Friday, March 27, 2015

on every saturday

மலேஷியக் கவிஞர் 
கோ. புண்ணியவானின் 
கவிதைத் தொகுப்பு
*

                 இடறிய விரல்கள்
எம்.ஜி.சுரேஷ்
 * * *

ந்தக் கவிதைத் தொகுப்பு என் கைகளில் தன்னை விரித்துக் கொண்டு என்னை உற்றுப் பார்க்கிறது. பதிலுக்கு நானும் பார்க்கிறேன்.பின்பு, கவிதைகளை வாசிக்கவும் செய்கிறேன். எனக்குள் தோன்றுகிறது.

கவிஞர் புண்ணியவான் பல ஆண்டுகளாகத் தமிழில் இயங்கி வருபவர். சிறப்பான கவிதைகள் பல எழுதியவர். ஆனால் அவரது கவிதைகளையும் அவரது பெயரையும் இத்தனை காலம்  நான் கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இந்த எண்ணம் வந்ததும் நான் வெட்கமடைகிறேன்.

இது நேர்ந்தது எதனால்?

கணங்கள் தோறும் கவிதைகள் மனசில் சூல் கொள்கின்றன. அவற்றில் சில கருவாகி, உருவாகி கை நழுவி வெளியே வந்து காகிதத்தில் விழுந்து திருவாகின்றன.   வெளிப்படுத்தப்பட்ட கவிதைகள் தனது வாசகனைத் தேடிப் படபடக்கும் தாள்களில் காத்திருக்கின்றன. அவற்றில் சில தன்னைத் தேர்ந்து கொள்ளும் வாசகனின் மனதைத் தொடுகின்றன. அவை அவர்களுக்காக எழுதப்பட்டவை.  சில தொடாமல் எட்டி நிற்கின்றன. ஏனெனில், அவை அவர்களுக்காக எழுதப்படவில்லை.  எனினும், கவிஞர்கள் பலர் முகம் தெரியாத வாசகனுக்காகத்  தங்கள் கவிதைகளைத் தொடர்ந்து எழுதவே செய்கின்றனர்.

ஒவ்வொரு கவிதைக்கும் அதை உருவாக்கிய  ஒரு கவிஞன் இருப்பதைப் போல், அதை வாசிப்பதற்கென்றே ஒரு வாசகனும் இருக்கிறான் என்பது முக்கியமானது. கவிதையும் அதற்குரிய வாசகனும் உடனே சந்திக்கலாம்; தாமதமாகச் சந்திக்கலாம். உரிய காலத்தில் ஒரு நல்ல கவிதை அதற்குரிய வாசகனைச் சேர்ந்தே தீரும். குறுந்தொகைக் கவிஞர்கள் உடனே அடையாளம் காணப்பட்டார்கள். திருவள்ளுவரும்,  திருத்தக்கத் தேவரும் தாமதமாகக் கண்டெடுக்கப்பட்டார்கள். இது கவிதையின் விதி; கவிஞனின் விதி.  இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது என்னுள் எழும் உணர்வுகள் இவை. பிரமிளையும், ஞானக்கூத்தனையும் உடனே அடையாளம் கண்ட நான் இப்போது சற்று தாமதமாக ஒரு திருத்தக்கதேவரைக் கண்டு கொண்டிருக்கிறேன். அவர் தான் கோ.புண்ணியவான்.

கவிஞர் கோ. புண்ணியவானின் பெயரும், அவரது கவிதைகளும் எனக்கு ‘மௌனம்’ இதழ் மூலமே பரிச்சயம். அவரது எந்த ஒரு கவிதையும் நன்கு எழுதப் பழகிய ஒரு கையிலிருந்து தான் வெளி வந்திருப்பதைக் கால் பரப்பி நின்று சொல்லும். சில உரத்துப் பேசும்; சில நெகிழ்ந்து உருகும்; சில எள்ளி நகையாடும்; வேறு சில குமுறும். எண் சுவைகளைப் பற்றித் தண்டி அலங்காரம் பேசுகிறது. எண் சுவைகளில் கோ. புண்ணியவானின் கவிதைகள் பேசுகின்றன. பொதுவாகவே, பெரும்பாலான  கவிஞர்கள் தங்களை ஏதாவது ஒரு பாணிக்குள் போட்டு அடைத்துக் கொள்வார்கள். அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பார்கள். விக்கிரமாதித்யனின் கவிதைகள் தன்னிரக்கத்தை நாடி நிற்கும். ஞானக்கூத்தனின் பாணி அங்கதம். வண்ணதாசனின் கவிதைகள் பார்க்கும் எதையும் வியந்து பார்க்கும்; விதந்தோதும்.ஏங்கும்.  பிரமிளின் கவிதைகள் படிமங்களில் மூழ்கிக் கிடக்கும். கோ.புண்ணியவானின் கவிதைகள் தங்களை எவ்வித அடைப்புக்கும் அடைத்துக் கொள்ளாதவை என்பது சிறப்பு.விலகி நின்று உலகைப் பார்ப்பது அவரது தன்மை.  அவரைப் போலவே அவரது கவிதைகளும் வழக்கமான தன்மைகளிலிருந்து  விலகி நிற்பவையே. இவரால் வித விதமாகச் சிந்திக்க முடிகிறது;  தினுசு தினுசாக எழுத முடிகிறது. எள்ளல் தன்மையுடனும் (என் அரிசி), தார்மீகக் கோபத்துடனும் (எதேச்சாதிகாரம்), பரிவுடனும் (தாயுமான மண்), குறும்புடனும் (பகிரங்கம்) எரிச்சலுடனும் (இன்னும் வேண்டுமா ரத்தம்), அங்கதச்சுவையுடனும் (கடவுள்) இவரால் எழுத முடிகிறது. இந்தத் தன்மையே இவரை மற்ற கவிஞர்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது.

