Friday, February 27, 2015

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்
 புதுமைதாசனின் 
கதையாடல்கள்
*
எம்.ஜி.சுரேஷ்

ஷேக்ஸ்பியரை வாசிப்பவன் ஷேக்ஸ்பியராகவே ஆகிவிடுகிறான்’ என்று ஒரு முறை லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹே எழுதினார். அதைப்போலவே புதுமைப்பித்தனை வாசித்து வாசித்து தன்னுள் ஒரு புதுமைப்பித்தனாக,  ஒரு தனித்த சுயத்தைக் கட்டமைத்துக் கொண்டவர் புதுமைதாசன். புதுமைப்பித்தனின் கூரிய சிந்தனை, எள்ளல், சமூகத்தின் மீதான விமர்சனம் யாவும் புதுமைதாசனுக்கும் கைவருகிறது என்பது கவனிக்கத் தக்கது.

பொதுவாக தாசன் என்று பெயர் சூட்டிக் கொள்வது தமிழ் மரபு. பாரதிதாசன், கம்பதாசன், வாணிதாசன், சுப்புரத்தினதாசன் (சுரதா) போன்ற பல தாசன்களை நாம் அறிவோம். தாசன் என்பது பழைய மரபு. புதுமை அதற்கு எதிரானது. இவர் புதுமையையும் அதற்கு எதிரான ’தாசனை’யும் இணைத்துத் தன் பெயரை வைத்துக் கொண்டிருப்பது எதிர்மறைகளை இணைக்கிறது எனலாம்.

புதுமைதாசன் என்று அறியப்ப்டும் பி.கிருஷ்ணன் அவரது ’நாற்பதாண்டு எழுத்துப்பணியில் – வெவ்வேறு காலக்கட்டத்தில் – பல இதழ்களுக்கும், வானொலிக்கும் நான் எழுதிய சிறுகதைகள் பலவற்றுள் பத்துச்சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன’ என்று புதுமைதாசன் சிறுகதைகள் என்ற தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அந்த்த் தொகுப்பில் பத்து சிறுகதைகள் உள்ளன. இந்தப் பத்துச் சிறுகதைகளும் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய சிங்கப்பூர் எப்படி இருந்த்து; அந்தக் காலத்து மக்களின் வாழ்க்கை நிலவரம் எவ்விதம் இயங்கியது என்பது போன்ற அரிய தகவல்களைத் த்ங்களிடத்தில் கொண்டுள்ளன.

‘பரோபகாரி’ சிறுகதையில் வரும் கதாநயகன் குடியிருக்க எங்கேயாவது வீடு கிடைக்குமா என்று அலைந்து திரிந்து கடைசியில் பல ஒண்டுக்குடித்தன்ங்கள் கொண்ட ஒரு வீட்டில் ஓர் அறையில் ஒண்டிக்கொள்கிறான். ஆக, பல ஒண்டுக் குடித்தனங்கள் கொண்ட  தனி வீடுகள் சிங்கப்பூரில் ஒருகாலத்தில் இருந்தன என்பது இக்கதையால் தெரிகிறது. ‘உதிரிகள்’ சிறுகதையில் வரும் கதைமாந்தர் இன்றைக்கு இந்தியாவில் திரியும் இளைஞர்களை நினைவு படுத்துகின்றனர். இவர்களைப் பற்றித்தான் ‘சாலையோரத்திலே வேலையற்றதுகள்; வேலையற்றதுகளின் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்; வேந்தே! அதுதான் காலத்தின் குறி’ என்று வேலைக்காரி நாடகத்தில் அறிஞர் அண்ணா எழுதினார். இன்றைக்கும் அந்தக் ‘காலக்குறி’யை இந்தியா தாண்டவில்லை. சிங்கப்பூர் தாண்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’வாழமுடியாதவள்’ என்ற சிறுகதை ஜப்பானியர்களின் சிங்கப்பூர் மீதான படையெடுப்பை ஆவணப்படுத்துகிறது. அந்தக் காலக்கட்டத்தில் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கை எவ்விதம் இருந்தது என்பதை எடுத்துரைக்கிறது. இந்தச்சிறுகதையில் கண்ணுச்சாமி என்ற தமிழன் ஒரு மலாய்க்காரியை மண்ந்து கொள்கிறான். ‘தெளிவு’ என்ற இன்னொரு சிறுகதையில் ஒரு தமிழன் சீனப்பெண் ஒருத்தியை மண்ந்து கொள்கிறான். ஆக, இரு வேறு தேசிய இனங்களுடன் தமிழர்கள் மண உறவு கொள்ளும் செய்தி இதில் பதிவாகி இருக்கிறது. மேலும் மலாய், சீனப்பெண்கள் சற்று சுதந்திரமானவர்கள். தமிழ்ப்பெண்களைப் போல் கட்டுப்பெட்டிகள் அல்ல. இதனால் அவர்களை மணக்கும் தமிழர்கள் சந்தேக புத்தியால் அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறார்கள் என்ற கசப்பான விஷயத்தையும் கதைகள் விவரிக்கின்றன.

ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை ‘பரோபகாரி’ என்று விளிக்கும் இவரது செயல் ஐம்பதுகளில் ஜீரணிக்க இயலாத ஒன்று. முகச்சுளிப்புடன் வேசி என்றே அந்தக்காலகட்டததில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அழைக்கப்பட்டார்கள். தவிரவும், ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கதாநாயகியாக வைத்துக் கதை எழுதக்கூடிய அளவுக்கு  அந்தக் காலத்தில்  யாரும் துணிவுடன் இருக்க மாட்டார்கள். அத்தகைய துணிச்சல் புதுமைதாசனுக்கு இருந்திருக்கிறது. பரோபகாரி கதையின் கடைசி வரி கதைக்கு வெளியே எம்பிக் குதிக்கிறது. கற்பு என்பது இலக்கியத்தில் மட்டுந்தான் இருக்கிறதா? என்ற அந்த வரி கதைக்கு வெளியே எம்பிக்க்குதிக்கிறது. ஒரு கதையை எழுதும் போது எந்த ஒரு வரியும் கதையை மீறி இருக்கக்கூடாது என்பது விதி. அந்த விதியை புதுமைதாசன் மீறி இருக்கிறார். ஆனாலும், இதை நாம் குறை சொல்ல முடியாது. ஏனெனில், புதுமைப்பித்தனும் அவரது ’பொன்னகரம்’ என்ற சிறுகதையில் கடைசி வரியில் கதையிலிருந்து எம்பிக் குதித்தவர்தான். ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்’ என்று கதைக்கு வெளியே வந்து பேசியவர் புதுமைப்பித்தன். அவர் செய்தது சரி என்றால், இவர் செய்ததும் சரியே.

உதிரிகள் என்ற சிறுகதை, ‘தங்களுக்குள் கொச்சை ம்லாய் பேசிக்கொள்ளும் தமிழ்ப்பரம்பரை எப்போதோ உருவாகிவிட்டது’ என்கிற திகீர் உண்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது. சிங்கப்பூர் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் உருப்படாத தமிழ் இளைஞர்களைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. அவர்களை உதிரிகள் என்று அடையாளப்படுத்துகிறது. இந்த உதிரிகள் கல்வி பொருளாதார நிலையில் பின் தங்கிவிட்ட குடும்பங்களின் உற்பத்தி. இந்தப் பரம்பரையே இப்படி என்றால், இதற்கு வாரிசாக வரப் போகும் அடுத்த தலைமுறையின் நிலை என்ன? இதில் என்ன முன் தோன்றிய கல்;பின் தோன்றிய மண், மூத்தகுடி என்று கேள்விகளை எழுப்புகிறார் ஆசிரியர்.

புதுமைதாசனின் கதை மாந்தர் பலதரப்பட்டவர்கள். வங்கியில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும்  கண்ணுச்சாமி, தோட்டவேலை செய்யும் முருகன், பங்குச் சந்தையில் வாழ்வை இழந்த கதிரேசன். செருப்புத் தைக்கும் தொழிலாளி வேலப்பன், அடிக்கடி ஆண்களை மாற்றும் ரேவதி என்று எல்லாருமே நம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவர்கள்தான். இவரது கதைகளில் மிளிரும் தன்சார்புப் பார்வை அவர்களை இவரது கருவிகளாக மாற்றிவிடுகிறது.

