Friday, January 30, 2015

chetan bhagat

தமிழ்

இனி

மெல்ல

மாறும்

எம்.ஜி.சுரேஷ்

* * *     

மீபத்தில் எழுத்தாளர் சேத்தன் பகத் ஓர் ஆங்கில நாளிதழில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

     ’மொழியைக் காப்போம், ரோமன் இந்தியைக் கைகொள்வோம்’ என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் சில விஷயங்கள் தமிழ்நாட்டுக்கும் பொருந்தி வருகிறமாதிரி தோன்றுகிறது.

     ’நமது சமூகத்தில் தொடர்ந்து நடந்து வரும் விவாதம் நமக்குத் தேவை இந்தியா அல்லது ஆங்கிலமா என்பதே’ என்று ஆரம்பிக்கும் அவர் மேலும் தொடர்கிறார்.

     ’நாம் நமது பிராந்திய மொழிகளை ஆங்கிலத்துக்கு இழக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் தத்தம் மொழிகளுக்கு எதிரான போட்டியாக இந்தியைக் கருதுகின்றன. மத்திய அரசு இந்தி வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது. மாநில அரசுகள் தத்தம் மொழிகளைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்கின்றன. ஆனால், எந்தவிதமான் ஆதரவும் இன்றி ஆங்கிலம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்கிறார் பகத். அவர் சொல்லும் சூழ்நிலை தமிழ் நாட்டிலும் இருக்கிறதல்லவா?’

     தமிழ் நாட்டில் தமிழ்வழிக்கல்விக்கு எதிராக தமிழ் மாணவர்களின் பெற்றோரே எதிர்ப்புத் தெரிவித்ததை நாம் அறிவோம். மாணவர்களும் தமிழை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். இதே நிலை வடக்கிலும் நிலவும் அவலத்தை பகத் சுட்டிக் காட்டுகிறார். அதற்குக் காரணங்களாக பகத் கீழ்க்காணும் விஷயங்களைச் சொல்கிறார்.

1.   சமூகத்தில் ஆங்கிலம் மரியாதைக்குரிய மொழியாகப் பார்க்கப்படுகிறது.
2.   புதிய உலகமான தகவ்ல் துறை ஆங்கிலம் சார்ந்தது.
3.   கணினி, மொபைல் போன் போன்ற எல்லாமே ஆங்கில மையம் கொண்டவை.
4.   என்னதான் வட்டார மொழிகளில் கணினி விசைப்பலகைகள் வந்து விட்டாலும், ஆங்கிலத்தை விட்டுத் தனித்து இயங்குவது கடினமே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று கேட்கும் பகத் ஒரு ஆலோசனையையும் வழங்குகிறார். அதன்படி இந்தி லிபியை ஆங்கில லிபியாக மாற்றிவிட வேண்டும் என்கிறார். அதிர்ச்சி தரும் இந்த ஆலோசனைக்கு ஆதாரங்களாக பின் வரும் தகவல்களை அடுக்குகிறார்.

ஆங்கிலம் ஏககாலத்தில் நம்நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறது. கணினியின் விசைப்பலகைகளில், அலைபேசியின் தொடு திரைகளில். அவரவர் வட்டார மொழிகளை ஆங்கில லிபியில் எழுதும் பழக்கம் ஏற்கனவே கோடிக்கணக்கான இந்திய மக்களிடம் இருக்கிறது. வாட்ஸப் சாதனத்தில் உரையாடல் இந்தியில் இருந்தாலும், தட்டும் லிபி ஆங்கில லிபியாக இருக்கிறது. எனவே, இதை ஒரு புது விஷயமாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. இன்றைக்கு இந்தித் திரைப்பட விளம்பரங்கள், டீவி விளம்பரங்கள் எல்லாமே பெரும்பாலும் ஆங்கில லிபியால் எழுதப்படும் இந்தி மொழியில்தான் இருக்கின்றன.

ஆனால் தூய இந்திவாதிகள் இதைக் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் இந்தி சுத்தமாக தூய இந்தியில்தான் எழுதப்படவேண்டும் என்கிறார்கள். மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்கள் என்கிறார் பகத். ஏற்கனவே, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகள் தங்கள் மொழிகளை ஆங்கில லிபியில் எழுதுவதை உதாரணம் காட்டுகிறார். ஆதியில் இந்தியாவில் உருதுக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை உருது லிபியில் எழுதவில்லை. இந்தி லிபியான தேவநாகரியில்தான் எழுதினார்கள் என்கிறார். ஒரு மொழியை இன்னொரு லிபியில் எழுதுவதில் தவறே இல்லை என்று வாதிடுகிறார் பகத்.

இன்றைய உலகமயமாக்க சூழலில், இந்தி ஒரு உலகளாவிய அளவில் வெல்வதற்கு இது முக்கியம் என்கிறார் அவர்.

அவர் சொன்ன சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கணினியில் முகநூல், ட்விட்டர்களில் ஆங்கில லிபியில் தமிழ் எழுதுகிறோம். மின் – அஞ்சலில் ஆங்கில லிபித் தமிழில் உரையாடுகிறோம். பேசும் தமிழில் தொண்ணூறு சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்தே பேசுகிறோம். ‘பஸ் இன்னிக்கு லேட்’ என்ற வாக்கியத்தில் இன்னிக்கு என்ற ஒரு வார்த்தை மட்டுமே தமிழ். மற்ற இரு சொற்கள் ஆங்கிலமாக இருக்கிறது. டீவி நிகழ்ச்சிகள் கூட இந்தத் தமிங்லிஷ் மொழியில்தான் நடத்தப்படுகின்றன. நமது மரபணுவிலேயே ஆங்கிலம் காலூன்றிவிட்டதோ என்று சந்தேகம் வருகிறது.

இதைத் தமிழுக்கும் அமல்படுத்தினால் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகிவிடாது. நாம் தற்போது உபயோகித்து வரும் தமிழ் எழுத்துகள் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்த எழுத்து என்று காலங்கள் தோறும் மாறித்தான் வந்திருக்கிறது. இப்போது அதுவல்ல பிரச்சனை. இப்படிச் செய்வதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

தமிழ் படிப்பதில் ஆர்வம் இல்லாத கான்வெண்ட் பிள்ளைகளுக்கும், ஆங்கிலவழிக் கல்வி பயிலும் தமிழ்க் குழந்தைகளுக்கும் தமிழ் மேல் ஆர்வம் வருமா?’ அதுதான் முக்கியம்.  அதை அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. ஆங்கில லிபியில் எழுதப்பட்டத் தமிழ்ப்புத்தகம் தப்பித் தவறி, ஆங்கிலப் புத்தகங்களுக்குள் கலந்து விட்டால் கூட அதைத் தனியே பிரித்து எடுத்து வைத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

தமிழ் பேச மட்டுமே தெரிந்த, எழுதப்படிக்கத் தெரியாத தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, கயானா, பிஜி, ட்ரினிடாட் போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே, ஒரு வேளை ஆங்கில லிபியில் தமிழை எழுதினால் அவர்களால் தமிழைப் படிக்க(?) முடியும். ஒருவேளை, சேத்தன் பகத் சொல்லும் ஆலோசனை இவர்களுக்குப் பயன்படக்கூடும்.

உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனமொழி. அவர்கள் மொழியான மாண்டரின் ஆங்கில லிபிக்கு மாறிவிட்டது. அதை பின்யின் என்கிறார்கள். இருந்தாலும், சீனலிபியிலும் மாண்டரின் மொழியை எழுதுகிறார்கள். ஒருவேளை, இந்தியை ரோமன் லிபிக்கு மாற்றினாலும், பழைய லிபியில் இந்தி எழுதுபவர்களும் இருக்கவே செய்வார்கள். அதை மாற்ற முடியாது. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற திடீர் மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்கு ஆதரவும் கைவிரிப்பும் ஏக காலத்தில் இருக்கவே செய்யும்..

ஒரு காலத்தில் சம்ஸ்கிருதக் கலப்பு என்ற அபாயம் வந்தது. அதையும் மீறி தமிழ் ஜீவிக்கிறது. இப்போது ஆங்கிலக் கலப்பு அபாயம் வந்து அச்சுறுத்துகிறது. பாரதியார் வேறு ஏற்கனவே தமிழ் இனி மெள்ளச் சாகும் என்று பயமுறுத்திவிட்டு சென்றிருக்கிறார். இருந்தாலும் அஞ்சவேண்டியதில்லை. இது போன்ற ஆபத்துகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.  என்ன பிரச்சனை வந்தாலும், தமிழ் சாகாது, ஆனால், மெல்ல மாறும் என்று தோன்றுகிறது.

Friday, January 23, 2015

சனிக்கிழமைதோறும்

திப்பு சுல்தானின்

கொள்ளுப்பேத்தி
எம்.ஜி.சுரேஷ்
  •  

ஹாலிவுட் திரைப்படங்களில் அடிக்கடி காட்டப்படும் காட்சி போல் அது இருந்தது. நள்ளிரவு நேரம். உயரமான மதில் சுவரின் அருகே அந்த இளம்பெண் தரையில் மண்டியிட்டு அமர்கிறாள். அவள் முதுகின் பின்னே நிற்கும் ஒரு நாஜி சீருடை அணிந்த அதிகாரி, அவளது பின்னங்கழுத்தில் தனது பிஸ்டலை வைத்துச் சுடுகிறார். பின்னந்தலையில் இருந்து ரத்தம் குபுகுபுக்க, அந்தப் பெண் கொஞ்சமும் பயமின்றி, ‘சுதந்திரம்’ என்று ஒரு முறை குரல் கொடுத்துவிட்டுப் பின்பு ஒரு பொட்டலம் போல் மடிந்து விழுந்து சாகிறாள்.

1944ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சி வரலாற்றின் புறக்கணிக்கப்பட்ட பக்கங்களுக்குள் போய்ப் புதைந்து கொண்டது.

திப்பு சுல்தானின் பேரன் இனாயத் கான் ஒரு சூஃபி அறிஞர். தேர்ந்த இசைக் கலைஞரும் கூட. அவர் தனது இந்துஸ்தானி இசையையும், சூஃபிக் கோட்பாட்டையும் மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு இல்லை என்ற போதிலும், ஓரா பேக்கர் என்ற இளம்பெண்ணின் காதல் கிடைத்தது. பிறகு அமெரிக்காவிலிருந்து பிழைப்பைத் தேடி ஐரோப்பாவுக்குப் போன அவருக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது அவரது அமெரிக்கக் காதலி ஓராவும் வந்து சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுகுப் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு நூர் என்று பெயர் வைத்தனர். நூர் பிறந்த நேரம் ரஷ்யா புரட்சிப் புயலில் சிக்கி இருந்தது. அதன் விளைவாக இனாயத் கான் தன் மனைவி ஓராவையும், மகள் நூரையும் அழைத்துக் கொண்டு பிரான்ஸ் போய்ச்சேர்ந்தார். அங்கே நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. மேலும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர் கான் தம்பதிகள்.

தன் மகளுக்கு இலக்கியம், இசை, சூஃபித்தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார் இனாயத் கான். நூர் இளம் பெண்ணாக வளர்ந்த போது ஹிட்லர் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருந்தான். உலகமே அவனைக் கண்டு நடுங்கியது. அவனால் உலகப் போர் மூண்டிருந்தது. அந்தத் தருணத்தில் எந்தப்பெண்ணும் செய்யத்தயங்கும் காரியத்தைச் செய்யத் துணிந்தாள் நூர். ஹிட்லரின் எழுச்சியால் உலகம் நடுங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நாஜிகளுக்கு எதிராகத் தான் ஏதாவது பங்களிப்பைச் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? அந்த நேரத்தில் நூர் மோர்ஸ் தந்தியடிக்கும் கலையைக் கற்றிருந்தாள். ஓர் எழுத்தாளராக அறிமுகம் அடைந்திருந்தாள். ஜெர்மனியில் யூதர்கள் அழிக்கப்படுவதைக் கண்டித்து ‘உடைந்த கண்ணாடி’ என்ற தலைப்பில் ஓர் உருவகக் கதை எழுதி இருந்தாள். அவள் எழுதியதைப் பதிப்பிக்க பதிப்பாளர்களும் தயாராக இருந்தனர். ஆனால், அவள் மனம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது.

அவளுக்குத் தெரிந்த மோர்ஸ் தந்திக் கலை விரைவிலேயே அவளை உளவுத்துறையில் கொண்டு போய்ச்சேர்த்தது. நேச நாடுகளுக்காக பிரான்சிலிருந்து இயங்கும் உளவாளியாக மாறினாள் நூர். நாஜிகளின் உளவு நிறுவனமான கெஸ்டபோவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினாள். அவரது கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் பிரிட்டிஷ்காரர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். தலைவலியாக இருந்தார். இவளோ நாஜிகளுக்குத் திருகுவலியாக இருந்தாள். வித விதமான தோற்றங்கள், புதுப் புதுப் பெயர்கள் என்று தன்னை மாற்றிக்கொண்டு பிரான்ஸ், லண்டன் என்று திரிந்தாள். அவளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் பிராங்குகள் தருவதாக நாஜிகள் அறிவித்தனர். கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளது சினேகிதியே இவளைக் காட்டிக் கொடுத்தாள்.

கெஸ்டபோ அவளைக் கைது செய்து ‘ஆபத்தான கைதி’ என்று முத்திரை குத்தி வதை முகாமுக்கு அனுப்பியது. கொடிய சித்திரவதைக்குப்பின் டச்சாவ் என்ற இடத்தில், ஹிட்லரின் ஒப்புதலோடு வடிவமைக்கப்பட்ட வதை முகாமில் நூர் சுட்டுக் கொல்லப்பட்டாள். உலகப் போர் முடிந்த பின்னால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு நூருக்கு பிரான்ஸ் நினைவுச்சின்னம் அமைத்தது. ஆண்டுதோறும் ராணுவ மரியாதை செய்கிறது. இப்படி ஒரு இந்தியப்பெண் இருந்தாள், உலகப் போரின் போது நாஜிகளுக்கு எதிராகப் போராடி உயிர் துறந்தாள் என்ற செய்தி நம்மிடையே பெரிதாக கவனப்படுத்தப்படவில்லை. சானா கான், முமைத் கான் என்று கிறங்கிக் கொண்டிருக்கும் நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு நூர் இனாயத் கானின் வரலாறு என்றைக்கு எட்டும் என்று தெரியவில்லை.

<<>> 

            (வெளிவர இருக்கும் ‘நிகழ்த்தப்பட்ட மரணங்கள்’ தொகுப்பிலிருந்து)

                      

Friday, January 16, 2015

எம் ஜி சுரேஷ் பக்கங்கள் - சனிக்கிழமை தோறும்

THEATRE

பார்வையாளனும்

பங்குபெறுவோனும்

*
எம்.ஜி.சுரேஷ்

லகத் திரைப்படங்களால் நாம் என்னவாக ஆனோம் என்பது முக்கியமான கேள்வியாகும். சராசரி உள்ளூர் சினிமாவைப் பார்ப்பவர்களாகவும் ரசிகர்களாகவும் இருக்கும் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை உலகசினிமா என்பது முக்கியமானது.

     உலகத் திரைப்படங்களைப் பார்த்ததால்தான் பாலுமகேந்திரா, மகேந்திரன், கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் தமிழுக்குக் கிடைத்தார்கள். வெறும் உள்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்திருந்தால் அவர்கள் இந்த அளவுக்கு சாதனை புரிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

     தற்காலத்தில் நம்முடைய யுகத்தில் எல்லா கலை, இலக்கியங்களைப் போலவே திரைப்படமும் ஒரு முக்கியமான மாறுதலைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. உலகத்திரைப்படங்கள் மரபிலிருந்து நவீனத்துக்கு மாறியது போல் தற்போது நவீனத்திலிருந்து பின் நவீனதன்மைக்கு மாறி வருகின்றன.

     மரபான திரைப்படம் என்பது வழக்கமான நேர்க்கோட்டுத் தன்மை கொண்டது. புகைவண்டி ஒரே தடத்தில் தடக் தடக் என்று ஒரே தாள கதியில் ஓடிக் கொண்டிருப்பது போல் ஒரே நேர்க்கோட்டில் கதை சொல்லல்  ஓடிக்கொண்டிருக்கும். ஓர் ஆரம்பம், ஒரு நடு, ஒரு முடிவு என்று ஒரு கட்டமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும்.

     உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களான விட்டோரியா டெ சிக்கா, த்ரூபோ, டேவிட் லீன், சத்யஜித் ரே போன்ற கலைஞர்கள் யதார்த்தபாணிப் படங்களையே எடுத்தார்கள். இவர்கள் ரியலிஸம் எனப்படும் கொள்கையில் இயங்கும் யதார்த்தவாதிகள். இவர்களது  சிந்தனைகள் மரபை மீறி நின்ற போதும், தங்கள் எடுத்துரைக்கும் விவரணையை மரபார்ந்த வகைமையிலேயே கையாண்டார்கள். யதார்த்தவாதம் என்பது அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்கள், சூழ்நிலைகள், மன ஊசலாட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை மிகவும் துல்லியமாக விவரிக்கும் பண்பாகும்.

     அதற்குப் பிறகு வந்தவர்கள் வழக்கமான நேர்க்கோட்டு கதை சொல்லலை மாற்றிப் போட விரும்பினார்கள். புதிய உத்திகள், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு தங்கள் படங்களை எடுத்தார்கள். இவர்களின் பங்களிப்பால் கதை மற்றும் ஆக்கம் போன்றவை மரபிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டன.

     ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஆறே ஷாட்களில் ஒரு முழுத் திரைப்படத்தையும் எடுத்துக் காட்டினார். ‘ரோப்’ என்ற அந்தப் படத்தின் சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதே போல் ஸ்டெடிகாம் என்ற புதிய கேமராவைப் பயன்படுத்தியவரும் அவரே. ‘ஃப்ரென்ஸி’ என்ற திரைப்படத்தில் - உலகிலேயே முதன் முதலாக - அந்தக் காமிராவில் எடுக்கப்பட்ட ஷாட்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தன. ரோமன் பொலான்ஸ்கி ‘ஃப்ராண்டிக்’ என்ற ஆங்கிலப் படத்தை ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸுக்கு இயக்கினார். அந்தப் படத்தில் ஒரு புதுமை செய்தார். காமிரா ஒரே இடத்தில் வைக்கப்பட்டு இருக்கும். கதாபாத்திரங்கள் மட்டும் நகர்வார்கள். காமிராவின் அருகில் ஒரு கதாபாத்திரம் வந்து பேசினால் அது க்ளோஸ்-அப், பேசியவாறே நடந்து தொலைவுக்குப் போனால் லாங்-ஷாட். மீண்டும் காமிராவை நோக்கி நடந்து வந்து பாதியிலேயே நின்றுவிட்டால் அது மிடில் லாங் ஷாட். இந்த ரீதியில் அந்தப் படம் புதுமைத் தன்மையுடன் இருந்தது.

     கதையிலும் புதுமைகள் செய்யப்பட்டன. அமெரிக்க நடிகரும் இயக்குநருமான உடி ஆலன் இயக்கிய ’தி பர்ப்பிள் ரோஸ் ஆஃப் கெய்ரோ’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில்,  சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளரை நோக்கி திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திரையிலிருந்து இறங்கி வெளியே வந்து பேசுகிறார். அதன் பிறகு 3டி படங்கள் வந்தன. கடைசியாக இப்போது திரைப்படங்கள் வேறு ஒரு புதிய பரிமாணத்துக்கு வந்திருக்கின்றன. அதுதான் பார்வையாளனைப் பங்கேற்பவனாக மாற்றும் முறை.

     1968 ஆம் ஆண்டு, ஆர்மீனியாவைச் சேர்ந்த செர்கேய் பரஜினோவ் என்ற இயக்குநர் ஒரு புதுமை செய்தார். அவர் ஒரு படத்தை இயக்கினார். அதன் பெயர் சயாத் நோவா. பொதுவாக நடிகர்கள் நடிக்கும் போது காமிராவைப் பார்க்கக் கூடாது என்பது அடிப்படை விதி. ஏதாவது ஒரு கதாபாத்திரம் நடிக்கும் போது காமிராவைப் பார்த்தால் அவருக்கு நடிக்கத் தெரியவில்லை அல்லது அந்த இயக்குநருக்கு படத்தை இயக்கத் தெரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால், பரஜினோவ் இந்தப் படத்தில் அந்த விதியை மீறினார். அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களான நம்மைப் பார்க்கிறார்கள். நம்முடன் உரையாடுகிறார்கள். இதன் மூலம் பார்வையாளனைப் பங்கு பெறுவோனாக மாற்றிக் காட்டினார் பரஜினோவ். பார்வையாளன் பங்கு பெறுவோனாக மாறியது அனேகமாக இந்தப் படத்தில்தான்.

     அமரஸ் பெரோஸ் என்றொரு தென் அமெரிக்கப்படம். அந்தப் படத்தில் ஒரு விபத்து நடக்கும். அந்த விபத்துக்கு முன்னும் பின்னுமாக என்ன நடந்தது என்று ஒரு கதை விரியும். இதில் கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு பின்னோக்கிப் போகிறது. பின்பு மீண்டும் முன்னோக்கிப் போகிறது. இதனால் கதை பல்வேறு துண்டுகளாக (fragments) ஆகிவிடுகிறது. துண்டாடப்பட்ட அந்த கதைகளை வைத்துக் கொண்டு பார்வையாளன் மனதில் ஒரு கதையை உருவாக்குகிறான். அப்போது பார்வையாளன் பங்கு பெறுவோன் ஆகிறான்.

     அதேபோல், ‘ரன் லோலா ரன்’ என்றொரு படம். அதில் ஒரு கதைக்கு மூன்று முடிவுகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு சாத்தியம். பார்வையாளன் அந்த மூன்றில் தனக்கு வேண்டிய ஏதாவது ஒரு சாத்தியத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இதுவும் பங்கு பெறுதலே.

     ஃப்ரெஞ்சு அறிஞர் பொத்ரியார் டிவி பற்றிக் குறிப்பிடும் போது, ‘நமது இருண்ட அறைகளை இந்த ஊடகம் தனது குளிர்ந்த ஒளியால் நிரப்புகிறது. தனது ஒளிக்கதிர்களால் நம்மைத் துளைத்தபடியே இருக்கிறது. நாம் செயலற்றவர்களாக நம்மையே ஒப்புக் கொடுத்திருக்கிறோம்’ என்றார். இன்றைக்கு டிவி நம்மை செயலற்றவர்களாக வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்திருக்கவில்லை. பங்கு பெறுவோர்களாகவும் ஆக்கி வைத்திருக்கிறது. இன்று டிவிக்கள் நடத்தும் ரியாலிடி ஷோக்கள், டாக் ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் பங்கு பெறுபவர்களாகவும் மாறி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் டிவியைக் கட்டணம் கட்டிப் பார்த்தவர்கள் இப்போது டிவியில் பங்கு பெற கட்டணம் பெறுகிறார்கள் என்பது வியப்புக்குரியது.