தற்காலக்கவிஞர்கள் தங்கள் முன்னோடிகளைப் பின் பற்றி எழுதுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் குருநாதர் என்றாலும் அவர் சாயலில் தன் குழந்தை இருப்பதை எந்த ஒரு சிஷ்யனும் விரும்பக்கூடாது தானே? ஆனால், இவர்கள்  விரும்புகிறார்கள். இது போன்ற அசட்டுத்தனங்கள் புண்ணியவானிடம் இல்லை. தனது ஆதர்ச கவிஞர்களின் சாயல் அவர் கவிதைகளில் இல்லை. இது ஆறுதல் தருகிறது.

கவிதை என்பது கவிஞன் என்ற கடவுளால் அருளிச்செய்யப்படும் தெய்வீகக் கோட்பாடு அல்ல. மாறாக அது ஒரு பன்முகப்பட்ட பரிமாணங்கள் கொண்ட வெளியாகும். அங்கே பலதரப்பட்ட சிந்தனைகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. இன்றைய பின் நவீன சூழலில் ‘நகரும் நகரம்’, ‘அலையும் கதவு’ என்றெல்லாம் நவீன காலத் தலைப்புகளை வைத்துப் பின் நவீன வாசகனை ஏமாற்ற முடியாது. நமக்குக் கறாரான சொற்கள் தேவை. வார்த்தை விரயம் தவிர்க்கப்படவேண்டும். வாசகனை மகிழ்விக்க இயல்பாகவே கவிதை தன்னுள் பொய்களைச் சுமக்கிறது. அது போதாமல் மேலும் மேலும் படிமங்களின் மூலம் கவிதையின் மேல் கூடுதல்  சுமைகளை ஏற்றுவது கவிதை தள்ளாடுவதில் போய் முடியும்.
எடுத்துக் காட்டாக, நிலவொளி அழகானது என்ற வாக்கியத்தைப் பார்ப்போம். அந்த வாக்கியத்தில்  இருக்கும் நிலவொளி என்பது உண்மை. அழகானது என்பது பொய். நிலவொளி பார்ப்பதற்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் அதன் அழகுதான் என்று கவிஞன் நம்புகிறான். அந்த நம்பிக்கையைத் தன் கவிதையில் விதைக்கிறான். அவனது நம்பிக்கைக்கான மதிப்பீடு ஏற்கெனவே சமுகத்தால் அவனுக்கு விநியோகம் செய்யப்பட்டது, அதை இவன் மறு விநியோகம் செய்கிறான். அவ்வளவுதான். எனவே தான் பின் நவீனத்துவம் படிமங்கள் நீக்கிய, மிகை உணர்ச்சிகள் இல்லாத, கறாரான சொற்கள் கொண்ட (அப்படிப்பட்ட சொற்கள் இல்லைதான் எனினும்) கவிதைகளைக் கோருகிறது. புண்ணியவானின் கவிதைகள் படிமங்கள் அற்று,மிகை உணர்ச்சி இல்லாமல், தோளில் கை போட்டுக் கொண்டு உரையாடும் தோழனைப் போல் பேசுகின்றன. கவிதையைத் தனக்கும் தனது வாசகனுக்கும் இடையேயான ஓர் அந்தரங்கமான உரையாடலாக அவர் மாற்றிக் காட்டுகிறார்.

’ஒவ்வொரு அரிசியிலும் அது இன்னாருக்கு என்று அவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது’ என்பது ஓர் உருதுப் பழமொழி.  அதை அங்கதம் தெறிக்க இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா என்று திகைக்க வைக்கிறார் கவிஞர்.

