Friday, January 9, 2015

சைலபதியின் நாவல்
தேவன் மனிதன் லுசிஃபர்





அடிப்படைவாதங்களுக்கு

எதிரான குரல்
*

எம்.ஜி.சுரேஷ்


நாவலாசிரியர்களில் டால்ஸ்டாய் வித்தியாசமானவர். அவரது நாவல்களில் கருத்துகள் முதன்மையாக இடம் பெறும். இதனால் அவரது நாவல்களை கருத்துகளால் ஆன நாவல்கள் (novels of ideas) என்பார்கள். மராத்திய எழுத்தாளர் காண்டேகர், தமிழில் டாக்டர் மு.வ., ஜெயகாந்தன், மலேசிய எழுத்தாளர் நா.கோவிந்தசாமி ஆகியோரையும் இந்த வகைமைக்குள் சேர்க்கலாம். இப்போது புதிதாக ஒருவர் அந்தக் குழுவில் வந்து சேர்ந்திருக்கிறார். தனது முதல் நாவலான, ‘தேவன் மனிதன் லூசிஃபர்’ என்ற நாவலின் மூலம் அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

தனது நாவலின் தலைப்பிலேயே கருத்துக் கூறலை ஆரம்பித்துவிடும் இவர், நாவல் முடியும்வரை அதை விடுவதில்லை. இவரது சிறுகதைகள் வேறுவிதமானவை. அவற்றில் கதையை மீறி எதுவும் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், நாவலைப் பொறுத்தவரை, அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானேகட் சொல்வது போல், ‘Fiction just is not enough anymore’ என்ற தொனி ஒலிக்கிறது. இலக்கிய வரலாற்றில் ஆரம்பத்தில் கதை சொன்னார்கள். பின்பு கதைகளில் கருத்துகளைக கலந்து  சொன்னார்கள். பின்பு கதையிலிருந்து கதையை நீக்கினார்கள். தற்காலத்தில் கதை கூறலின் பல் வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கிறார்கள். இந்நூலாசிரியரும் இந்த நாவலில் வழக்கமான கதை கூறலை மீறிச்செல்ல முயன்றிருக்கிறார். இதுவே இந்த நாவலின் முக்கியத்துவத்தைப் பிரகடனம் செய்கிறது.

இந்த நாவலில் வைதிகமும், கிறித்தவமும் ஒன்றையொன்று குறுக்கு மறுக்காக இடைவெட்டிச் செல்கின்றன. கிறித்தவ மதத்துக்கு மாறும் இந்து இளைஞன் ஹரி. பீட்டர் என்கிற கிறித்தவ இளைஞனை மதம்மாறி மணந்து கொள்ளும் பிராமணப்பெண் காயத்ரி. ஏசுத் திருச்சபையின் தலைமை போதகர் மைக்கேல். நியாயவானாக வாழும் பாஸ்டர் ஜீவானந்தன். பாஸ்கர், நாவலா, ரேவதி, ஸ்ரீவித்யா என்று ஒட்டியும் வெட்டியும் இயங்கும் கதாபாத்திரங்கள். இவர்களுடன் கௌரவவேடம் போல் ஒரு கதாபாத்திரமும் வருகிறது. அது சாத்தான். அடுத்தடுத்த அத்தியாயங்களில் குழந்தை ஏசு, யோசேப்பு, மரியாள் ஆகியோரைப் பற்றி ஒரு விவரணை சொல்லப்படுகிறது. ஆக, காலங்களினூடே முன்னும், பின்னுமாக அலைகிறது கதை.  

பாஸ்டர் மைக்கேல் தான் ஊழியம் புரியும் சர்ச்சில் தனது அதிகார மையத்தைக் கட்டமைக்கும் சாதுர்யம். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் பாஸ்டர் ஜீவானந்தத்தை ஓரங்கட்டும் அற்பத்தனம் போன்ற முரண்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. மதம் என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் தனது உறுப்பினர்களிடையே போட்டிகளை உருவாக்கும். அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதை இலக்காக வைத்து நடக்கும் போட்டி அது. அது ஓர் அரசியல்.

நாவலா பாஸ்கரின் காரியதரிசி. பாஸ்கர் ஏற்கெனவே திருமணமானவன். அவனுக்கும் நாவலாவுக்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியைப் பார்க்கும் ஹரி அதிர்கிறான். விரைவிலேயே அதிர்ச்சி நீங்கி காமத்தூண்டுதல் பெறுகிறான். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இது போன்ற சிக்கலான தருணங்களில் சாத்தான் வந்து சந்திக்கிறான். தவறு செய்வதில் தவறில்லை என்கிறான்.ஒழுக்க மீறலை நியாயப்படுத்துகிறான்.

