Friday, April 10, 2015

ஜெயகாந்தன் 

நினைவுகள்

எம்.ஜி.சுரேஷ்
*

·       
இன்று தலித் இலக்கியம் என்று அறியப்படும் எழுத்துகளை 
அறுபதுகளிலேயே அவரால் எழுத முடிந்திருக்கிறது. 
அவரால் ஏக காலத்தில் தலித் சமூகம் சார்ந்த கதையையும், 
பிராமண சமூகம் சார்ந்த கதையையும் எழுத முடிந்தது 
என்பது குறிப்பிடத்தக்கது.
*


ஜெயகாந்தன் காலமாகிவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்த போது நான் ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டேன். சில வினாடிகளில் மீண்டேன். யோசித்துப் பார்க்கையில், அவருக்கும் எனக்குமான பரிச்சயம் என் மனத்தில் மின் வெட்டாய் ஒடி மறைந்தது.

அவர் மரணம் என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. ஏனெனில், அவர் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர். தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சமூகத்தையும் செதுக்க வந்தவர். சமரனில் எழுதினாலும், குமுதத்தில் எழுதினாலும் ஒரே அடர்த்தியிலான கதைகளை எழுதியவர். தமிழ்ச்சூழலில் வெறும் எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். வாழ்நாளில் ஒரு தமிழ் எழுத்தாளன் அடையமுடியாத கௌரவங்களையும் அடைந்தவர். தமிழ்நாட்டைக் கடந்து வெளியேயும் புகழ் பெற்றவர். விருதுகள் அவர் காலடியில் வந்து விழுந்தன. அவர் ஒரு சகாப்தமாக இருந்தவர். இதற்கு மேல் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வேறு என்ன வேண்டும்? மரணம் என்பது ஒரு உயிரியல் மாற்றம். அது அவர் உடலுக்கு மட்டுமே தவிர, அவரது பிரதிகளுக்கல்லவே?

எழுபதுகளில் படித்து முடித்துவிட்டு, மேற்கொண்டும் படிக்க முடியாமல், வேலைக்கும் போகாமல் திரிந்து கொண்டிருந்த எனக்கு நூலகங்கள்தான் புகலிடங்களாக இருந்தன. எதிர்ப்படும் எந்தக் காகிததையும் கடித்துத் தின்றுவிடும் புத்தகப்பூச்சியைப் போல் நான் இருந்தேன். வெகு ஜன இதழ்கள், சிற்றிதழ்கள், நாளிதழ், வார இதழ் என்று எது கையில் கிடைத்தாலும் நான் விடுவதில்லை. முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை படித்து விடுவேன். பொருளாதாரச் சிக்கல்களில் நசுங்கிக் கொண்டிருந்த எனக்குப் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுதலையைப் பெற இந்தச் செயல்பாடு  உதவியது. எனக்கே தெரியாமல் வாசிப்பு ஒரு தெரபியைப் போல் எனக்குப் பயன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த வாசிப்பின் மூலம் பலவிதமான பிரதிகளை நான் கடந்து செல்ல நேர்ந்தது. பெரும்பாலோரைப் போலவே, நானும், கல்கி, அகிலன், நா.பா., சாண்டில்யன், ராஜேந்திரகுமார் (ராஜேஷ்குமார் அல்ல) ஸ்ரீவேணுகோபாலன், ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் அடர்த்தி குறைவான கதைகளைப் படித்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது.

என்னுடைய மாமா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் என்று வாசிப்பவர். அவர் ஜெயகாந்தனின் ரசிகர். அவர் மூலம்தான் எனக்கு மார்க்ஸியமும் அறிமுகமானது. ஜெயகாந்தனும் அறிமுகமானார்.

நான் மாமா வீட்டில் வளர்ந்தேன். மாமா வாரா வாரம் ஜன சக்தி, தாமரையுடன் குமுதம், விகடனும் வாங்குவார். விகடனில் அப்போதெல்லாம் முத்திரைக் கதைகள் வெளிவரும்.  ஜெயகாந்தன் எழுதிய முத்திரைக் கதைகள் அடிக்கடி வரும். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை உரக்க வாசிக்குமாறு மாமா என்னிடம் சொல்லுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். நான் அருகில் தரையில் உட்கார்ந்து உரக்க வாசிப்பேன். வாசித்து முடித்ததும் அந்தக் கதையைப் பற்றி என்னிடம் பேசுவார். இப்படித்தான் ஜெயகாந்தனின் கதைகள் எனக்கு அறிமுகமாயின.

ஒருதடவை ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் ‘இருளில் ஒரு துணை’ என்ற கதை வெளியாகி இருந்தது. கோபுலுவின் கோட்டோவியம். இந்தக் கணத்திலும் விகடனின் அந்தப் பக்கம் என் நினைவில் துலக்கமாக இருக்கிறது. அந்தக் கதையையும் நான் மாமாவுக்காக உரக்க  வாசித்தேன். கதையை வாசித்து முடித்ததும் மாமா சொன்னார். ‘இது தியாகராஜ பாகவதரின் கடைசிக்காலம். அதை வைத்து எழுதி இருக்கிறார்’ இந்த விஷயத்தை இதைவிட யாரும் இவ்வளவு சிறப்பாக எழுதி விட முடியாது. நம்ப ஊரு மாக்ஸிம் கார்க்கி இவர்’ என்றார்.

அதன் பிறகு ஜெயகாந்தன் எழுதும் எழுத்து எந்தப் பத்திரிகையில் வெளி வந்தாலும், அதைத் தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன்.      அதன்பிறகு வேறு யார் கதைகளிலும் எனக்கு ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. பின்பு என் மாமா மூலம் ருஷ்ய இலக்கியம் எனக்குப் பரிச்சயமாயிற்று. மாக்ஸிம் கார்க்கி, செகாவ், கோகோல் தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் என்று எனது வாசிப்பு விஸ்தாரமானது.  அப்போதுதான் ஜெயகாந்தன் உலகத்தரத்தில் எழுதுகிறார் என்று தெரிந்து கொண்டேன். எனக்கும் அதுபோல் கதைகள் எழுதவேண்டும் என்று ஆசை வந்தது. இருந்தாலும் அதற்கான தைரியம் இல்லை.

தீபம், தாமரை போன்ற இதழ்களில் ஓரிரு கவிதைகள் எழுதினேன். அதன் மூலம் ஒரு நண்பர் எனக்குக் கிடைத்தார். அவர் பெயர் இளவேனில். அவர் கார்க்கி என்ற இடது சாரி இலக்கிய இதழ் நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு சிறுகதை கொடுக்குமாறு கேட்டார். நான் திகைத்தேன். நானா… சிறுகதையா, அதெல்லாம் நமக்கு வருமா.. என்று யோசித்தேன். அவர் கொடுத்த தைரியத்தில் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதை இளவேனிலுக்குப் பிடித்தது. அது உடனே வெளி வந்தது.

ஜெயகாந்தன் ஆரம்பத்தில் சமரன், சரஸ்வதி போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளில் கதைகள் எழுதினார்.  அவரது எழுத்துகள் கல்கி, விகடன் போன்ற பத்திரிகைகளின் கதைகளுக்கு மற்றமையாக (other) இருந்தன. பின்னர் அதே மாதிரி கதைகளை விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளிலும் எழுதி அனைவரையும் திடுக்கிட வைத்தார்.  இன்று தலித் இலக்கியம் என்று அறியப்படும் எழுத்துகளை அறுபதுகளிலேயே அவரால் எழுத முடிந்திருக்கிறது. அவரால் ஏக காலத்தில் தலித் சமூகம் சார்ந்த கதையையும், பிராமண சமூகம் சார்ந்த கதையையும் எழுத முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது. அதுவும் நிறைவேறியது.

