Friday, March 20, 2015

முனைவர் சிரிஷாவின் ஆய்வுகள்

ஆய்வுக் கட்டுரைகள்
வெறுமைவெளியும்
பன்மைமொழியும்
முனைவர் தா.அ.சிரிஷா

 அணிந்துரை
கவனத்தை ஈர்க்கும்

முக்கியமான வரவு

எம்.ஜி.சுரேஷ்
* * *

பெரும்பாலான இந்தியப் பெண்களைப் போலவே, குடும்பம் என்ற நிறுவனத்தின் வன்முறையில் சிக்குண்டு, வீட்டு வேலை, வெளியில் போய் பொருள் நிமித்தம் செய்யும் வேலை ஆகிய இரு வேடம் தரித்து ஓர் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்காக ஆண்களால் சிந்தித்து விநியோகிக்கப்படும் பெண்ணியம் சார்ந்து மதிப்பீடுகளை எதிர்கொள்ளும் வாழ்க்கை இந்நூலாசிரியர் திருமதி சிரிஷாவினுடையது.

‘வரலாற்றில் பெண்கள் இரண்டாவது பாலினமாக்கப்பட்டார்கள். ஆண்களால் வடிவமைக்கப்பட்ட உலகில் பிரவேசிக்கும் பெண்கள் ஆண்களால் வரையறுக்கப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில் பெண்களான நாங்கள் எவ்வாறு சுதந்திரமானவர்களாக இருக்கமுடியும்?’ என்று தனது நூலான ‘செகண்ட் செக்ஸில்’ கேள்வி எழுப்பினார் பிரெஞ்சு பெண்ணியவாதியான சீமோன் தி புவா.
    
’குடும்பம் என்பது ஓர் ஆலமரம்’, ‘உறவுகளுக்காகச் சுயத்தைத் தொலைத்து வாழும் வாழ்க்கை இனிப்பது’ ‘கைவேலைகளும், சமையலும் ஒழிந்த நேரத்தில்தான் படிப்பதற்கு யோசிப்பதற்கும் நொடிப்பொழுதுகள் வாய்க்கின்றன’ என்றெல்லாம் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஒட்டகம் முள் செடிகளை விரும்பிச்சாப்பிடும். முள் செடியில் உள்ள முட்கள் ஒட்டகத்தில் உதடு, ஈறு, நாக்கைக் கிழிக்கும். இருந்தாலும் ஒட்டகம் முள் செடியைத் தான் விரும்பிச்சாப்பிடும்.  இதுபோல்தான் நம் நாட்டுப் பெண்கள் குடும்ப நிறுவனம் என்ற நுகத்தடியில் சிக்கிக்கொண்டு, அல்லல் பல இருப்பினும் அதையே ஏற்றுக்கொண்டு சுவைத்தபடி  வாழ்ந்து மகிழ்கிறார்கள். ஒரு முதலாளிய சமூகத்தில் இதைத் தவிர்க்க இயலாதுதான். ஏன், சோவியத் யூனியனும் கூட இதற்கு விலக்கல்ல என்பதை சோவியத் யூனியனில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் புரட்சிக்காரியான அலெக்சாண்ட்ரா கொலொண்டாயின் பதிவுகள் நிரூபிக்கின்றன. இருப்பினும் அவர்களுக்குள் இயங்கும் பெண்மனம் தங்களை ஆளும் ஆணாதிக்கத்தின் மீதான விமர்சனங்களை வெளிப்படுத்த முயற்சி செய்கின்றன. அத்தகைய முயற்சிகளின் நீட்சியாகவே இந்தக் கட்டுரைத் தொகுப்பினை நாம் பார்க்க முடியும்.

     இத்தொகுப்பில் 16 கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பெண்ணியம் சார்ந்தே இயங்குகின்றன. அகநானூற்று மருதத் திணைப் பாடல்களாக இருந்தாலும் சரி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான, ‘சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுப்பாக இருந்தாலும் சரி அனைத்திலும் ஆணாதிக்கத்தின் தடித்தனத்தை நோக்கி பெண்மனத்தின் சுட்டு விரல் உயர்வதை நம்மால் கவனிக்க முடிகிறது.