இவரது பெரும்பாலான கதைகள் முற்றுப் பெறாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அதாவது ஒரு கதை என்பது ஆரம்பம், நடு, முடிவு என்கிற மூன்று பாகங்கள் கொண்டது. புதுமைதாசனின் கதைகளில் ஆரம்பமும் நடுவும் இருக்கின்றன. முடிவு இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, பரோபகாரி என்ற கதையில் ஆரம்பம் இருக்கிறது. கதாநாயகன் வாடகைக்கு வீடு தேடுகிறான். வீடு கிடைத்து அதில் பல கதாபாத்திரங்களோடு ஒண்டுக் குடித்தனவாசி ஆகிறான். இது நடுப்பகுதி. பின்னர் அந்த வீட்டில் ஒரு பாலியல் தொழிலாளி இருப்பது தெரிகிறது. வாசகன் எதிர்ப்பார்ப்பது போல்,அந்தப் பாலியல் தொழிலாளியை கதாநாயகன் நேருக்கு நேர் சந்திக்கிறான். அது ஒரு க்ளைமாக்ஸ் கட்டம். அந்த இடத்தில் கதை நிறைவாக முடிய வேண்டும். ஆனால், கதை அப்படி முடிவதில்லை. பாலியல் தொழிலாளி நம கதாநாயகனை அழைக்கிறாள். உடனே அவன் அவளைத் திட்டித் துரத்தி விடுகிறான். இப்படி முடிகிறது கதை. இது உப்புச்சப்பற்ற முடிவு. இதனால் கதையில் வீர்யம் குறைந்து விடுகிறது. இவரது பிற கதைகளும் இது போலவே சட்டென்று முடிந்து போகின்றன. ஒரு கதைக்கு ஆரம்பம், நடு, முடிவு தேவையில்லை. அது அதன் போக்கில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது பின் நவீன கதையாடல்களுக்குப் பொருந்தும். புதுமைதாசனின் கதைகள் நவீன சிறுகதைகள். அவற்றுக்குப் பொருந்தாது. எனினும், புதுமைதாசனின் எழுத்தின் அடர்த்தி அந்த பலவீனத்தைக் குறைத்துக்காட்டி விடுகிறது எனலாம்.

புதுமைதாசனின் நடை இயல்பானது. அடித்தட்டுவாசிகளைப் பற்றி எழுதினாலும் ‘மெலோட்ராமா’ நோயால் பாதிக்கபடாத நடை. ’ஐயோ, இந்த உடல் ஊனமுற்றவனைப் பாருங்கள்; ஐயகோ..’  என்று வாசகனிடம் பரிதாபம் கோரி மன்றாடாத நடை இவருடையது. இதுவே இவரது கதாபாத்திரத்தின் மரியாதையையும், இவரது எழுத்தின் மரியாதையையும் காப்பாற்றி விடுகிறது.

நா. கோவிந்தசாமியின் கதைகள் நம் தோளில் தட்டி, ‘வாழ்க்கை குரூரமானது; அதைத் தீவிரமாகப் பார்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தும். புதுமைதாசனின் கதைகளோ, ‘வாழ்க்கை குரூரமானதுதான். அதற்காக அதைத் தீவிரமாகத்தான் பார்க்க வேண்டும் என்பதில்லை. சிரித்துக் கொண்டும் பார்க்கலாம். சிரிப்பு சிந்தனையைத் தூண்டும்’ என்று சொல்கின்றன.


புதுமைதாசன் என்னதான் புதுமைப்பித்தனின் வாரிசாக இருந்தாலும், அவர் அப்படியே புதுமைப்பித்தனைப் போலவே அடியொற்றி எழுதவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிப்பாணியிலேயே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமைப்பித்தனின் நடை அவரே சொல்வது போல்,’தத்தித் தாவிச் செல்லும் நடை..’ இவருடையதோ தொடர்ச்சியான நடை. தவிரவும், எள்ளல் இல்லாத இயல்பு நவிற்சியிலும் இவர் கதைகள் எழுதி இருக்கிறார். ‘உதிரிகள்’ என்ற சிறுகதையில் எள்ளல் தொனியை விட உக்கிரமான கோபம் கொப்பளிக்கிறது என்பது முக்கியமானது. அது ஒரு கலைஞனின் கோபம். அந்தக் கோபம்தான் புதுமைப்பித்தனை இயங்க வைத்த்து. புதுமைதாசனையும் இயங்க வைத்திருகிறது என்று சொல்லத்தோன்றுகிறது.

***

Saturday, February 21, 2015

**
ஒரு பதிப்பகமும், 

இரு புத்தகங்களும்

**


எம்.ஜி.சுரேஷ்
 * * *
நான் சொல்ல வருவது, 
‘கோட்பாடுகள் யாவும் அனுமானங்களே 
எனவே அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். கோட்பாடுகளுக்கிடையே சிக்கி நசுங்கும் 
மனிதனைக் காப்பாற்றுங்கள் என்பதைத்தான்.
* * *

டந்த ஞாயிறு (15.2.15) அன்று ஒரு டூ-இன்-ஒன் (two-in-one) நிகழ்ச்சி நடந்தது. ஏக காலத்தில் ஒரு பதிப்பகத்தின் பிறந்தநாள் விழாவும், இரு புத்தகங்களின் வெளியீட்டு விழாவும் நடந்தன.