இளவேனிலுக்கு ஜெயகாந்தனுடன் பரிச்சயம் உண்டு. அவர் மூலம் எனக்கு ஜெயகாந்தனின் பரிச்சயம் கிடைத்தது. ரஜினி ரசிகனுக்கு ரஜினியின் நேர்ப்பழக்கம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பிறகு அவரை அடிக்கடி நான் போய்ப்பார்க்க ஆரம்பித்தேன். என்னைத் தனியாக ‘சுரேஷ்’ என்று அழைத்துப் பேசும் அளவுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்தும் கொண்டேன். அப்போது சென்னை, எல்டாம்ஸ் ரோடு முடியும் இடத்தில், சற்றுத் தள்ளி வலது புறம் இருந்த ஒரு வீட்டின் மாடியில் அவரது அலுவலகம் இருந்தது. அங்கு நான் தினமும் போய்விடுவேன். ம.வே.சிவகுமார், விமலாதித்த மாமல்லன், சி.ஏ.பாலன், எடிட்டர் லெனின், இயக்குநர் கே.விஜயன் என்று பலர் அங்கு வருவார்கள்.

எழுபதுகளில் சிறுபத்திரிகைகள் மூலம் சுந்தரராமசாமி, சா. கந்தசாமி, நகுலன், பிரமிள் போன்ற தீவிர இலக்கியவாதிகள் பலருடைய பிரதிகளையும் நான் அடையாளம் கண்டுகொண்டேன். க.நா.சு வின் எழுத்துகளின் பரிச்சயமும், அவரது நேர்ப்பழக்கமும் ஏற்பட்டன. ஜெயகாந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார் அவரைத் தீவிர இலக்கியவாதிகளுடன் சேர்க்க முடியாது என்றெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை. எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் ஜெயகாந்தன் ஜெயகாந்தன்தான் என்றே எனக்குத் தோன்றும். அவரது கதைகள் வெகுஜனப் பத்திரிகைகளுக்குத் தீனி போடுவதற்காக எழுதப் பட்டவை அல்ல. மாறாக, வெகுஜனப் பத்திரிகைகளின் தரத்தை உயர்த்திய கதைகள்.

அதன் பிறகு எனக்கு உலக இலக்கியம், பின் நவீனத்துவம் போன்ற பல விஷயங்கள் பரிச்சயமாயின. அவை என்னை மலைக்க வைத்தன. அப்போதும் கூட ஜெயகாந்தனின் மீதான எனது வியப்பு குறையவே இல்லை. அதுதான் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரின் ஆளுமை என்று எனக்குப்படுகிறது. இந்த ஆளுமை தனித்துவமானது. ஓரிரு வருஷங்கள் எழுதாமல் இருந்தாலே, ஒரு எழுத்தாளனை மறந்துவிடும் சமூகம் நம் தமிழ்ச் சமூகம். ஜெயகாந்தன் கிட்டத்தட்ட 40 வருஷங்கள் எழுதாமலேயே இருந்திருக்கிறார். இருந்தும் அவருக்கான புகழோ, பெருமையோ சற்றும் குறைந்துவிடவில்லை என்பது முக்கியமானது. மறுவாசிப்பில் புதுமைப்பித்தனையும், சுந்தரராமசாமியையும் குற்றம் சொல்பவர்கள் கூட ஜெயகாந்தன் மேல் குறைகள் எதும் சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது அரசியல் கொள்கைகள், சார்ந்து நின்ற கருத்தியல்கள் யாவும் சர்ச்சைக்குரியனவாக இருந்த போதிலும், அவரது கலை ஆளுமை எப்போதும் சிறப்பானதாகவே இருந்திருக்கிறது. அவரது எதிரிகள் கூட அவரை ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

ஜெயகாந்தன் திமிர் பிடித்தவர் என்றும், யாரையும் மதிக்காதவர் என்றும் அவருக்கு ஒரு படிமம் உண்டு. ஆனால், பழகுவதற்கு இனிய நண்பர் என்பதை அவரை நன்கறிந்த பலரும் அறிவார்கள். அவர் மனம் நுட்பமானது. எளிதில் எரிச்சலடைந்து விடுவார். பார்ப்பதற்கு அது கர்வம் போல் தோன்றும்.

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு சாகித்ய அகடமி பரிசு கிடைத்த போது அதைக் கிண்டல் செய்து ‘பிரம்ம தரிசனம்’ என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதினேன். ஜெயகாந்தன் கோப்படுவார் என்றே நினைத்தேன். பயந்து அவரைப் பார்க்காமல் இருந்தேன். நண்பர்களிடம் சொல்லி என்னை வரச்சொல்லி அனுப்பினார். அதை அவர் சகஜமாக எடுத்துக் கொண்டார். ‘நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர். இந்த மாதிரியெல்லாம் எழுதி உங்கள் திறமையை வீணாக்க வேண்டாமே’ என்று சிரித்துக் கொண்டே அன்புடன் சொன்னார்.

என்னுடைய கான்க்ரீட்வனம் என்ற நாவலுக்கு முன்னுரை எழுதினார். அதில் என்னை புதுமைப்பித்தனுடன் ஒப்பிட்டு எழுதி இருந்தார். என்னுடைய அட்லாண்டிஸ் மனிதன் என்ற நாவலை வெளியிட்டு என்னைப் புகழ்ந்து பேசினார். இதெல்லாம் அவர் எனக்குத் தந்த கௌரவங்கள்.

மௌனி எழுதிய ‘மாறுதல்’ என்ற கதை அவருக்குப் பிடிக்கும். மரணம் என்பது மாறுதல் என்ற கோணத்தில் மௌனி அந்தக் கதையை எழுதியிருப்பார். தான் விரும்பிய சிறுகதை கூறுவது போலவே, ஜெயகாந்தன் மரணம் என்ற மாறுதலை எய்திவிட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பொருள் ஸ்தூலமாக இருக்கிறது. அப்போது அது சொரூபம். பின்பு, ஸ்தூலத்தன்மையை இழக்கிறது. அப்போது அது அரூபம். சொரூபமாக இருந்த ஜெயகாந்தன் அரூபமாகிவிட்டார். இருத்தல் என்பது சொரூபமாக இருப்பது மட்டுமல்ல. அரூபமாக இருப்பதும் கூட. சாதாரண மனிதர்கள் சொரூபமாக இருக்கும்போது தெரிவார்கள். அரூபமானதும் காணாமல் போய்விடுவார்கள். அரூபமான பின்பும் இருப்பவர்கள் வெகுசிலரே. கம்பன். சேக்ஸ்பியர், செகாவ் ஆகியோரைத் தொடர்ந்து ஜெயகாந்தனும், தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து அரூபமாக  இருந்து கொண்டிருப்பார். அது போதும் என்று தோன்றுகிறது.

                     <><><><><>

1 comment:

  1. /இருத்தல் என்பது சொரூபமாக இருப்பது மட்டுமல்ல. அரூபமாக இருப்பதும் கூட. சாதாரண மனிதர்கள் சொரூபமாக இருக்கும்போது தெரிவார்கள். அரூபமானதும் காணாமல் போய்விடுவார்கள். அரூபமான பின்பும் இருப்பவர்கள் வெகுசிலரே. கம்பன். சேக்ஸ்பியர், செகாவ் ஆகியோரைத் தொடர்ந்து ஜெயகாந்தனும், தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து அரூபமாக இருந்து கொண்டிருப்பார். அது போதும் என்று தோன்றுகிறது/.
    மாஸ்டர் பீஸ் வரிகள். தொடர்ந்து எழுதுங்கள் எம் ஜி சுரேஷ் சார், நான் உங்கள் தீவிர வாசகன். தெளிந்த நீரோடைக்குக் கீழ் கூழாங்கள் மின்னுவது போல தெளிவான விளக்கம், மொழி, நடை என்னைக் கவர்கிறது.
    அன்புடன், கோ.புண்ணியவான்.

    ReplyDelete