பெண்கள் தலைமுடியை மூன்று பாகங்களாகப் பிரிப்பார்கள். பின்பு மூன்றையும் ஒன்றான் மேல் ஒன்றாக வைத்துப் பின்னி சடையை உருவாக்குவார்கள். இவரது கதைப்பின்னல் அந்த சடைப்பின்னலை நினைவூட்டுகிறது. ஹரி, பாஸ்கர், நாவலா, ரேவதி என்று ஒரு பகுதி. பாஸ்டர் மைக்கேல், திருச்சபை என்று இன்னொரு பகுதி. யேசு, யோசேப்பு, மரியாள் என்று மூன்றாவது கதைப்பகுதி. ஆக, இந்த மூன்றும் கலந்து உருவானதுதான் இந்த நாவல். சடைக்கு ரிப்பன் வேண்டாமா? அதுதான் சாத்தான். இதில் வரும் சாத்தான் வேறு மாதிரியானவன். இயேசுவை மலை மேல் இழுத்துப் போய் இங்கிருந்து குதி பார்க்கலாம். என்று சோதிக்க விரும்பிய பைபிள்காலத்து சாத்தான் அல்ல. ஜெர்மானிய கவி கதே இயற்றிய ‘ஃபாஸ்ட்’ (Faust) டில் வரும், ஆன்மாவைத் தன்னிடம் விற்குமாறு பேரம் பேசும் சாத்தானும் அல்ல. பின் நவீன யுகத்தில் வாழ நேர்ந்த நீர்த்துப் போன சாத்தான். இவன் மற்றமை அல்ல. சுயத்தின் (ego) மாற்று சுயம் (alter ego).

’ஆலயங்கள் வெறும் ஆலயங்களாக மட்டும் இருப்பதில்லை. அரசர்கள் வெற்றியின் அடையாளங்களாக ஆலயங்களைக் கட்டுகிறார்கள். இல்லை, எதிரியின் ஆலயங்களை இடிக்கிறார்கள். இனங்கள் அழித்தொழிக்கப்படும் போது அவ்வினத்தின் நித்திய அடையாளங்கள் அனைத்தும் ஒரே மூச்சில் அழித்தொழிக்கப்படுகின்றன. இனம் தோற்கிற போது அவர்கள் தெய்வங்களும்தான் தோற்று விடுகின்றன. தோற்ற தெய்வங்களுக்கென்ன கோவில்கள்,…என்று இடித்து விடுகிறார்கள். வென்ற தெய்வங்களுக்கான ஆலயமாக அது மாறிப்போகிறது….’ (பக்கம் 69-70)

யோசேப்பின் கதைப் பகுதியில் வரும் இந்த வரிகள் இஸ்ரவேலுக்கு மட்டுமா பொருந்தும்? பாபர் மசூதிக்கும், சோமநாதர் ஆலயத்துக்கும், இலங்கையில் நடந்த தமிழ் இன அழித்தொழிப்பின் போது இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களுக்கும் பொருந்தும். இதுதான் இந்த நாவலின் குரல். இதுதான் அடிப்படைவாதம் உருவாகும் காரணத்தை முன்வைக்கும் குரல். அடிப்படைவாதத்துக்கு எதிரான குரலும் கூட. இந்த நாவலுக்கான இடத்தை உறுதிப்படுத்தும் குரலும் இதுதான்.

மற்றபடி இந்த நாவல் சராசரி கதாபாத்திரங்கள் மூலம் ஒரு சராசரி கதையை ஒரு நேர்க்கோட்டில் அசமந்தத்தன்மையுடன் சொல்லிச் செல்கிறது. ஒரு கதையை மூன்று பகுதிகளாகப் பகுப்பது புதிய உத்தி அல்ல.  சினிமா, டீவி சீரியல் உத்திதான். எனவே இதனை ஒரு வடிவப் பரிசோதனை என்று சொல்ல முடியாது. தனது சிறுகதைகளில் பெற்ற வெற்றியை இந்த நாவலில் இழந்து விடாமல் இவரைக் காப்பது இதில் தொனிக்கும் அடிப்படைவாதத்துக்கு எதிரான குரல்தான். அதிலும் நேரடியாகச் சொல்லிவிடாமல் உணர்த்திக் காட்டுவது பிரச்சார நெடி என்ற அபாயத்திலிருந்து இந்த நாவலைக் காப்பாற்றுகிறது. இதுதான் ஆசிரியரின் பலம். இந்த நாவலின் பலமும் கூட.

*
இராசகுணா பதிப்பகம்
எண் 28 முதலாவது தளம் 36வது தெரு
பாலாஜிநகர் விரிவு சின்னம்மாள்நகர்
புழுதிவாக்கம் சென்னை 600 091
அலைபேசி 9444023182



No comments:

Post a Comment