Friday, March 13, 2015

on every saturday

ஒரு பழைய

செய்தியும்

ஒரு புதிய

செய்தியும்

jothi singh
*
எம்.ஜி.சுரேஷ்
 *

ரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன்புணர்ச்சிக்கு ஆளானாள். கொலையும் செய்யப்பட்டாள். அந்த வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அனைவருக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டுவிட்டன. இது பழைய செய்தி.

     இப்போது இது தொடர்பாகப் பல புதிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

     லண்டனைச் சேர்ந்த லெஸ்லி வுட்வின் என்னும் ஆவணப்பட பெண் இயக்குநர், இதை ஒரு 60 நிமிடம் ஓடும் படமாக எடுத்திருக்கிறார். அந்தப் படத்தில் பலருடைய நேர்காணல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தச் சம்பவத்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட பலருடைய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில்தான் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி மாணவியின் பெயர் ஜோதி சிங் பாண்டே என்றும், அவளது பெற்றோரின் பெயர்கள் பத்ரிசிங் பாண்டே, ஆஷா சிங் பாண்டே என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதுவரை மறைக்கப்பட்டு இருந்த அவளின் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

     இந்த ஆவணப்படத்தில் முக்கியக் குற்றவாளியான முகேஷ் சிங் என்பவனின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. தான் செய்த காரியத்துக்கு அதில் அவன் வருத்தம் தெரிவிக்கவில்லை. பதிலாக, ‘அந்தத் தருணத்தில் அந்தப் பெண் எதிர்ப்புக் காட்டாமல் கற்பழிப்புக்கு இணங்கி இருந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இனி கற்பழிக்கப்படும் பெண்களை குற்றவாளிகள் கொன்று விடுவார்கள்’ என்ற ரீதியில் பேசி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேட்டியின் சில பகுதிகள் சமூக வலைத்தளங்களிலும் சுற்றுக்கு விடப்பட்டு, எதிர்ப்பு வரவே, பின்னர் அகற்றப்பட்டுவிட்டன. இந்தப் படத்துக்கு இந்தியா தடை விதித்திருக்கிறது. இந்தத் தடை பற்றிப் பொருட்படுத்தாமல் லண்டன் பிபிசி குதூகலமாக ‘இந்தியாவின் மகள்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆவணப்படத்தை  ஒளிபரப்பி இருக்கிறது.

இப்போது ஊடகங்களில் இந்தப் படத்துக்கு இந்தியா தடை விதித்தது சரியா தவறா என்ற ரீதியில் விவாதங்கள் சூடு பறக்கின்றன. பாண்டி விளையாட்டு ஆடும் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு, ’ரைட்டா’ என்று கேட்டுவிட்டு ‘ரைட்டு’ என்று பதில் வந்ததும் கட்டங்களைத் தாண்டிக் குதிப்பார்கள். அத்தகைய பாண்டி ஆட்டம் ஊடகங்களில் ஆரம்பமாகிவிட்டது.

     இது ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தும் படம் எனவே, இதை எல்லோரும் பார்க்க வேண்டும், தடை விதிக்கக்கூடாது என்று ஒரு சாராரும், இந்தப் படத்தை அனுமதித்தால் இந்தியாவின் பெயர் கெட்டுப்போகும் என்று இன்னொரு சாராரும் விவாதமேடையில் ‘தொஜம்’ கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள்.

     ஒரு தொலைக்காட்சி சேனலில் பேசிய ஒரு தமிழ் ஆவணப்பட பெண் இயக்குநர், இந்தப் படத்தை ஒரு வெள்ளைக்காரர் எடுத்திருப்பதால் தடை விதிக்க வேண்டும். இந்தியர் எடுத்திருந்தால் அனுமதிக்கலாம் என்றார். இதை இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். அதே சேனலில் பேசிய இன்னொரு பெண் இந்த ஆவணப்படம் நம் கலாசாரத்துக்கு இழிவைத் தந்துவிட்டது என்றார். அதற்கு பதிலாக ஒரு சமூக ஆர்வலர், ‘கலாசாரம் என்றால் என்ன?’ என்று கேள்வி கேட்டு அனவரையும் திடுக்கிட வைத்தார். ஆக, அவரவர் சாமர்த்தியங்களைக் காட்டும் பட்டிமன்ற விவாதம் போல் அந்த நிகழ்ச்சி இருந்தது. சபாஷ், சரியான போட்டி!

     குற்றவாளியின் பேட்டி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சர்ச்சிக்க என்ன இருக்கிறது. ஒரு குற்றவாளி இப்படித்தான் பேசுவான். இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? அவன் கண்ணியமாகவும், நியாயமாகவும் பேசுபவனாக இருந்தால் இந்தக் குற்றத்தையே செய்திருக்கமாட்டானே. அவனிடம் கீதோபதேசத்தை எதிர்பார்ப்பது வடிகட்டிய முட்டாள்தனம் அல்லவா? அதைப் பெரிதுபடுத்தி ‘ஆணாதிக்க மனோபாவம்’, ‘பெண்ணடிமைத்தனம்’ என்றெல்லாம் பேசுவது, குற்றம் கண்டுபிடித்துப் பேர் வாங்கும் புலமையைத்தான் காட்டுகிறது.

     இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த பிரிட்டிஷ் பெண்மணி இந்த ஆவணப்படத்தை சுதந்திரமாக எடுத்திருக்கிறார். பல முறை சிறைக்குச் சென்று கைதிகளைப் பேட்டி எடுத்து படப்பிடிப்பு செய்திருக்கிறார். அதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எடுத்த படத்தை எடிட் செய்து வெளியிடுவதற்குத் தயாராக இருந்திருக்கிறார். அப்போதும் எவ்விதத் தடையும் வரவில்லை. ஒருவேளை, எதிர்ப்பு கிளம்பாமல் இருந்திருந்தால், இந்த ஆவணப்படம் ’இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ ஒளிபரப்பப்பட்டும் கூட இருந்திருக்கும். யூ டியூப்பில் கசிந்துவிட்டதால், அதையொட்டி எழுந்த சலசலப்பில் இந்திய அரசு சுதாரித்துக் கொண்டுவிட்டது.

     இந்த நிகழ்ச்சியின் விளைவாக,  இப்போது நமக்குள் சில கேள்விகள் எழுகின்றன.

     பொதுவாக, குற்றம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியும் போலீஸைத் தாண்டி வெளியே வரமுடியாது. திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களைப் பற்றிய செய்திகள் போலீசார் மூலமே பத்திரிகைகளுக்கு வழங்கப்படுகின்றன. சிறையில் இருக்கும் ஒரு கைதிக்கு ஒரு கடிதம் எழுதினால் அது அவனுக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது. சிறைக்காவலர்கள் தணிக்கை செய்தபின்பே அவனுக்குத் தரப்படும். அதே போல், அவன் எழுதும் கடிதங்களும் தணிக்கை செய்யப்பட்டே வெளியே அனுப்பப்படும். அது மட்டும் அல்ல, சிறைக்கைதிகளுக்கு விநியோகிக்கப்படும் செய்தித்தாள்களும் அப்படியே கிடைக்காது. தணிக்கை செய்யப்பட்டே தரப்படும்.

நிலைமை இப்படி இருக்க, ஓர் ஆவணப்பட இயக்குநர் காமிரா, விளக்குகள், உதவியாளர்கள் சகிதம் எப்படி ஒரு சிறைக்குள் நுழைய முடிந்தது? தடங்கல்கள் ஏதுமின்றி எப்படிப் படம் எடுக்க முடிந்தது? அவர் எடுத்த ஆவணப்படத்தை எப்படி சிறையிலிருந்து பத்திரமாக வெளியே எடுத்து வர முடிந்தது? அதில் ஆட்சேபகரமான பகுதிகள் இருப்பின் அதை ஏன் முன்னதாகவே இவர்கள் தணிக்கை செய்யவில்லை? அப்படிச் செய்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்பது வேறு விஷயம். அதை நான் ஆதரிக்கமாட்டேன். பிரச்சனை என்னவென்றால், முதலில் அசட்டையாக இருந்து விட்டு, கடைசியில் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது ஏன்? என்பதுதான்.

     இதுவரை சிறையிலிருந்து கைதிகள் தப்பிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். சிறையிலிருந்து ஒரு கைதியைப்பற்றிய ஆவணம் தப்பித்திருப்பதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.

     இந்த ஆவணப்படத்தைப் பற்றி விவாதிக்கும் யாருமே இந்த அபத்தத்தைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. ஒருவேளை, இந்தியாவிலே இதெல்லாம் சகஜமப்பா என்று நினைத்துவிட்டார்களோ? இதுதான் இந்த சம்பவத்தில் தெரியவரும் ஒரு புதியசெய்தி என்று எனக்குப் படுகிறது.

* * *    


No comments:

Post a Comment