     பார்வையாளர்களின் யுகம் முடிந்து விட்டது. இது பங்கு பெறுவோரின் யுகம். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் இரவு விருந்துகளில் முன்பெல்லாம் சாப்பிடுவார்கள். ஒலிக்கும் இசைத்தட்டுகளுக்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள். ஒரு பாடகன் பாட பலர் ஆடுவார்கள். இப்போதோ, ’கரோகே’ என்ற பெயரில் பாடலின் வரிகள் திரையில் தோன்ற, தாங்களும் சேர்ந்து பாடி நடனமாடுகிறார்கள்.

     இதனால் தெரிவது என்னவென்றால் பார்வையாளனும், பங்கேற்பவனும் இரண்டல்ல, ஒன்று என்று மாறிவிட்டார்கள். அப்படித்தானே?

     அப்படியானால், சமூகக்கொடுமைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளனும், சமூக அக்கறையுடன் அதை மாற்றிக் காட்டுவதில் பங்குபெறுவோனாக மாறி விடுவானோ? நடந்தால் நல்லதுதானே.
·       
·                      
   (மௌனம் கலைத்த சினிமா, டிசம்பர், 2011)
                                
    


Friday, January 9, 2015

சைலபதியின் நாவல்
தேவன் மனிதன் லுசிஃபர்

அடிப்படைவாதங்களுக்கு

எதிரான குரல்
*

எம்.ஜி.சுரேஷ்


நாவலாசிரியர்களில் டால்ஸ்டாய் வித்தியாசமானவர். அவரது நாவல்களில் கருத்துகள் முதன்மையாக இடம் பெறும். இதனால் அவரது நாவல்களை கருத்துகளால் ஆன நாவல்கள் (novels of ideas) என்பார்கள். மராத்திய எழுத்தாளர் காண்டேகர், தமிழில் டாக்டர் மு.வ., ஜெயகாந்தன், மலேசிய எழுத்தாளர் நா.கோவிந்தசாமி ஆகியோரையும் இந்த வகைமைக்குள் சேர்க்கலாம். இப்போது புதிதாக ஒருவர் அந்தக் குழுவில் வந்து சேர்ந்திருக்கிறார். தனது முதல் நாவலான, ‘தேவன் மனிதன் லூசிஃபர்’ என்ற நாவலின் மூலம் அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

தனது நாவலின் தலைப்பிலேயே கருத்துக் கூறலை ஆரம்பித்துவிடும் இவர், நாவல் முடியும்வரை அதை விடுவதில்லை. இவரது சிறுகதைகள் வேறுவிதமானவை. அவற்றில் கதையை மீறி எதுவும் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், நாவலைப் பொறுத்தவரை, அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானேகட் சொல்வது போல், ‘Fiction just is not enough anymore’ என்ற தொனி ஒலிக்கிறது. இலக்கிய வரலாற்றில் ஆரம்பத்தில் கதை சொன்னார்கள். பின்பு கதைகளில் கருத்துகளைக கலந்து  சொன்னார்கள். பின்பு கதையிலிருந்து கதையை நீக்கினார்கள். தற்காலத்தில் கதை கூறலின் பல் வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கிறார்கள். இந்நூலாசிரியரும் இந்த நாவலில் வழக்கமான கதை கூறலை மீறிச்செல்ல முயன்றிருக்கிறார். இதுவே இந்த நாவலின் முக்கியத்துவத்தைப் பிரகடனம் செய்கிறது.

இந்த நாவலில் வைதிகமும், கிறித்தவமும் ஒன்றையொன்று குறுக்கு மறுக்காக இடைவெட்டிச் செல்கின்றன. கிறித்தவ மதத்துக்கு மாறும் இந்து இளைஞன் ஹரி. பீட்டர் என்கிற கிறித்தவ இளைஞனை மதம்மாறி மணந்து கொள்ளும் பிராமணப்பெண் காயத்ரி. ஏசுத் திருச்சபையின் தலைமை போதகர் மைக்கேல். நியாயவானாக வாழும் பாஸ்டர் ஜீவானந்தன். பாஸ்கர், நாவலா, ரேவதி, ஸ்ரீவித்யா என்று ஒட்டியும் வெட்டியும் இயங்கும் கதாபாத்திரங்கள். இவர்களுடன் கௌரவவேடம் போல் ஒரு கதாபாத்திரமும் வருகிறது. அது சாத்தான். அடுத்தடுத்த அத்தியாயங்களில் குழந்தை ஏசு, யோசேப்பு, மரியாள் ஆகியோரைப் பற்றி ஒரு விவரணை சொல்லப்படுகிறது. ஆக, காலங்களினூடே முன்னும், பின்னுமாக அலைகிறது கதை.  

பாஸ்டர் மைக்கேல் தான் ஊழியம் புரியும் சர்ச்சில் தனது அதிகார மையத்தைக் கட்டமைக்கும் சாதுர்யம். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் பாஸ்டர் ஜீவானந்தத்தை ஓரங்கட்டும் அற்பத்தனம் போன்ற முரண்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. மதம் என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் தனது உறுப்பினர்களிடையே போட்டிகளை உருவாக்கும். அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதை இலக்காக வைத்து நடக்கும் போட்டி அது. அது ஓர் அரசியல்.

நாவலா பாஸ்கரின் காரியதரிசி. பாஸ்கர் ஏற்கெனவே திருமணமானவன். அவனுக்கும் நாவலாவுக்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியைப் பார்க்கும் ஹரி அதிர்கிறான். விரைவிலேயே அதிர்ச்சி நீங்கி காமத்தூண்டுதல் பெறுகிறான். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இது போன்ற சிக்கலான தருணங்களில் சாத்தான் வந்து சந்திக்கிறான். தவறு செய்வதில் தவறில்லை என்கிறான்.ஒழுக்க மீறலை நியாயப்படுத்துகிறான்.

பெண்கள் தலைமுடியை மூன்று பாகங்களாகப் பிரிப்பார்கள். பின்பு மூன்றையும் ஒன்றான் மேல் ஒன்றாக வைத்துப் பின்னி சடையை உருவாக்குவார்கள். இவரது கதைப்பின்னல் அந்த சடைப்பின்னலை நினைவூட்டுகிறது. ஹரி, பாஸ்கர், நாவலா, ரேவதி என்று ஒரு பகுதி. பாஸ்டர் மைக்கேல், திருச்சபை என்று இன்னொரு பகுதி. யேசு, யோசேப்பு, மரியாள் என்று மூன்றாவது கதைப்பகுதி. ஆக, இந்த மூன்றும் கலந்து உருவானதுதான் இந்த நாவல். சடைக்கு ரிப்பன் வேண்டாமா? அதுதான் சாத்தான். இதில் வரும் சாத்தான் வேறு மாதிரியானவன். இயேசுவை மலை மேல் இழுத்துப் போய் இங்கிருந்து குதி பார்க்கலாம். என்று சோதிக்க விரும்பிய பைபிள்காலத்து சாத்தான் அல்ல. ஜெர்மானிய கவி கதே இயற்றிய ‘ஃபாஸ்ட்’ (Faust) டில் வரும், ஆன்மாவைத் தன்னிடம் விற்குமாறு பேரம் பேசும் சாத்தானும் அல்ல. பின் நவீன யுகத்தில் வாழ நேர்ந்த நீர்த்துப் போன சாத்தான். இவன் மற்றமை அல்ல. சுயத்தின் (ego) மாற்று சுயம் (alter ego).

’ஆலயங்கள் வெறும் ஆலயங்களாக மட்டும் இருப்பதில்லை. அரசர்கள் வெற்றியின் அடையாளங்களாக ஆலயங்களைக் கட்டுகிறார்கள். இல்லை, எதிரியின் ஆலயங்களை இடிக்கிறார்கள். இனங்கள் அழித்தொழிக்கப்படும் போது அவ்வினத்தின் நித்திய அடையாளங்கள் அனைத்தும் ஒரே மூச்சில் அழித்தொழிக்கப்படுகின்றன. இனம் தோற்கிற போது அவர்கள் தெய்வங்களும்தான் தோற்று விடுகின்றன. தோற்ற தெய்வங்களுக்கென்ன கோவில்கள்,…என்று இடித்து விடுகிறார்கள். வென்ற தெய்வங்களுக்கான ஆலயமாக அது மாறிப்போகிறது….’ (பக்கம் 69-70)

யோசேப்பின் கதைப் பகுதியில் வரும் இந்த வரிகள் இஸ்ரவேலுக்கு மட்டுமா பொருந்தும்? பாபர் மசூதிக்கும், சோமநாதர் ஆலயத்துக்கும், இலங்கையில் நடந்த தமிழ் இன அழித்தொழிப்பின் போது இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கும் பொருந்தும். இதுதான் இந்த நாவலின் குரல். இதுதான் அடிப்படைவாதம் உருவாகும் காரணத்தை முன்வைக்கும் குரல். அடிப்படைவாதத்துக்கு எதிரான குரலும் கூட. இந்த நாவலுக்கான இடத்தை உறுதிப்படுத்தும் குரலும் இதுதான்.

மற்றபடி இந்த நாவல் சராசரி கதாபாத்திரங்கள் மூலம் ஒரு சராசரி கதையை ஒரு நேர்க்கோட்டில் அசமந்தத்தன்மையுடன் சொல்லிச் செல்கிறது. ஒரு கதையை மூன்று பகுதிகளாகப் பகுப்பது புதிய உத்தி அல்ல.  சினிமா, டீவி சீரியல் உத்திதான். எனவே இதனை ஒரு வடிவப் பரிசோதனை என்று சொல்ல முடியாது. தனது சிறுகதைகளில் பெற்ற வெற்றியை இந்த நாவலில் இழந்து விடாமல் இவரைக் காப்பது இதில் தொனிக்கும் அடிப்படைவாதத்துக்கு எதிரான குரல்தான். அதிலும் நேரடியாகச் சொல்லிவிடாமல் உணர்த்திக் காட்டுவது பிரச்சார நெடி என்ற அபாயத்திலிருந்து இந்த நாவலைக் காப்பாற்றுகிறது. இதுதான் ஆசிரியரின் பலம். இந்த நாவலின் பலமும் கூட.

*
இராசகுணா பதிப்பகம்
எண் 28 முதலாவது தளம் 36வது தெரு
பாலாஜிநகர் விரிவு சின்னம்மாள்நகர்
புழுதிவாக்கம் சென்னை 600 091
அலைபேசி 9444023182Friday, January 2, 2015


.ஆர். ரஹ்மான் என்றொரு 
பின் நவீன கலைஞன்
*
எம்.ஜி.சுரேஷ்
-           னது முதல் படத்திலேயே இந்தியாவிலுள்ள எல்லா இசை ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தவர் ஏ.ஆர். ரஹ்மான். தொடர்ந்து அந்த கவனத்தைத் தக்க வைத்துக் கொண்டவரும் அவரே. அவரது வரவுக்குப் பின்னர் தமிழ்த்திரை இசை இரண்டாகப் பிரிந்தது. ரஹ்மானுக்கு முன்‘ரஹ்மானுக்குப் பின் என்பதே அது. கறுப்பு வெள்ளைப்படக் காலத்திலிருந்து, இளையராஜா உச்சத்திலிருந்த காலம் வரையிலான திரை இசையை ர.மு. என்றும், ரோஜா படத்திலிருந்து இன்றைய ‘ஸ்லம்டாக் மில்லியனர்வரையிலான காலக்கட்டத்தை ர.பி. என்றும் தயக்கமின்றி நம்மால் பிரித்துப் பார்க்க முடியும்.

     ரஹ்மானுக்கு முன்பு வரை தமிழ்த் திரைப்பட இசை மரபார்ந்த தன்மையுடன் இருந்தது. இசையமைப்பு, இசைக்கோவை, இசைப்பதிவு எல்லாமே மரபார்ந்த அமைப்பிலேயே இருந்தன. இசையமைப்பாளர்கள் அனவரும் கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் கலந்து கட்டி தங்கள் பாடல்களை வழங்கிக் கொண்டிருந்தனர். இச்சூழலில் அந்த மரபை மீறிப் புதுவகை இசையை உருவாக்கியவர் ரஹ்மான். ஸ்டூடியோக்களில் உருவாகிக் கொண்டிருந்த சினிமாவை முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுத்துக் காட்டி சினிமாவை ஸ்டூடியோக்களின்  ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காப்பாற்றியவர் பாரதி ராஜா. அவருக்குப் பின் பல ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. அரிசி மூட்டைகளை அடுக்கி வைக்கும் கிடங்குகளாக மாற்றப்பட்டன. அதேபோல் இசைப்பதிவு என்பதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களை வைத்து ஒரு பெரிய ஸ்டூடியோ ஒலிப்பதிவுக்கூடத்தில்தான் நிகழவேண்டும் என்ற மரபைத் தகர்த்தவர் ரஹ்மான். இசையமைப்பைத் தன் சூட்கேஸில் வைத்துக் கொண்டு ஒரு நடமாடும் ஒலிப்பதிவுக்கூடமாகத் தன்னை அமைத்துக் கொண்டவர் அவர்.
  
     முன்பெல்லாம் இசையமைப்பு என்பது ஒரு பெரிய தொழிற்சாலையை நிர்வகிப்பதைப் போல் இருந்தது. ஏகப்பட்ட வயலின், தாள வாத்தியக்காரர்கள், கிதார், செல்லோ, டிரம் வாசிப்பவர்கள் மற்றும் இவர்களை ஒழுங்குபடுத்தும் கண்டக்டர்கள், மேனேஜர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இத்தனை பேரும் ஒலிப்பதிவுக் கூடத்தில் குழுமி இருப்பார்கள். இசைக் கலைஞர்கள் கண்டக்டரின் கையசைப்புக்கேற்ப வாசிப்பார்கள். ரஹ்மான் வரவுக்கு அப்புறம் எல்லாம் தலை கீழ். தனது சூட்கேஸைத் திறந்து அதிலிருக்கும் தன் கீ போர்டை வருடி, வயலின், கிதார், ட்ரம்ஸ் போன்ற எல்லா ஒலிகளையும் இசைத்துக் காட்டினார் ரஹ்மான். இது மரபைக் கொட்டிக் கவிழ்க்கும் செயல்பாடு. பின் நவீனத்துவத்தின் மற்றொரு கூறு:மனிதம் அற்ற தன்மை (inhuman). பின் நவீன யுகத்தில் மனிதத்தனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. மனிதன் தன் உடலில் காது கேட்கும் கருவி; இதயத்தில் பேஸ் மேக்கர் போன்ற மனிதம் அற்ற கருவிகளைத் தன் உறுப்புகளாக ஏற்றிருக்கிறான். மனிதர்கள் நிறைந்த உலகில் மனிதம் குறைந்து வருகிறது. இதனுடைய நீட்சியாகவே இசைக் கலைஞர்களான மனிதர்கள் செய்வதை கீ போர்ட் என்னும் இயந்திரம் செய்வதாகக் கொள்ளலாம்.   அது மட்டுமல்லாமல், பாடல் வரிகளையே வித்தியாசமாகப் பிரித்துக் காட்டி ரசிகர்களின் பொதுப்புத்தியைத் தகர்த்துக் காட்டினார். உதாரணமாக, முதல்வன் என்றொரு தமிழ்ப்படம். அதில் வரும் ஒரு பாட்டின்  பல்லவி ‘முதல்வனேஎன்பது. அதை ‘வனே ‘வனே ‘முதல்வனே என்று பிரித்துக் காட்டி, இப்படியும் ஒரு சொல்லை உடைத்து இசையாக்க முடியும் என்று நிரூபித்தவர் அவர். இவையெல்லாம் பின் நவீன செயல்பாடுகள் எனலாம்.

    மரபார்ந்த இசையமைப்பாளர்கள் கர்நாடக-இந்துஸ்தானி இசைக் கலவையையே ‘தர்ஜூமா செய்து கொண்டிருந்த போது எகிப்திய, அராபிய, லத்தீன் அமெரிக்க இசையைத் தமிழ் இசையுடன் சேர்த்து வழங்கி ரசிகனை ஒரு புது உலகத்துக்குக் கொண்டு சென்றவர் ரஹ்மான். நிறைய இசையமைப்பாளர்கள் பாடல்களை வெற்றிகரமாக இசைத்து விடுவார்கள். ஆனால், பின்னணி இசையில் கோட்டை விட்டு விடுவார்கள். இரண்டிலுமே தேர்ந்தவர்களாக இளையராஜாவையும் அவருக்குப் பிறகு ரஹ்மானையும் சொல்லலாம். பொதுவாகவே தமிழ் இசை என்பது மரபு சார்ந்தும், இந்து மத பக்தி இலக்கியங்களின் நீட்சியாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் இசைத்துறையில் ஈடுபட விரும்பும் ஒவ்வொரு இசைக் கலைஞனும் இந்து மத பக்திப் பாடல்களையும், தியாகராஜர், புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இசையமைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இருந்தது. அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு இசையமைப்பாளரும் தங்களது அடையாளத்தைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இதனால்தான் ஜேசுதாஸ் போன்ற மகத்தான கலைஞர்கள் கூட குருவாயூர் கோவிலில் பாடுவதன் மூலமே தங்கள் அந்தஸ்து நிர்ணயிக்கப் படுவதாக நம்பினார்கள். திருவையாற்றில் பாடுபவர்களும், சங்கீத சீசனில் மியூசிக் அகடமியில் பாடுபவர்களும் மட்டுமே தூய்மையான இசைக் கலைஞர்கள் என்றும் மற்ற இசைக் கலைஞர்கள் எல்லாம் சும்மா ‘தர்ஜுமாசெய்பவர்கள் என்றும் ஒரு பொதுப் புத்தி உருவாக்கப் பட்டது. அதையொட்டியே தமிழிசையும், தமிழ்த் திரை இசையும் தயாரிக்கப் பட்டு வினியோகிக்கப்பட்டன. இளையராஜா போன்ற மிகப் பெரிய சாதனையாளர்கள் கூட, இந்துத்வா சிந்தனையோடு ஒன்றிணைந்து தங்களது தலித் அடையாளத்தைப் புதைத்துக் கொள்ளவே விரும்பினார்கள். இத்தகைய சூழலில் ரஹ்மானின் எழுச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஒரு பின் நவீனத்துவ எழுச்சி என்றே கூறலாம். இளையராஜாவின் இசையில் தமிழிசை மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு நவீனத்துவ இசையாக மிளிர்ந்தது என்றால்,. ரஹ்மானில் இசையிலோ அது தன்னை நவீனத்திலிருந்து துண்டித்துக் கொண்டு பின் நவீனத்துவ இசையாக உருப்பெற்றிருக்கிறது. அந்த மாற்று இசையே அவரை இன்று ஆஸ்கர் வரை அழைத்துச் சென்றிருக்கிறது.