     இத்தொகுப்பின் முதல் கட்டுரை, அகநானூற்றில் இடம் பெற்றுள்ள மருதத் திணைப் பாடல்களில் தலைவி எவ்விதம் தலைவனை விமர்சிக்கிறாள் என்பது குறித்துப் பேசுகிறது.

‘ஆண்மக்களுக்கு சமூகத்தில் இருந்த கட்டற்ற பாலியல் சுதந்திரமும், அதனைத் தட்டிக் கேட்க இயலாத பெண்களின் இறுக்கமான சமூக மௌனமும் இப்பாடல்களில் புதையுண்டுள்ளன’ என்கிறார் ஆசிரியர்.

பண்டைய சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகம். அங்கே பெண் என்பவள் ஆணின் உடைமைப் பொருள் மட்டுமே. ஓர் ஆணுக்குப் பெருமை அவன் எத்தனை வேலி நிலம் வைத்திருக்கிறான், எத்தனை ஆடு, மாடுகள் வைத்திருக்கிறான் என்பது போல் எத்தனை மனைவிகள் வைத்திருக்கிறான் என்பதுடன் சம்பந்தப்பட்டது. ஆதியில் ஒருவனுக்கு ஒருத்தி, ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் வரையறுக்கப்படவில்லை. அது பிற்காலத்தில் தனிநபர் என்கிற ஆசாமி தோன்றிய போது ஏற்பட்டது.

பிரெடரிக் நீயட்ஷே, ‘ஒற்றை அறம் என்று எதுவும் இல்லை.  ஒருவன் எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது ஆண்டான்களின் அறம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது அடிமைகளின் அறம். அடிமைகளே ஆண்டான்களின் அறத்தைக் கைப்பற்றுங்கள்’ என்றார்.

இந்தச் சங்க கால தலைவன் தலைவி உறவுப் பிரச்சனை நிலப்பிரபுத்துவ ஆதிபத்தியம் சார்ந்தது. இது இயல்பானதே. ஆதியில் பெண்களின் நிலைமை உலகம் முழுதும் இப்படித்தான் இருந்தது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில், ‘பெண்கள் மிருகம் போன்றவர்கள். அவர்களை பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக மாற்றவேண்டும் (tamed animal)’ என்கிறார்.

அவருடைய குருநாதரான பிளேட்டோ பெண்களை வெறுத்தார். ’அவர்களால்தான் குழந்தை பெறவேண்டிய தருணம் வருகிறது. அவர்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய ஆபத்து ஏற்படுகிறது. என்றார். பெண் ஒரு பிரச்சனை. ஆண்-பெண் திருமணம் என்பதே தடை செய்யப்பட வேண்டும்’ என்றார்.

அவருடைய குருநாதரான சாக்ரட்டீஸ் சொன்னார். ‘என்னால் எல்லாவிதமான மனிதர்களுடனும் சகித்துக் கொண்டு இருக்கமுடியும். யாராலுமே என்னை தொல்லைப் படுத்திவிட முடியாது. ஏனேனில் என் மனைவி ஷாந்திப்பெயின் எனக்குத் தரும்  தொல்லைகளுக்குப் பழகியவன் நான். அவளை விட வேறு யார் எனக்கு அதிகத் தொல்லை தர முடியும்?

ஆக, பெண் என்பவள் ‘விலங்காக’, ‘பிரச்சனை’யாக, ‘தொல்லை தருபவளாக’வே காலங்கள் தோறும் வர்ணிக்கப்பட்டாள்.  வரலாறு என்பது ஆண்களைப் பற்றி ஆண்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கு இடமில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.

இப்படிப்பட்ட ஒரு ஆதிபத்திய சூழ்நிலையில், சுயம் இழந்த ஒரு மற்றமையாக வாழ நேர்ந்த தலைவி, ஒழுக்கம் தவறிய தன் தலைவனை, எருமை, நீர்நாய், வரால் மீன் ஆகியவற்றுடன் ஒப்பிடுவது தன் உடல்மீதான அடக்கு முறைக்கு எதிரான கலகக்குரல் என்றுதான் சொல்லவேண்டும். இதைத் தக்க ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரையில் ஆசிரியர் நிறுவி இருப்பது சிறப்புடன் மிளிர்கிறது. பழைய பக்கங்களில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது.

மரபிலிருந்து நவீனத்துவம் தன்னைத் துண்டித்துக் கொண்டது.  செய்யுள் மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட நவீன பிரதிதான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். நாவல் என்ற ஆங்கிலச்சொல்லின் போருள் நவீனம் என்பது. எனவே அதன் பெயரிலேயே நவீனம் இருக்கிறது. எனவே, அதில் இருக்கும் நவீனப்பண்புகள் குறித்து கேள்விகள் எழுப்பத்தேவை இல்லை. கலை இலக்கியத்தின் பண்புகளை சோதனைச்சாலை பரிசோதனைக் குழாயில் போட்டு கறாராகச் சோதிக்க முடியாது. சிவப்பு லிட்மஸை நீல லிட்மஸாக மாறுகிறதா இல்லையா என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கலை தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. பத்துத் தலை ராவணன் இருந்தான் என்பது கதை. பத்து தலையோடு ஒருவன் எப்படி இருக்க முடியும் என்று விசாரணை செய்வது தர்க்கம். பத்துத் தலைகளை வைத்துக் கொண்டு அவன் எப்படி பக்கவாட்டில் படுத்தான். சளி பிடித்தால் பத்துத் மூக்குகளாலும் சீந்துவானா என்றெல்லாம் கேட்பது கலையைக் கொல்ல முற்படும் தர்க்கம். ஏற்கனவே, பிரதாப முதலியார் சரித்திரம் பற்றி மொண்ணையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால், பிரதாப முதலியார் சரித்திரம் நாவலை இந்த நூலின் ஆசிரியர் செய்திருக்கும் விமர்சனம் சரியானதாகவும், நியாயமானதாகவும் படுகிறது. இந்த விமர்சனத்தில் ஆசிரியர் தர்க்கம் பார்க்கவில்லை. சிவப்பு லிட்மஸ் நீல லிட்மஸாக மாறியதா இல்லையா என்றெல்லாம் பார்த்து, தானும் பயந்து பிறரையும் பயமுறுத்தவில்லை.

தொடர்ந்து இவரது விமர்சனப் பார்வையிலிருந்து எதுவுமே தப்புவதில்லை. பூந்துருத்தி காடநம்பியின் பக்தி வெளிப்பாடாக இருந்தாலும் சரி, பாமாவின் மனுஷியாக இருந்தாலும் சரி ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத பல்வேறு பிரதிகள் பற்றி இவர் தனது பார்வையைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. பாரதியாரின் கவிதைகளில், பெண் நோக்கு. மீன்காரத்தெரு பிரதியில் பெண்ணின் இடம். சல்மா, ரேவதி, ஆர். சூடாமணி போன்ற பெண் எழுத்தாளர்களின் பிரதிகள் மீதான ஆய்வு என்று விரியும் இவரது பணி புத்தகப் பிரதிகளுடன் நிற்பதில்லை. உன்னைபோல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மீதான விமர்சனமாகவும் நீள்கிறது.

பூந்துருத்தி காடநம்பியின்  பக்தி வெளிப்பாடு என்பது சைவ அரசியலை முன் வைக்கிறது. அன்பே சிவம் என்று சொல்லிவிட்டு சமணர்களை கழுவில் ஏற்றி மகிழ்ந்த பேரன்பு சைவர்களுடையது. பிரதியில் நிலவும் அரசியல் பற்றி இந்தக் கட்டுரை பேசாமல், புலவரை விதந்தோதும் காரியத்தை மட்டுமே செய்கிறது. இது விமர்சனம் அல்ல. பூச்சொரிதல் மட்டுமே.

பாமாவின் மனுஷி நாவலைப் பற்றிய இவரது பார்வை சரியான உள்வாங்கல்.  நியாயமாக விமர்சித்திருக்கிறார். இதற்காக இந்நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.

பெண் நோக்கில் பாரதியாரின் மூன்று கதைகள் என்று இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பாரதியாரின் அந்தக் கதைகளில் ஏதோ பெண்ணியம் இருப்பதாக நினைத்து மெய் சிலிர்த்திருக்கிறார். பாரதியார் பெரிய கவிஞர்தான். தேசியகவிதான். அதற்காக அவர் எழுதிய எல்லாவற்றையும் முழுவதும் ஏற்க முடியாது. அவர் பாடல்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ எழுதிய அதே பாரதிதான் இங்கிலாந்து இளவரசர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்திப் பாட்டு எழுதியவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பாரதியிடம் புதுமைக் கருத்துகள் இருந்தது போல் பழமைவாதமும் இருந்தன.  தான் உண்மை என்று கருதுவதை அதிகாரம் சமூகத்தில் விநியோகம் செய்கிறது. கவிஞர்களும், எழுத்தாளர்களும் அதை மறு விநியோகம் செய்கிறார்கள். பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்றால் அவளைக் கொண்டாடவேண்டும். எனவேதான், பெண்ணை தேவதையாக, அழகியாக, கற்புக்கரசியாக ஆண் வடிவமைத்தான். அவளை அந்தப் பாத்திரங்களை வகிப்பதற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திதான்.

அதன்படி முதல் கதை ‘அமெரிக்கப் பெண் கல்யாணத்துக்கு முன் தன் கணவன் முகத்தைப் பார்ப்பாள். கல்யாணத்துக்குப் பின் பிற ஆடவர் முகத்தைப் பார்ப்பாள். ஆனால், ஒரு கிழக்கு தேசப் பெண்ணுக்கோ கல்யாணத்துக்கு முன் தன் கணவன் முகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருவதில்லை; ஆன பின்னர் அவர் முகத்தை மட்டுமே பார்ப்பாள்’ என்று சொல்கிறது. இந்தியப் பெண்ணின் கற்பை விதந்தோதும் தன்மை இதில் இருக்கிறது. கற்பைப் பற்றி அதிகாரம் விநியோகம் செய்திருக்கும் கருத்தின் மறு விநியோகமே இது.

இரண்டாவது கதைப்படி, ‘விக்கிரமாதித்தன் தன் மனைவி ஸ்ரீமுகி இறந்தால், தானும் உடன்கட்டை ஏறுவதாகக் கூறுகிறான்’

பாரதியார் ஒரு தடவை ஒரு தலித் இளைஞனுக்கு பூணூல் போட்டு அவனை பிராமணனாக்கினார். அதைப் போலத்தான் இருக்கிறது. ‘நான் இறந்தால் நீ உடன்கட்டை ஏறுவாய் அல்லவா? அது போல் நீ இறந்தால் நான் உடன் கட்டை ஏறுவேன் என்பது. உடன்கட்டைக்கு பதில் உடன்கட்டை என்று இதற்கு அர்த்தம் கற்பிக்கலாம்.  பாரதியார் தலித் இளைஞனுக்கு பூணூல் போட்டதை விட, இவரது பூணூலை அறுத்து எறிந்து விட்டு அவனை தனக்கு சமமாக்கிக் கொண்டு இருந்து இருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. பாரதியின் பழமை மீதான பிடிப்பை இதன் மூலம் கண்டறியலாம்.   

‘ஒரு விதவைப் பெண்ணை காவி கட்ட வைத்து தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்’

இது மூன்றாவது கதை. இதில் வரும் விதவைப் பெண்ணுக்கும் சதியில் வைத்து எரிக்கப்படும் அபலைப் பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இக்கதையில் வரும் விதவைப் பெண்ணை சதியில் வைத்து எரிக்கவில்லையே தவிர, உடல் முழுக்க மிளகாய் தடவி தெய்வம் ஆக்கி வணங்குகிறார்கள். சதியில் இறந்தவள் இறந்த தெய்வம். இவள் உயிர் இருந்தும் செத்துக் கொண்டிருக்கும் தெய்வம். விதவைப் பெண் ஒருத்தியை தெய்வமாகக் காட்டுவது புதுமை என்று புல்லரிக்கிறார் ஆசிரியர். இதில் என்ன புதுமை இருக்கிறது. ‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? கணவனைத் தொழுது எழும் பெண், ’மழையே நீ பெய்’ என்றால் பெய்யுமாம். இது ஒரு நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மனோபாவம். இதை வள்ளுவர் கால அதிகாரம் விநியோகம் செய்தது. அதை வள்ளுவர் மறு விநியோகம் செய்தார். சதியை எதிர்க்கும் பாரதி விதவை தெய்வமாவதை ஆதரிப்பது ஒரு நகைமுரண்.

அதிலும் அந்தப் பெண் நீண்ட வசனம் பேசுவது ஒட்டாமல் இருக்கிறது. அது அந்தப்பெண் பேசுவது போல் இல்லை. பாரதியார் பேசுவது போல் இருக்கிறது. தனது கருத்தைச் சொல்வதற்கு ஒரு mouth piece ஆக அந்தப் பெண் கதாபாத்திரத்தை பாரதியார் பயன் படுத்தி இருக்கிறார். அவ்வளவுதான்.

இந்த மூன்று கதைகளிலும் பாரதியார் காட்டும் பெண் புதிய சமுதாயத்தின் பிரதிநிதியாகத் திகழ்கிறாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று மூக்கில் விரல் வைக்கிறார் ஆசிரியர். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

பாரதிதாசன் ஒரு மரபுக் கவிஞர். அவரது மூன்று குறுங்காப்பியங்களில் மரபு மீறல் நிகழ்ந்துள்ளது என்பதை ஆசிரியர் நிறுவுகிறார். மரபார்ந்த இலக்கியங்களில் தலைவனைப் பார்த்துத் தலைவி அஞ்சுவாள். பாரதிதாசனின் சஞ்ஜீவிபர்வதத்தின் சாரல் என்ற குறுங்காவியத்தில் வரும் தலைவி தலைவனை வெருட்டுகிறாள். புரட்சிக்கவி என்னும் குறுங்காவியத்தில் வரும் வர்ணனைகள் மரபார்ந்த அழகியல் வர்ணனைகளுக்கு மாறாக, சமூகப்பிரக்ஞையுடன் கூடிய வர்ணனைகளாக இயற்றப்பட்டுள்ளன. வீரத்தாய் என்ற குறுங்காவியத்தில் வரும் அரசி விஜயராணி முடியாட்சிக்குப் பதிலாகக் குடியாட்சியை நிறுவுகிறாள். பாரதிதாசனின் இக்குறுங்காவியங்கள் பெண்களை போரில் ஈடுபடுத்துதல், சாதி எதிர்ப்பை மொழிதல், மன்னராட்சியை வெறுத்து மக்களாட்சியை நிறுவுதல் போன்ற தன்மைகள் மூலம் பாரதிதாசனின் பிரதிகள் ‘மரபு மீறலை’ நிகழ்த்தி இருக்கின்றன என்கிறார் ஆசிரியர்.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘மீன்காரத்தெரு’ என்ற நாவலின் விமர்சனத்தில் ஜாகிர் ராஜாவை எழுத்தாளர் வண்ணநிலவனுடன் ஒப்பீடு செய்கிறார். மீன்காரத்தெருவில் நிலவும் ஆணாதிக்க நிலவரம். பெண்கள் உடல்களாக உபயோகிக்கப்படும் அவலம். முஸ்லீம்களுக்குள்ளேயே நிலவும் கலாசார ஒடுக்குமுறைகள், அனைத்தையும் நாவல் பேசுகிறது. சமூக அடுக்கில் கீழிருந்து மேலாக விரியும் ஒரு மாற்றுப் புனைவு என்று இந்த நாவலை ஆசிரியர் அடையாளப்படுத்துகிறார்.. இது சரியான பார்வையே.

ஒரு ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவலின் தலைப்போ என்று புத்தம் வீடு என்ற நாவல் வந்தபோது வாசகர்கள் நினைத்தார்கள். பின்பு ஆசிரியரின் பெயரைப் பார்த்து மலையாள மொழிபெயர்ப்பாக இருக்குமோ என்றும் யோசித்தார்கள். பின்புதான் அது ஒரு தமிழ் நாவல் என்று தெரிந்தது. அதன் இடம் தமிழில் முக்கியமானது என்றும் தெரிந்தது.  அந்த நாவலைப் பற்றிச் சொல்வதென்றால் பெரிய வீட்டுப் பெண் லிஸிக்கும், பனையேறி வீட்டுப்பையன் தங்கராஜ் ஆகிய இருவுக்கும் இடையே வந்த காதலும், அதன் விளைவாக நிகழும் போராட்டங்களும் என்று சொல்லலாம்.

உன்னைபோல் ஒருவன் என்ற திரைப்படத்தின் விமர்சனத்தையும் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் ஒரு புது முயற்சியை இந்தப் படம் எடுத்துக் காட்டியது. இது ஒரு புது முயற்சி. அவ்வளவுதான்.. இதைப்பற்றிப் பேசும் போது,’சமூக மாற்றத்துக்குப் பாடுபட்டு வரும் போராட்ட இயக்கங்களின் பங்களிப்பைப் பற்றி இப்படம் ஏன் மௌனம் சாதிக்கிறது? என்று கேட்பது அழகியல் ஃபாசிசம் (aesthetic facism). தன்னுடைய கதை, கதாபாத்திரங்கள், வசனம், இயக்கம் போன்ற எல்லாமே ஒரு இயக்குநர் என்ற கலஞனின் தேர்வு சார்ந்தது. அதில் அவன் என்ன பிழை செய்திருக்கிறான் என்பதுதான் ஒரு விமர்சகனின் வேலை. அந்த ‘அது’ ஏன் அப்படி இல்லை. இந்த ‘இது’ ஏன் இப்படி இல்லை என்று குற்றம் சாட்டுவது தன் விருப்பத்தை ஒரு பிரதியின் மேல் திணிப்பதாகும். அது ஒரு வன்முறை.  அது இந்த விமர்சனத்தில் நிகழ்கிறது.

சொல்லாத சேதிகள் என்ற ஈழப்பெண்களின் கவிதைத் தொகுப்பு, சல்மாவின் சாபம் சிறுகதைத் தொகுப்பு, குறித்த விமர்சனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. குடும்ப நிறுவனமும் சரி, புற உலகும் சரி பெண்களை விரோத பாவத்துடனேயே கண்காணிக்கின்றன என்கிற கசப்பான உண்மையை எடுத்துரைக்கின்றன.

வெ.இறையன்புவின் சாகாவரம் நாவல், மரணத்தைப் பற்றிப் பேசுகிறது. ’மரணம் நிச்சயம் என்று ஆனபின்பு வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?’ என்கிறது இருத்தலியம். இறையன்புவின் நாவலோ ‘சாவாமை சாபம்’ என்கிறது.

ரேவதி என்கிற அரவாணியின் முதல் நூலைப் பற்றிய தனது விமர்சனத்தை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். காலங்காலமாக அரவாணியர் மேல் இருந்த பயம் கலந்த வெறுப்புணர்வை இந்த நூல் போக்குகிறது என்கிறார். இந்த நூல் அரவாணிகளை சரிநிகர் சமானமாக நடத்த வேண்டும் என்று கோருகிறது. இன்னும் இரண்டாவது பாலினமான பெண்ணே ஆணுக்கு சரிநிகர் சமானமாக நடத்தப்படவில்லை எனும் போது மூன்றாம் பாலினமான அரவாணிகள் அந்த இலக்கை எப்போது எட்டுவார்களோ, தெரியவில்லை.

ஆர்.சூடாமணி குடும்பம் என்ற நிறுவனத்தின் மேல் வெறுப்புக் கொண்டவர். ஐரோப்பியப் பெண்ணியவாதிகளைப் போல்,’நான் தனி, என் உணர்வுகள் தனி. எனக்குக் குடும்பமும், கணவனும், குழந்தையும் வேண்டாம்’ என்ற கொள்கை கொண்டவர். தனது கருத்தின் சாயலில் யாமினி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, ‘இரவுச்சுடர்’ என்ற நாவலை எழுதி இருக்கிறார். யாமினி ஒரு புரட்சிப் பெண். மற்றவர்களால் புரிந்து கொள்ள்ப்பட இயலாதவள். அவளுக்குத் திருமணம் நடக்கவே செய்கிறது. ஆனாலும், அவளாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. கணவனையும் மகிழ்ச்சி அடைய விடுவதில்லை. இறுதியில் அவள் இறந்தும் போகிறாள். பெண்ணிருப்பின் பூரணத்துவத்துக்கு இவளைப் போன்ற பெண்களும் தேவைப்படுகிறார்கள் என்கிறார் ஆசிரியர். அது என்ன ’பெண்ணிருப்பின் பூரணத்துவம்’ என்று தெரியவில்லை.

இத்தொகுப்பின் அடுத்த கட்டுரையாக கவிஞர் இன்குலாப்பின், இன்குலாப் கவிதைகள் இடம் பெற்றுள்ளது. ‘சரிநிகர் சமானமான புதுத் தமிழ்ச்சமூகத்தைக் கட்டி எழுப்பும் ஓர் இலக்குடன் இன்குலாப்பின் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன’ என்று கண்டு சொல்லும் ஆசிரியர் ‘தமிழ்ச்சமூகத்தில் உருவாக வேண்டிய புதிய புரட்சிகரமான மாறுதல்களுக்கான உந்து விசைகளாய்’ இன்குலாப் கவிதைகள் திகழ்வதாக’ கருத்துரைக்கிறார். அவற்றில் உண்மையில் ‘கவிதை’யாக இருப்பது எத்தனை, வெறும் பிரசாரங்களாக இருப்பது எத்தனை என்பது பற்றிப் பேசவில்லை.

இறுதியாக சங்க இலக்கியத்தில் ‘ஒரு பாடல் மட்டுமே எழுதிய பெண்பாற்புலவர்கள்’ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. புறநானூற்றில் மொத்தம் 17 பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.  அவர்களால் பாடப்பட்ட பாடல்கள் 62. இவர்களில் ஒரு பாடல் மட்டும் பாடிய புலவர்கள் பத்து பேர். அவர்கள் எழுதிய அந்தப் பாடல் எது, அதைப் பற்றிய விவரணை என்ன ஆகியவற்றை கட்டுரை விரித்துரைக்கிறது.இது ஒரு நல்ல கட்டுரை என்றே சொல்லலாம்.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை அகநானூறு கூறும் பெண்களைப் பற்றிப் பேசுகிறது. இறுதிக் கட்டுரை புறநானூறு தெரிவிக்கும் பெண்பாற்புலவர்கள் பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறது. இது ஒரு நல்ல உத்தி என்று சொல்லலாம்.

எழுத்து இரண்டு விதம். ஒன்று எடுத்துரைப்பு விவரணை (Descriptive narrative)  இரண்டு கேள்விக்குள்ளாக்கும் விவரணை (Interrogative narrative) நவீன பிரதிகள் யாவும் எடுத்துரைப்பு விவரணை என்ற பிரிவைச் சேர்ந்தவை. உள்ளதை உள்ளபடி விவரிப்பவை அவை. பின் நவீன பிரதி என்பது கேள்விக்குள்ளாக்கும் பிரதியாகும். இவை வெறுமனே கதையை மட்டும் விவரித்துவிட்டுப் போகாது. எடுத்துக்காட்டாக கல்கியின் பிரதிகள் எடுத்துரைப்புப் பிரதிகள். புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ போல் எழுதப்பட்ட பிரதிகள் கேள்விக்குள்ளாக்கும் பிரதிகள். இவை ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கும்.

விமர்சனமும் அப்படியே. இருப்பதை அப்படியே எடுத்துரைப்பது நவீன விமர்சனம். சொல்லப்பட்டதைத் தாண்டி ஒளிந்திருக்கும் பிரதியின் அரசியலை வெளிப்படுத்துவது. தகர்ப்பு விமர்சனம். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது பெரும்பாலும் நவீன விமர்சனமே. படித்ததை அப்படியே பகிர்ந்து கொள்ளும் போக்கு இதில் இருக்கிறது. எனினும், நூலாசிரியரின் கூர்மையான பார்வையும், பிரதிகளை அலசும் முறையும் சில இடங்களில் தகர்ப்பு விமர்சனமாகவும் இருக்கிறது. இது முக்கியமானது. இதுதான் இந்த நூலை முக்கியமான வரவாக்குகிறது..
                     <><><><><>




No comments:

Post a Comment