எனக்கான அரிசியில் என் பெயர்
எழுதப்பட்டிருக்கிறதாம்
எந்த உலையில் யார் வாயில்
போய்த்தேடுவது?

என்று ஆரம்பித்து கவிதை நெடுகக் கேள்விகள் கேட்டுத்  திகைப்பை ஏற்படுத்துகிறார்.  அதே போல் ‘கொப்பரைசில்’ நல்ல அங்கதக்கவிதை. பக்தன் கடவுளுக்காக உடைத்த தேங்காய்ச் சில் அவர் காலில் பட்டு கடவுளுக்கு செப்டிக் ஆகி விடுகிறது. கோபிக்கும் கடவுளிடம் பக்தன் மன்னிப்புக் கோருகிறான். அதற்குப் பிரீதியாக அடுத்த முறை ஆயிரம் தேங்காய்கள் உடைப்பதாக வேண்டிக் கொள்கிறான். இது போன்ற அங்கதம் புதுமைப்பித்தனை நினைக்க வைக்கிறது.

‘நெரிசலின் இடுக்கில்’, ‘புதிர்’, ‘மௌனவதம்’, ‘திலகம்’, ‘விழுங்கப்பட்டவை’ போன்ற கவிதைகள் வாழ்க்கையின் அபத்தத்தையும், அதன் குரூரத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றன. இந்தக் கவிதைகளில் இருத்தலியல் (existentialism) தன்மை இருக்கின்றன எனலாம்.

பல கவிதைகளில் கடவுளை வம்புக்கிழுக்கிறார் புண்ணியவான். பக்தனின் கொப்பரை சில்லினால் செப்டிக் ஆன கடவுள், தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட கடவுள், வரும் வழியில் குண்டு பாய்ந்து இறந்த கடவுள் என்று கடவுள் இவரது அங்கதத்தில் சிக்கிப் படாத பாடு படுகிறார்.

எங்கோ பட்டரைக் கல்லில் அடிபடுகிறது இரும்பு; அதன் அதிர்வில் இங்கே  அதிர்கிறது  என் வீட்டு ஜன்னல் கதவு. இது போல் அதிர்வதுதான் கவிமனம். அத்தகைய கவிமனம் கவிஞர் புண்ணியவானுக்கு வாய்த்திருக்கிறது. அதற்கு இத்தொகுப்பில் உள்ள கவிதைகளே சான்று.

இத்தொகுப்பிலேயே மிக முக்கியமான கவிதையாக நான் கருதுவது, ‘தமிழன்’ என்ற தலைப்பில் இவர் எழுதி இருக்கும் கவிதையே.  இது இவர் தொகுப்பில் உள்ள கவிதைகளில்மட்டுமல்ல;  சிங்கப்பூர், மலேசிய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் இதுவரை எத்தனை வந்திருக்குமோ அத்தனைத் தொகுப்புகளிலும் வெளிவந்திருக்கும் அத்தனை கவிதைகளிலும் (நான் படித்த வரைக்கும்) சிறந்த கவிதையாக இதுதான் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழில் இதுவரை எழுதப்பட்ட ஹைகூ கவிதையிலேயே சிறந்த கவிதையாக,

நள்ளிரவில்தான் பெற்றோம்
இன்று வரை விடியவில்லை

என்ற கவிதையைத்தான் சுட்டிக் காட்டுவார்கள். அது போல் மலேசிய-சிங்கப்பூர் கவிதைகளிலேயே சிறந்த புதுக்கவிதையாக, ‘தமிழன்’ என்ற  இந்தக் கவிதையை நான் பரிந்துரை செய்கிறேன். ஒரு பின் நவீன கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இக்கவிதையை ஓர் எடுத்துக் காட்டாகக் கூற முடியும்.

’நல்ல கவிதை எது?’ என்ற கேள்விக்கு ஒரு முறை இலக்கிய விமர்சகரும், எழுத்தாளருமான க.நா.சுப்பிரமணியன் பதில்  சொன்னார்: ’படித்தவுடன் மறந்து விடுவது மோசமான கவிதை; படித்த பின் பலகாலம் நினைவில் தங்கி இருப்பது நல்ல கவிதை’ அவரது அளவுகோளின் படி பார்த்தால் கவிஞர் புண்ணியவான பல நல்ல கவிதைகளை இந்தத் தொகுப்பில் எழுதி இருக்கிறார் என்றே சொல்லலாம்.

                                @@@@@@

1 comment:

  1. தொகுப்பைப் படிக்கத் தூண்டும் முன்னுரை. அருமை!

    ReplyDelete