  திட்டமிட்டு இயங்குவது மரபார்ந்த இசை. சந்தர்ப்பவசமாக அமைவதே பின் நவீன இசை. மரபார்ந்த இசை வடிவ அமைப்பைத் திட்டமிடுகிறது. அதன்படி அமைக்கப்படுகிறது. பின் நவீன இசையோ அமைப்பின் மொத்தப்படுத்தலை நிராகிக்கிறது. துண்டாடல்; தொடர்ச்சியின்மை; இரட்டைக்குறியீட்டுத்தன்மை ஆகியவற்றுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. ரஹ்மானின் இசையில் இத்தகைய தன்மைகள் இருக்கின்றன. 

 இன்றைக்கு ரஹ்மானை பத்திரிகைகள் கொண்டாடுகின்றன. ஆஸ்கர் தமிழன் என்று ஒரு தமிழ் வார இதழ் போற்றுகிறது. இன்னொரு இதழோ தங்கத்தமிழன் இசைத்தமிழன் என்றெல்லாம விதந்தோதுகிறது. இந்தியாவே ரஹ்மானின் வெற்றியைத் தனது வெற்றியாகக்கொண்டாடுகிறது. இந்துத்வாவாதிகளின் மௌன அரசியலையும் மீறி ரஹ்மானின் வெற்றி வானளாவியதாகப் புகழப்படுகிறது. சில வக்கிர புத்தி படைத்தவர்கள், ‘இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா முஸ்லிம்கள் என்றாலே அஞ்சுகிறது. அதனால்தான் ஒபாமா என்ற முஸ்லீமை ஜனாதிபது ஆக்கியது. இப்போது ரஹ்மான் என்ற முஸ்லீமுக்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறது என்று விஷமத்தனமாகப் பேசுகின்றனர் என்ற போதிலும் ரஹ்மானின் வெற்றி உண்மையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. ஆஸ்கர் வெற்றிக்குப் பிறகு ரஹ்மானை யாரும் சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராகப் பார்க்கவில்லை. இந்தியர்கள் அனைவரும் அவரை ஒரு இந்தியராகவும், தமிழராகவும் பார்க்கிறார்கள். இது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல. இந்த நிலையை அடைவதற்கே பல காலங்கள் பிடித்தன. யூசுஃப் கான் என்ற இந்தி நடிகர் தன் பெயரை திலீப் குமார் என்று மாற்றிக் கொண்ட பின்னரே உலகப் புகழ் பெற்ற இந்தி நடிகர் ஆனார். கிறிஸ்தவரான ஒரு நடிகர் தன் பெயரை அசோகன் என்று மாற்றிக் கொண்ட பின்னரே தமிழ்ப் பட உலகில் பெரிய நடிகர் ஆனார். இஸ்லாமியரான ஒரு தமிழ் நடிகர் தன் பெயரை ஆனந்தன் என்று மாற்றிக்கொண்ட பின்னரே பிரபலமடைந்தார். இத்தகைய பிற்போக்கான ஒரு சூழலில் தனது இன்னொரு பெயரான திலீப் குமார் என்பதைத் துறந்து விட்டு இவர் அல்லா ரக்கா ரஹ்மான் என்று தன் பெயரை வைத்துக் கொண்டு திரையுலகில் பிரவேசித்தது ஒரு வியப்பூட்டும் செயல் என்றே தோன்றுகிறது. ஒரு பெரும்பான்மைச் சமூகத்தில் தன்னை ஒரு மற்றமையாக அவர் அறிவித்திருப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தன்னம்பிக்கைதான் அவருக்கு 43 வயதிலேயே 97 விருதுகளை வாங்கித் தந்திருக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான அரங்கில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் சொல்லும் அளவுக்கு ஒரு உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் கவனிக்கத் தவறுகிற விஷயம் ஒன்று இருக்கிறது.  தொடர்ந்து பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வரும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனக்கு எதிரான அத்தனை இடர்பாடுகளையும் கடந்து இந்த இடத்துக்கு வந்து தனது நாட்டுக்கும், தனது இனத்துக்கும் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறான் என்பதையும் மீறி, இது வரை இஸ்லாமிய சமூகத்தைச் சந்தேகக் கண்களோடு பார்த்து வந்த கெட்டி தட்டிப்போன செத்த மூளைகளை இந்தக் கலைஞன் தகர்த்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது. அது மட்டுமல்ல; பயங்கரவாதத்தைப் பொருளாதார அடிப்படையில் அணுகாமல்  மதரீதியாக அணுகும் பயங்கரம்தான் உண்மையான பயங்கரவாதம் ஆகும். இத்தகைய அணுகுமுறையை நமது அரசியல்வாதிகளும், பொதுப் புத்தியை உருவாக்கும் சிந்தனையாளர்களும் கண்டடைவதற்கு ரஹ்மானின் வெற்றி உதவுமானால் அது ஆஸ்கரை விட மிகப் பெரிய விருது கிடைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்லலாம்.

                   (நிகழ்த்தப்பட்ட மரணங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து)