மென்மையான மெல்லிசை காதுகளை வருட, நிகழ்ச்சி ஆரம்பமானது. அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே மற்றும் நன்றி, ஓ ஹென்றி ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவான அன்று கூட்டம் அலைமோதியது. (இந்தக் காலத்தில் ஓர் இலக்கியக் கூட்டத்துக்கு  ஐம்பது பேர் வந்தாலே அதை அலைமோதும் கூட்டம் என்று கொள்ள வேண்டும்.)

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தமிழ்மகன் அனைவரையும் வரவேற்றார். பொக்கிஷம் புத்தக அங்காடியின் பதிப்பாளரான மேக்ஸிம் கேக் வெட்டினார்.

கவிஞர் ஞானக்கூத்தன் புத்தகங்களை வெளியிட்டார். இரு நுல்களில் நன்றி ஓ ஹென்றி குறித்து நகைச்சுவையாகப் பேசிப் பாராட்டிய அவர், அனைத்துக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசியபோது சர்ச்சை எழுந்தது. அனைத்துக் கோட்பாடுகளும் நூலில் நான் தொல்காப்பியத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவரோ பதஞ்சலியின் சமஸ்கிருத இலக்கணம் பற்றிப் பேசினார். என்னுடைய நூலில் “சொல்லையும் பொருளையும், எல்லா மொழிகளும் கயிற்றால் கட்டி வைத்திருக்கின்றன. அமைப்பியம் அந்தக் கயிற்றை வெட்டி எறிந்தது. எனவே, சொல் வேறு பொருள் வேறு“ என்று எழுதி இருந்தேன்.

அதற்கு ஞானக்கூத்தன் சொல்லை வைத்து மட்டும் பொருள்படுத்த முடியாது. சொல்லை ஒட்டி எழும் ஓசையில் கூட பொருள் வரும் என்றார். அதற்கு நான் ஓசை என்ன, மௌனத்தில் கூட அர்த்தம் வரும் என்று சொன்னேன். உதாரணமாக, என் கையை உள்ளங்கை தெரியுமாறு உயர்த்திக் காட்டினேன். இப்போது என் கையைப் பார்க்கும் உங்களுக்கு என்னென்ன அர்த்தங்கள் தோன்றுகின்றன என்று கேட்டேன். ’நில்’ என்பது ஓர் அர்த்தம். ‘யாமிருக்க பயமேன்’ என்று இன்னோர் அர்த்தம். இஸ்லாமிய மதச்சின்னம் என்று ஓசையை மீறிப் பல அர்த்தங்கள் தோன்றுகின்றன. என்று நான் சொன்னேன். நான் எழுதியது மேறக்த்திய தத்துவம் குறித்து. ஞானக்கூத்தன் பேசிக்கொண்டிருந்ததோ கிழக்கத்திய தத்துவம் பற்றி.

அடுத்துப் பேசிய முனைவர் கமலா கிருஷ்ணமூர்த்தி தான் பேச வேண்டிய நூலான அனைத்துக் கோட்பாடுகளும் அனுமாங்களே என்பதைப் பற்றிப் பேசாமல், நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய அட்லாண்டிஸ் மனிதன் நாவலைப் பற்றி வெகுநேரம் பேசினார். பின்பு போனால் போகட்டும் என்று அனைத்துக் கோட்பாடுகள் நூலைப் பற்றியும் கொஞ்சம் பேசினார். ’அனைத்துக் கோட்பாடுகளைப் பற்றி மட்டும் எழுதியது போதாது. அவற்றைக் கடந்து நிற்கும் உண்மையைப் பற்றியும் பேசவேண்டும்’ என்றார். ’எந்த உண்மையைப் பற்றிப் பேச வேண்டும்? ஒற்றை உண்மை என்று எதுவும் இல்லை’ என்று அவருக்கு நான் பதில் சொன்னேன். இங்கு இரவு ஒன்பது மணி என்றால், சிங்கப்பூரில் இரவு பதினொன்றரை மணி. அதே போல் லண்டனில், மாலை நான்கு மணி. இங்கு இரவு என்றால் அமெரிக்காவில் பகல். இவை எல்லாமே உண்மைகள். உண்மையும் பன்மைத் தன்மை கொண்டது. எல்லாவற்றையும் மீறிய ஒற்றை உண்மை எதுவும் கிடையாது’ என்று நான் சொன்னேன்.

என்னுடைய கட்டுரையான அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே என்ற நூலில் நான் சொல்ல வருவது, கோட்பாடுகள் யாவும் அனுமானங்கள் என்பதை மட்டும் அல்ல. அதை மட்டும் சொல்வதற்கு ஒரு புத்தகத்தை எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் சொல்லாமல் விடப்பட்ட செய்தி முக்கியமானது. ஜார்ஜ் ஆர்வெல் Animal farm எழுதியதற்குக் காரணம் விலங்குப் பண்ணையைப்பற்றி விரித்துரைப்பதற்கு அல்ல. அதைப் பற்றிச் சொல்வதன் மூலம்  சோவியத் யூனியன் ஒரு விலங்குப் பண்ணை என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். இப்படி ஒன்றைச் சொல்லி வேறொன்றை உணர்த்துவதற்கு ஆங்கிலத்தில் allusion என்பார்கள். தமிழில் மறைமுகக் குறிப்பு என்று குறிப்பிடலாம்.

என்னுடைய நூலில் மறைமுகக் குறிப்பாக நான் சொல்ல வருவது, ‘கோட்பாடுகள் யாவும் அனுமானங்களே எனவே அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். கோட்பாடுகளுக்கிடையே சிக்கி நசுங்கும் மனிதனைக் காப்பாற்றுங்கள் என்பதைத்தான். ஒரு கோட்பாட்டுக்காரர்கள் பாபர் மசூதியை இடிக்கவும் வேண்டாம். எதிரான கோட்பாட்டுக்காரர்கள் மும்பையில் வெடி குண்டு தாக்குதல்களை நடத்தவும் வேண்டாமே. இதைத்தான் என் கட்டுரை மறைமுகமாகப் பேசுகிறது.

இதை நான் இப்போது இப்படி பட்டவர்த்தனமாய்ச் சொல்லும்படி ஆகிவிட்டது.

’வறட்டுத்தனமாகக் கோட்பாடுகளைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். பலவிதமான கோட்பாடுகளுக்கும், அரசியலுக்கும் இடையே மாட்டிக்கொண்டு பிதுங்கித் தொங்கிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கை என்ற வஸ்துவைப் பாருங்கள். அதற்கு கவனம் கொடுங்கள், அக்கறை காட்டுங்கள்’ என்று கோரிய பாலஸ்தீன அறிவுஜீவியான எட்வர்ட் சேத் சொன்ன சேதியும் இதுதான்.

என்னுடைய நூலில் ஹிட்லரையும், ஸ்டாலினையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கிறேன் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கும் நான் பதில் சொன்னேன். ஓர் ஆட்டின் கழுத்தை அறுக்கும் போது, பிஸ்மில்லா என்று சொல்லி அறுத்தால் என்ன, மாரியாத்தா என்று சொல்லி அறுத்தால் என்ன, ஏசுவே என்று சொல்லி அறுத்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். ஆடு கழுத்தறுபட்டுத் துடித்துச் சாவது நிச்சயம். ஆஷ்விட்ஸ் வதைமுகாமாக இருந்தாலும் சைபீரிய வதைமுகாமாக இருந்தாலும் வதைபட்டது மனித இனம்தானே?... என்று சொன்னேன். இதைப் பற்றி மேடையில் நான் பேசாத சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

சோவியத யூனியனில் லெனின் தலைமைப் பதவிக்கு வந்த போது அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் இருவர். ஒருவர், ட்ராட்ஸ்கி, அடுத்தவர் புக்காரின். தனக்கு அடுத்தபடியாக இவர்கள் இருவரும்தான் சோவியத் யூனியனை தலைமைதாங்கி நடத்த வேண்டும் என்று லெனின் விரும்பினார். அப்போது ஸ்டாலின் எங்கோ இருந்தார். லெனின் மறைந்ததும் ட்ராட்ஸ்கியையும், புக்காரினையும் அப்புறப்படுத்திவிட்டு ஸ்டாலின் தலைவரானார். ட்ராட்ஸ்கியைக் கொன்றார். புக்காரினுக்கு மரணதண்டனை விதித்தார். ஒரு பாவமும் அறியாத புக்காரினின் அப்பாவி மனைவியை வதைமுகாமுக்கு அனுப்பி சித்திரவதை செய்தார். இதையெல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் பெயரால் செய்தார். கடவுளின் பெயரால் தீவிரவாதிகள் அப்பாவி மக்களின் தலையை வெட்டுவதற்கும், தொழிலாளர்களின் பெயரால் வேண்டப்படாதவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

