king jong un
*
இடதுசாரி மன்னரின்
அ ந் த ப் பு ர ம்
*
எம்.ஜி.சுரேஷ்
மன்னராட்சிக் காலத்தில் பெண்கள் ஆணின் உடைமைகளாக, போகப் பொருள்களாக
இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். இன்றைய நாகரிக யுகத்திலும் அந்தப்புரங்கள் இருக்கின்றன,
அதில் பெண்கள் அலங்காரப் பதுமைகளாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு வியப்பூட்டும்
செய்தியாகும். எகிப்திய அதிபர் கடாஃபி கொல்லப்பட்டபோது,அவரது அரண்மனையிலிருந்து பல
அழகான இளம்பெண்கள் விடுவிக்கப்பட்டார்கள். அதேபோல், முன்னாள் இத்தாலிய அதிபர் பெர்லுஸ்கோனி
பல அழகிகளுடன் தகாத உறவுகள் வைத்திருந்ததால் பெயர் கெட்டுப்போய் மூலையில் உட்கார வைக்கப்பட்டார்.
இவர்களெல்லாம் முதலாளியவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம். ஆனால்,
கம்யூனிஸ்டுகளின் தலைவர் ஒருவரே அப்படி இருக்கிறார் என்பது அதிர வைக்கும் விஷயமாக்கும்.
வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் யூன் தனக்கென்று ஓர் அந்தப்புரத்தை
உருவாக்கி இருக்கிறார் என்பது நம்பமுடியாத உண்மையாகும். ஜாங் சாதாரணமான குடும்பத்திலிருந்து
வந்தவர் அல்ல. பாரம்பரியம் மிக்க கம்யூனிஸ்ட் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய
அப்பா முன்னாள் கொரியாவின் அதிபர். அவருடைய தாத்தாவும் முன்னாள் அதிபரே. 2010 ஆம் ஆண்டு
இவரது தாத்தா காலமானபோது இவர் அதிபரானார். ‘இவர் தனது தாத்தா, அப்பா ஆகியோரைப் போலவே,
கருத்தியல், தலைமைப்பண்பு, நற்குணங்கள், மன உறுதி ஆகியவற்றுடன் இருப்பதாக’ இவர் பதவி
ஏற்றபோது கொண்டாடப்பட்டார். ஆனால், அந்தப்புரம் அமைக்கும் அளவுக்கு முற்போக்காக இருப்பார்
என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சோவியத் யூனியனில் புரட்சி நடந்து, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு
வந்த போது அக்கம் பக்கத்திலிருந்த நாடுகளான வியத்நாம், கொரியா போன்ற நாடுகளும் கம்யூனிசத்தின்
கைகளில் விழுந்தன. உலகமே கம்யூனிசமயமாகப் போகிறது என்ற எண்ணம் உலகத்தைக் கலக்கியது.
கொரியாவின் முதல் அதிபராக கிம் இல் சுங் பதவி ஏற்றபோது உலகம் அவரை ஒரு லெனின் போல்
பார்த்தது. கொரியாவை வறுமையிலிருந்து நல்ல நிலைமைக்கு அவர்தான் உயர்த்தினார். 46 ஆண்டுகளவர்
வடகொரியாவின் அதிபராக இருந்தார். வெகு காலம் அதிகாரம் ஒருவர் கையில் இருந்தால் அது
துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் இருக்கிறது போலும். பொதுவாக ஒரு மனிதன் ஒழுங்காக
இருக்க விரும்பினாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை. மரம் சும்மா இருக்க விரும்பினாலும்
காற்று விடுவதில்லை. அதன் விளைவாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
32 வயதான இவருக்கு ஓர் ‘இன்பக்குழு’ தேவையாம். அதற்காக, இளம்
பெண்களை நியமிக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறார். ஊரில் உள்ள இளம் அழகிகளின் பட்டியல்
தயாராகிக் கொண்டிருக்கிறதாம். இத்தனைக்கும் இவர் ஏற்கெனெவே திருமணமானவர். ஒரு பாடகியை
மணந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகவும் இருக்கிறார். இவர் அப்படிச் செய்வதில்
திடுக்கிட ஒன்றும் இல்லை. இவர் தந்தையார் கிம் ஜாங் இல்லும் இப்படிப்பட்டவர்தான். அவர்காலத்தில்
அரசு ஊழியர்களின் வேலை, தலைவருக்கு அழகான இளம் பெண்களை வேட்டையாடித் தருவதுதான். பழைய
தலைவர் காலமானதும், அவரது ‘இன்பக்குழு’ இழுத்து மூடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப்
பிறகு புதிய இன்பக்குழுவின் சேவை உணரப்பட்டதால், அதற்கான வேலைகள் நடக்கின்றன.
இந்தப் பழக்கம் இவரது தாத்தா கொரிய அதிபராக இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது
என்றும் ஒரு கருத்து உலவுகிறது. அவர் காலத்தில் இன்பக்குழுவைத் தேடிப்பிடிக்க ஒரு அலுவலர்குழுவே
முழு வீச்சில் இயங்கியதாம். அவர்கள் ஆண்டுக்கு முப்பது, நாற்பது அழகிய பெண்களை அள்ளிக்கொண்டு
வருவார்களாம். அவர்களுக்கு நேர்முகத்தேர்வின் மூலம் தகுதிக்கேற்ப பணிப்பெண், பாடகி,
நடன மங்கை போன்ற பதவிகள் தரப்படுமாம். அவர்களில் மிக அழகான பெண் தலைவரின் ஆசை நாயகியாக
அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ளப்படுவாளாம்.. புதிய பெண்கள் வர வர பழைய பெண்கள் கீழே
இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவார்களாம். ஒவ்வொரு பெண்ணுக்கு 4,000 டாலர்
சன்மானமும், வீட்டுக்கான பொருட்களும் வழங்கப்படுமாம்.
ஜனநாயகமோ அல்லது கம்யூனிசமோ எந்த ஆட்சியாக இருந்தாலும் அதிகாரம்
கைக்கு வரும் போது மனிதன் ஒரேமாதிரிதான் நடந்து கொள்கிறான் என்று தெரிகிறது. அதிகாரம்
ஓர் இடத்தில் குவியும் போது இது தவிர்க்க முடியாதுதான். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்
என்ற பெயரில் அதிகார மையம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது.
சோவியத் உடைந்தது.
நாளைய தினம் வட கொரியாவில் மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து
எழுந்தால் கம்யூனிசத்துக்கு எதிரான மக்கள் புரட்சி என்றே அது பார்க்கப்படும். அது கம்யுனிசக்
கோட்பாட்டுக்கு நல்லதல்லவே.
எனவே, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு முக்கியமான விஷயம். இது
பற்றி கம்யூனிஸ்டுகள் சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment