திப்பு சுல்தானின்
கொள்ளுப்பேத்தி
எம்.ஜி.சுரேஷ்
ஹாலிவுட் திரைப்படங்களில் அடிக்கடி காட்டப்படும் காட்சி போல் அது
இருந்தது. நள்ளிரவு நேரம். உயரமான மதில் சுவரின் அருகே அந்த இளம்பெண் தரையில் மண்டியிட்டு
அமர்கிறாள். அவள் முதுகின் பின்னே நிற்கும் ஒரு நாஜி சீருடை அணிந்த அதிகாரி, அவளது
பின்னங்கழுத்தில் தனது பிஸ்டலை வைத்துச் சுடுகிறார். பின்னந்தலையில் இருந்து ரத்தம்
குபுகுபுக்க, அந்தப் பெண் கொஞ்சமும் பயமின்றி, ‘சுதந்திரம்’ என்று ஒரு முறை குரல் கொடுத்துவிட்டுப்
பின்பு ஒரு பொட்டலம் போல் மடிந்து விழுந்து சாகிறாள்.
1944ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சி
வரலாற்றின் புறக்கணிக்கப்பட்ட பக்கங்களுக்குள் போய்ப் புதைந்து கொண்டது.
திப்பு சுல்தானின் பேரன் இனாயத் கான் ஒரு சூஃபி அறிஞர். தேர்ந்த
இசைக் கலைஞரும் கூட. அவர் தனது இந்துஸ்தானி இசையையும், சூஃபிக் கோட்பாட்டையும் மேற்குலகுக்கு
அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு
இல்லை என்ற போதிலும், ஓரா பேக்கர் என்ற இளம்பெண்ணின் காதல் கிடைத்தது. பிறகு அமெரிக்காவிலிருந்து
பிழைப்பைத் தேடி ஐரோப்பாவுக்குப் போன அவருக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்போது அவரது அமெரிக்கக் காதலி ஓராவும் வந்து சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்து
கொண்டனர். அவர்களுகுப் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு நூர் என்று பெயர் வைத்தனர். நூர்
பிறந்த நேரம் ரஷ்யா புரட்சிப் புயலில் சிக்கி இருந்தது. அதன் விளைவாக இனாயத் கான் தன்
மனைவி ஓராவையும், மகள் நூரையும் அழைத்துக் கொண்டு பிரான்ஸ் போய்ச்சேர்ந்தார். அங்கே
நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. மேலும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்
கான் தம்பதிகள்.
தன் மகளுக்கு இலக்கியம், இசை, சூஃபித்தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்
இனாயத் கான். நூர் இளம் பெண்ணாக வளர்ந்த போது ஹிட்லர் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருந்தான்.
உலகமே அவனைக் கண்டு நடுங்கியது. அவனால் உலகப் போர் மூண்டிருந்தது. அந்தத் தருணத்தில்
எந்தப்பெண்ணும் செய்யத்தயங்கும் காரியத்தைச் செய்யத் துணிந்தாள் நூர். ஹிட்லரின் எழுச்சியால்
உலகம் நடுங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நாஜிகளுக்கு எதிராகத் தான் ஏதாவது பங்களிப்பைச்
செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? அந்த நேரத்தில் நூர் மோர்ஸ் தந்தியடிக்கும் கலையைக்
கற்றிருந்தாள். ஓர் எழுத்தாளராக அறிமுகம் அடைந்திருந்தாள். ஜெர்மனியில் யூதர்கள் அழிக்கப்படுவதைக்
கண்டித்து ‘உடைந்த கண்ணாடி’ என்ற தலைப்பில் ஓர் உருவகக் கதை எழுதி இருந்தாள். அவள்
எழுதியதைப் பதிப்பிக்க பதிப்பாளர்களும் தயாராக இருந்தனர். ஆனால், அவள் மனம் வேறு பாதையைத்
தேர்ந்தெடுத்தது.
அவளுக்குத் தெரிந்த மோர்ஸ் தந்திக் கலை விரைவிலேயே அவளை உளவுத்துறையில்
கொண்டு போய்ச்சேர்த்தது. நேச நாடுகளுக்காக பிரான்சிலிருந்து இயங்கும் உளவாளியாக மாறினாள்
நூர். நாஜிகளின் உளவு நிறுவனமான கெஸ்டபோவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினாள். அவரது
கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் பிரிட்டிஷ்காரர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார்.
தலைவலியாக இருந்தார். இவளோ நாஜிகளுக்குத் திருகுவலியாக இருந்தாள். வித விதமான தோற்றங்கள்,
புதுப் புதுப் பெயர்கள் என்று தன்னை மாற்றிக்கொண்டு பிரான்ஸ், லண்டன் என்று திரிந்தாள்.
அவளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் பிராங்குகள் தருவதாக நாஜிகள் அறிவித்தனர்.
கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளது சினேகிதியே இவளைக் காட்டிக் கொடுத்தாள்.
கெஸ்டபோ அவளைக் கைது செய்து ‘ஆபத்தான கைதி’ என்று முத்திரை குத்தி
வதை முகாமுக்கு அனுப்பியது. கொடிய சித்திரவதைக்குப்பின் டச்சாவ் என்ற இடத்தில், ஹிட்லரின்
ஒப்புதலோடு வடிவமைக்கப்பட்ட வதை முகாமில் நூர் சுட்டுக் கொல்லப்பட்டாள். உலகப் போர்
முடிந்த பின்னால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு நூருக்கு பிரான்ஸ் நினைவுச்சின்னம்
அமைத்தது. ஆண்டுதோறும் ராணுவ மரியாதை செய்கிறது. இப்படி ஒரு இந்தியப்பெண் இருந்தாள்,
உலகப் போரின் போது நாஜிகளுக்கு எதிராகப் போராடி உயிர் துறந்தாள் என்ற செய்தி நம்மிடையே
பெரிதாக கவனப்படுத்தப்படவில்லை. சானா கான், முமைத் கான் என்று கிறங்கிக் கொண்டிருக்கும்
நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு நூர் இனாயத் கானின் வரலாறு என்றைக்கு எட்டும் என்று
தெரியவில்லை.
<<>>
(வெளிவர இருக்கும் ‘நிகழ்த்தப்பட்ட மரணங்கள்’ தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment