
(இந்த நேர்காணலை வெளியீட்ட சிற்றேடு இதழுக்கு நன்றி)

M g Suresh 91 98841 87142
Email - mgsuresh1953@gmail.com