Friday, February 27, 2015

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்
 புதுமைதாசனின் 
கதையாடல்கள்
*
எம்.ஜி.சுரேஷ்

ஷேக்ஸ்பியரை வாசிப்பவன் ஷேக்ஸ்பியராகவே ஆகிவிடுகிறான்’ என்று ஒரு முறை லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹே எழுதினார். அதைப்போலவே புதுமைப்பித்தனை வாசித்து வாசித்து தன்னுள் ஒரு புதுமைப்பித்தனாக,  ஒரு தனித்த சுயத்தைக் கட்டமைத்துக் கொண்டவர் புதுமைதாசன். புதுமைப்பித்தனின் கூரிய சிந்தனை, எள்ளல், சமூகத்தின் மீதான விமர்சனம் யாவும் புதுமைதாசனுக்கும் கைவருகிறது என்பது கவனிக்கத் தக்கது.

பொதுவாக தாசன் என்று பெயர் சூட்டிக் கொள்வது தமிழ் மரபு. பாரதிதாசன், கம்பதாசன், வாணிதாசன், சுப்புரத்தினதாசன் (சுரதா) போன்ற பல தாசன்களை நாம் அறிவோம். தாசன் என்பது பழைய மரபு. புதுமை அதற்கு எதிரானது. இவர் புதுமையையும் அதற்கு எதிரான ’தாசனை’யும் இணைத்துத் தன் பெயரை வைத்துக் கொண்டிருப்பது எதிர்மறைகளை இணைக்கிறது எனலாம்.

புதுமைதாசன் என்று அறியப்ப்டும் பி.கிருஷ்ணன் அவரது ’நாற்பதாண்டு எழுத்துப்பணியில் – வெவ்வேறு காலக்கட்டத்தில் – பல இதழ்களுக்கும், வானொலிக்கும் நான் எழுதிய சிறுகதைகள் பலவற்றுள் பத்துச்சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன’ என்று புதுமைதாசன் சிறுகதைகள் என்ற தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அந்த்த் தொகுப்பில் பத்து சிறுகதைகள் உள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளும் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய சிங்கப்பூர் எப்படி இருந்த்து; அந்தக் காலத்து மக்களின் வாழ்க்கை நிலவரம் எவ்விதம் இயங்கியது என்பது போன்ற அரிய தகவல்களைத் த்ங்களிடத்தில் கொண்டுள்ளன.

‘பரோபகாரி’ சிறுகதையில் வரும் கதாநயகன் குடியிருக்க எங்கேயாவது வீடு கிடைக்குமா என்று அலைந்து திரிந்து கடைசியில் பல ஒண்டுக்குடித்தன்ங்கள் கொண்ட ஒரு வீட்டில் ஓர் அறையில் ஒண்டிக்கொள்கிறான். ஆக, பல ஒண்டுக் குடித்தனங்கள் கொண்ட  தனி வீடுகள் சிங்கப்பூரில் ஒருகாலத்தில் இருந்தன என்பது இக்கதையால் தெரிகிறது. ‘உதிரிகள்’ சிறுகதையில் வரும் கதைமாந்தர் இன்றைக்கு இந்தியாவில் திரியும் இளைஞர்களை நினைவு படுத்துகின்றனர். இவர்களைப் பற்றித்தான் ‘சாலையோரத்திலே வேலையற்றதுகள்; வேலையற்றதுகளின் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்; வேந்தே! அதுதான் காலத்தின் குறி’ என்று வேலைக்காரி நாடகத்தில் அறிஞர் அண்ணா எழுதினார். இன்றைக்கும் அந்தக் ‘காலக்குறி’யை இந்தியா தாண்டவில்லை. சிங்கப்பூர் தாண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’வாழமுடியாதவள்’ என்ற சிறுகதை ஜப்பானியர்களின் சிங்கப்பூர் மீதான படையெடுப்பை ஆவணப்படுத்துகிறது. அந்தக் காலக்கட்டத்தில் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கை எவ்விதம் இருந்தது என்பதை எடுத்துரைக்கிறது. இந்தச்சிறுகதையில் கண்ணுச்சாமி என்ற தமிழன் ஒரு மலாய்க்காரியை மண்ந்து கொள்கிறான். ‘தெளிவு’ என்ற இன்னொரு சிறுகதையில் ஒரு தமிழன் சீனப்பெண் ஒருத்தியை மண்ந்து கொள்கிறான். ஆக, இரு வேறு தேசிய இனங்களுடன் தமிழர்கள் மண உறவு கொள்ளும் செய்தி இதில் பதிவாகி இருக்கிறது. மேலும் மலாய், சீனப்பெண்கள் சற்று சுதந்திரமானவர்கள். தமிழ்ப்பெண்களைப் போல் கட்டுப்பெட்டிகள் அல்ல. இதனால் அவர்களை மணக்கும் தமிழர்கள் சந்தேக புத்தியால் அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள் என்ற கசப்பான விஷயத்தையும் கதைகள் விவரிக்கின்றன.

ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை ‘பரோபகாரி’ என்று விளிக்கும் இவரது செயல் ஐம்பதுகளில் ஜீரணிக்க இயலாத ஒன்று. முகச்சுளிப்புடன் வேசி என்றே அந்தக்காலகட்டததில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அழைக்கப்பட்டார்கள். தவிரவும், ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கதாநாயகியாக வைத்துக் கதை எழுதக்கூடிய அளவுக்கு  அந்தக் காலத்தில்  யாரும் துணிவுடன் இருக்க மாட்டார்கள். அத்தகைய துணிச்சல் புதுமைதாசனுக்கு இருந்திருக்கிறது. பரோபகாரி கதையின் கடைசி வரி கதைக்கு வெளியே எம்பிக் குதிக்கிறது. கற்பு என்பது இலக்கியத்தில் மட்டுந்தான் இருக்கிறதா? என்ற அந்த வரி கதைக்கு வெளியே எம்பிக்க்குதிக்கிறது. ஒரு கதையை எழுதும் போது எந்த ஒரு வரியும் கதையை மீறி இருக்கக்கூடாது என்பது விதி. அந்த விதியை புதுமைதாசன் மீறி இருக்கிறார். ஆனாலும், இதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், புதுமைப்பித்தனும் அவரது ’பொன்னகரம்’ என்ற சிறுகதையில் கடைசி வரியில் கதையிலிருந்து எம்பிக் குதித்தவர்தான். ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்’ என்று கதைக்கு வெளியே வந்து பேசியவர் புதுமைப்பித்தன். அவர் செய்தது சரி என்றால், இவர் செய்ததும் சரியே.

உதிரிகள் என்ற சிறுகதை, ‘தங்களுக்குள் கொச்சை ம்லாய் பேசிக்கொள்ளும் தமிழ்ப்பரம்பரை எப்போதோ உருவாகிவிட்டது’ என்கிற திகீர் உண்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது. சிங்கப்பூர் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் உருப்படாத தமிழ் இளைஞர்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. அவர்களை உதிரிகள் என்று அடையாளப்படுத்துகிறது. இந்த உதிரிகள் கல்வி பொருளாதார நிலையில் பின் தங்கிவிட்ட குடும்பங்களின் உற்பத்தி. இந்தப் பரம்பரையே இப்படி என்றால், இதற்கு வாரிசாக வரப் போகும் அடுத்த தலைமுறையின் நிலை என்ன? இதில் என்ன முன் தோன்றிய கல்;பின் தோன்றிய மண், மூத்தகுடி என்று கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர்.

புதுமைதாசனின் கதை மாந்தர் பலதரப்பட்டவர்கள். வங்கியில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும்  கண்ணுச்சாமி, தோட்டவேலை செய்யும் முருகன், பங்குச் சந்தையில் வாழ்வை இழந்த கதிரேசன். செருப்புத் தைக்கும் தொழிலாளி வேலப்பன், அடிக்கடி ஆண்களை மாற்றும் ரேவதி என்று எல்லாருமே நம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவர்கள்தான். இவரது கதைகளில் மிளிரும் தன்சார்புப் பார்வை அவர்களை இவரது கருவிகளாக மாற்றிவிடுகிறது.

இவரது பெரும்பாலான கதைகள் முற்றுப் பெறாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அதாவது ஒரு கதை என்பது ஆரம்பம், நடு, முடிவு என்கிற மூன்று பாகங்கள் கொண்டது. புதுமைதாசனின் கதைகளில் ஆரம்பமும் நடுவும் இருக்கின்றன. முடிவு இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, பரோபகாரி என்ற கதையில் ஆரம்பம் இருக்கிறது. கதாநாயகன் வாடகைக்கு வீடு தேடுகிறான். வீடு கிடைத்து அதில் பல கதாபாத்திரங்களோடு ஒண்டுக் குடித்தனவாசி ஆகிறான். இது நடுப்பகுதி. பின்னர் அந்த வீட்டில் ஒரு பாலியல் தொழிலாளி இருப்பது தெரிகிறது. வாசகன் எதிர்ப்பார்ப்பது போல்,அந்தப் பாலியல் தொழிலாளியை கதாநாயகன் நேருக்கு நேர் சந்திக்கிறான். அது ஒரு க்ளைமாக்ஸ் கட்டம். அந்த இடத்தில் கதை நிறைவாக முடிய வேண்டும். ஆனால், கதை அப்படி முடிவதில்லை. பாலியல் தொழிலாளி நம கதாநாயகனை அழைக்கிறாள். உடனே அவன் அவளைத் திட்டித் துரத்தி விடுகிறான். இப்படி முடிகிறது கதை. இது உப்புச்சப்பற்ற முடிவு. இதனால் கதையில் வீர்யம் குறைந்து விடுகிறது. இவரது பிற கதைகளும் இது போலவே சட்டென்று முடிந்து போகின்றன. ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு தேவையில்லை. அது அதன் போக்கில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது பின் நவீன கதையாடல்களுக்குப் பொருந்தும். புதுமைதாசனின் கதைகள் நவீன சிறுகதைகள். அவற்றுக்குப் பொருந்தாது. எனினும், புதுமைதாசனின் எழுத்தின் அடர்த்தி அந்த பலவீனத்தைக் குறைத்துக்காட்டி விடுகிறது எனலாம்.

புதுமைதாசனின் நடை இயல்பானது. அடித்தட்டுவாசிகளைப் பற்றி எழுதினாலும் ‘மெலோட்ராமா’ நோயால் பாதிக்கபடாத நடை. ’ஐயோ, இந்த உடல் ஊனமுற்றவனைப் பாருங்கள்; ஐயகோ..’  என்று வாசகனிடம் பரிதாபம் கோரி மன்றாடாத நடை இவருடையது. இதுவே இவரது கதாபாத்திரத்தின் மரியாதையையும், இவரது எழுத்தின் மரியாதையையும் காப்பாற்றி விடுகிறது.

நா. கோவிந்தசாமியின் கதைகள் நம் தோளில் தட்டி, ‘வாழ்க்கை குரூரமானது; அதைத் தீவிரமாகப் பார்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தும். புதுமைதாசனின் கதைகளோ, ‘வாழ்க்கை குரூரமானதுதான். அதற்காக அதைத் தீவிரமாகத்தான் பார்க்க வேண்டும் என்பதில்லை. சிரித்துக் கொண்டும் பார்க்கலாம். சிரிப்பு சிந்தனையைத் தூண்டும்’ என்று சொல்கின்றன.


புதுமைதாசன் என்னதான் புதுமைப்பித்தனின் வாரிசாக இருந்தாலும், அவர் அப்படியே புதுமைப்பித்தனைப் போலவே அடியொற்றி எழுதவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிப்பாணியிலேயே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமைப்பித்தனின் நடை அவரே சொல்வது போல்,’தத்தித் தாவிச் செல்லும் நடை..’ இவருடையதோ தொடர்ச்சியான நடை. தவிரவும், எள்ளல் இல்லாத இயல்பு நவிற்சியிலும் இவர் கதைகள் எழுதி இருக்கிறார். ‘உதிரிகள்’ என்ற சிறுகதையில் எள்ளல் தொனியை விட உக்கிரமான கோபம் கொப்பளிக்கிறது என்பது முக்கியமானது. அது ஒரு கலைஞனின் கோபம். அந்தக் கோபம்தான் புதுமைப்பித்தனை இயங்க வைத்த்து. புதுமைதாசனையும் இயங்க வைத்திருகிறது என்று சொல்லத்தோன்றுகிறது.

***

No comments:

Post a Comment