Saturday, March 7, 2015

சனி தோறும் - எம் ஜி சுரேஷ் பக்கங்கள்

சமீபத்தில் ரஷ்யாவில் 
அதிபர் புதினுக்கு எதிராகக் 
கருத்துகளை விதைத்த
எதிர்கட்சித் தலைவரான
போரிஸ் நெம்த்சோவ் 
படுகொலை செய்யப்பட்டார்.


கத்தரிக்கப்பட்ட 

சுதந்திரம்

**
எம்.ஜி.சுரேஷ்

மீபத்தில் சில தமிழ் எழுத்தாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது துரதிருஷ்டவசமானதே. தமிழ்நாட்டில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. இனிமேலும், இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடலாகாது என்பதே என் விருப்பம். ஒரு பிரதி (text) பிரதிகூலமான சந்தர்ப்பத்தை (context) எதிர்கொள்ளும் தருணம் இது. எழுத்தைப் பற்றியும், கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய தருணமும் கூட.

இதைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் சிலர் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது என்று புகார் செய்கிறார்கள். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்ற விஷயம் எப்போதுமே நடைமுறையில் இருந்ததில்லை என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

பண்டைய ஏதென்ஸில் கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்த சாக்ரடீஸுக்கு, கருத்து சுதந்திரத்துக்கு பதிலாக, ஒரு கோப்பை ஹெம்லாக் விஷம் தரப்பட்டது.

மாவீரன் அலக்ஸாண்டரிடம் சுதந்திரமாகத் தன் கருத்தைக் கூறிய எழுத்தாளன் க்ளைட்டஸ் என்பவனுக்கு, கருத்துச் சுதந்திரத்தைத் தருவதற்குப் பதிலாக குத்தீட்டியால் கொல்லப்படும் தண்டனையைப் பரிசாகக் கொடுத்தான அலெக்ஸாண்டர்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது, ஃபிரான்ஸில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்று முச்சந்திகளில் நின்று பிரச்சாரம் செய்த ராபர்ட் ஸ்பியரும், மாரட்டும் அதே முச்சந்தியில் கில்லடின் எந்திரத்தின் மூலம் தலை துண்டிக்கப்பட்டார்கள். கூடவே சேர்ந்து அறுபட்டு விழுந்தது கருத்து சுதந்திரத்தின் தலையும்தான்.

ஹிட்லர் உயிருடன் இருந்த காலத்தில் ஜெர்மனியில் கருத்து சுதந்திரம் வழங்கப்படவில்லை. பதிலாக மரணதண்டனையும், வதை முகாம்களும் பரிசாக வழங்கப்பட்டன.

ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியனில் கேள்விப்படாத ஒரு விஷயத்தின் பெயர் கருத்து சுதந்திரம்.

பிரிட்டிஷ்கால இந்தியாவில் மகாத்மா காந்தி, பாரதியார் போன்ற பலர் அரசுக்கு எதிரான கருத்துகளை சுதந்திரமாகக் கூறியதாலும், எழுதியதாலும் சிறைக்குள் உலவ வேண்டி இருந்தது.

சரி, இதெல்லாம் சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கக்கூடிய விஷயம்தானே. நம் நாடு ஜனநாயக நாடு ஆயிற்றே இங்கு கருத்து சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும் என்று நம்மில் சிலர் நினைக்கக்கூடும். அங்குதான் நாம் தப்பு செய்கிறோம். முடியாட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, சோஷலிச ஆட்சி என்றெல்லாம் இல்லை. அதிகாரம் எங்கெல்லாம கோலோச்சுகிறாதோ அங்கெல்லாம் முதலில் தட்டிப் பறிக்கப்படுவது கருத்து சுதந்திரம்தான். ஜனநாயக இந்தியாவில் இந்திராகாந்தி அம்மையாரின் ஆட்சியின்போதுதானே அவசரநிலை பிரகடனம் அமுலுக்கு வந்தது? அப்போது பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. மேடைப்பேச்சுகள் கண்காணிக்கப்பட்டன. இந்திராவுக்கு எதிரானது எல்லாமே இந்தியாவுக்கு எதிரானது என்று உணர்த்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கூட ஒரு நாளேடு கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டதற்காகக் தாக்கப்படவில்லையா.

 சமீபத்தில் ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கருத்துகளை விதைத்த, எதிர்கட்சித்தலைவரான போரிஸ் நெம்த்சோவ் (படம்)  படுகொலை செய்யப்பட்டார். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்தானே?

அதிகாரம் கட்டமைக்கும் விழுமியங்களுக்கு எதிரான விழுமியங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. பேரலகான (macro unit) அரசு எந்திரம் முதல் நுண்ணலகான (micro unit) குடும்ப நிறுவனம் வரை எங்கும் அதிகாரம் கோலோச்சுகிறது. ஒருவன் அதிகாரத்திலிருந்து விலகி நிற்க முடியாது. ஒன்று அதிகாரத்தின் செலுத்தும் நுனியில் இருக்க வேண்டும். அல்லது பெறும் நுனியில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நுனியில் இருந்தே ஆக வேண்டும். எழுத்தாளனும் ஏதாவது ஒரு நுனியைச் சார்ந்து இயங்க வேண்டி இருக்கிறது. செலுத்தும் நுனியில் இருப்பவனது கருத்து சுதந்திரம் பட்டொளி வீசிப் பறக்கிறது. பெறும் நுனியில் இருப்பவனது சுதந்திரம் டார் டாராகக் கிழிந்து தொங்குகிறது. இதுதான் யதார்த்தம்.
    
எழுத்து என்பது எப்போதுமே மாலை நேரத்து விருந்தைப்போல் மகிழ்ச்சி   தருவதாக இருப்பதில்லை. சமயங்களில் அது வன்முறையாகவும் மாறி விடுகிறது. இதை எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தவிரவும், எழுத்து என்பது ஆசிரியனால் எழுதப்பட்ட போதிலும், அது ஆசிரியனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அது வாசகனுக்கும் சொந்தமானது. ஒரு பிரதியை அவன் எப்படி வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். அதை நாம் தடுக்க முடியாது. நாம் ஒன்றை எழுதுவோம். அவன் அதை வேறொன்றாகப் புரிந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. கருத்து சுதந்திரத்தை விட நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் இதுதான். கருத்தே தவறாகப் புரிந்து கொள்ளப்படும் போது, கருத்து சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாக மாறிவிடும் அல்லவா? அப்போது ஒரு கேள்வி எழுகிறது. கருத்து சுதந்திரம் தேவைப்படுவது எழுத்தாளனால் எழுதப்பட்ட கருத்துக்கா அல்லது வாசகனால் புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்கா? சமயத்தில் நாம் எழுதும் எழுத்து எதற்காக எழுதுகிறோமோ அதற்கு எதிராக மாறிவிடும் சாத்தியமும் இருக்கிறது. எழுதுபவன் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

கருத்து சுதந்திரம் ஒருபோதும் சாத்தியப்படாத இந்த உலகில், கிளிக்கு சிறகுகளைக் கத்தரித்து அழகு பார்ப்பது போல், கத்தரிக்கப்பட்ட சுதந்திரத்தை வழங்கி அழகு பார்க்கும் அதிகாரத்திடம் நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

எது எப்படியோ, எழுத்தை எழுத்தாளன் ஆளவில்லை. எழுதப்பட்ட எழுத்துதான் அவனை ஆள்கிறது என்ற உண்மை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடைசியாக ஒரு விஷயம். கருத்து சுதந்திரம் என்பது பண்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு மனிதன் தன் சகமனிதனுக்குத் தரும் ஜனநாயக உரிமை. நாம் இன்னும் பண்பட்ட சமூகமாக மாறவில்லையோ, அரை காட்டுமிராண்டிகளாகவே (semi-barbarians) இருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. 

1 comment:

  1. ”கருத்து சுதந்திரம் என்பது பண்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு மனிதன் தன் சகமனிதனுக்குத் தரும் ஜனநாயக உரிமை. ” நண்பரே, ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தருவது எதுவுமே சுதந்திரமாகுமா?

    ReplyDelete