ஸ்டாலின் இருந்த போதே ரஷ்யக் கம்யூனிஸ்டுகளின் ஒரு பிரிவினர் அவரை’, ‘ரஷ்யப் புரட்சி நமக்களித்த தீய மேதை’ என்றும் ‘செங்கிஸ்கான்’ என்றும் அழைத்தார்கள். புக்காரினுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட போது, அவர் ஸ்டாலினுக்கு தன் கடைசிக் கடிதத்தை எழுதினார். அதில் அவர் கேட்டிருந்த ஒரே கேள்வி இதுதான். ‘நான் சாகவேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய்?’ பாவம் புக்காரின். அவருக்குத் தெரியாது. அதன் பெயர் அதிகாரத்தின் விருப்புறுதி (will to power) அதிகாரத்தின் விருப்புறுதிதான் ஒரு மனிதனை எதுவும்செய்யும் அளவுக்குத் தூண்டுகிறது. அதற்கான  உந்து சக்தியாக இருக்கிறது. தனது அதிகாரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் எதையும் உடைத்து நொறுக்கத் துடிக்கிறது. செங்கிஸ்கான், ஹிட்லர் போன்றோர் செய்தது அதைத்தான். ஸ்டாலின் செய்ததும் அதையே. யாருமே செய்யாத ஒரு கொடிய செயலையும் ஸ்டாலின் செய்தார். ரஷ்ய வரலாற்று நூல்களில் இருந்து புக்காரினின் பெயரை நீக்கினார். அவரது படங்கள், செய்திகள் ஆகியவற்றையும் அழித்தொழித்தார். அதிகாரத்தின் விருப்புறுதி ஒரு மனிதனை எவ்வளவு கீழான தன்மைக்கு ஆளாக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எனவே, மார்க்ஸீயர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் மார்க்ஸீயத்துக்கு மட்டும் வக்காலத்து வாங்குங்கள். ஸ்டாலினுக்கு வேண்டாம்

எழுத்தாளர் எஸ். சங்கரநாரயணனின், ’நன்றி ஓ ஹென்றி’ சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சப்தரிஷி பேசினார். ரசனைக்குப் புகழ் பெற்றவர் ரசிகமணி டி.கே.சி. அவருக்கு வாரிசாக சப்தரிஷி வந்துவிட்டாரோ என்று தோன்றியது. சங்கரநாராயணனின் கதைகளை விட அவர் அதிகமாக சுஜாதாவின் கதைகளைப் பற்றியே பேசினார்.

இறுதியாக நன்றியுரை ஆற்ற வந்த சங்கரநாராயணன் நேரம் கருதி சுருக்கமாக, ஞானக்கூத்தனுக்கு நன்றி, தமிழ்மகனுக்கு நன்றி, முனைவர் கமலா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி, எம்.ஜி.சுரேஷுக்கு நன்றி, சப்தரிஷிக்கு நன்றி, சுஜாதவுக்கு நன்றி என்று பேசி அவையைக் கலகலக்க வைத்தார்.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம்.. காதுள்ளவர்கள் கேட்கக் கடவது.

                          <><><><><>


Monday, February 16, 2015

பொக்கிஷம் புத்தக அங்காடி வாழ்த்துரை

பொக்கிஷம் புத்தக அங்காடி:
புதிய பதிப்பகம்
தொடக்க விழா வாழ்த்துரை

எம்.ஜி. சுரேஷ்

து ஒரு அரிய தருணம். இந்தத் தருணத்தில் ஒரு பதிப்பகம் தன்னை வெளியிட்டுக் கொள்கிறது. இதன் மூலம் ஓர் எழுத்தாளர் பதிப்பாளராகத் தன்னை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.  பொக்கிஷம் புத்தக அங்காடி என்ற புதிய பதிப்பகத்தை, எழுத்தாளர் தமிழ்மகன் ஆரம்பித்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களாகவும், பதிப்பாளர்களாகவும் மாறுவது இயல்பான வளர்ச்சியே. பி.எஸ். ராமையா, கல்கி, சுந்தரராமசாமி போன்றோர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த மரபின் நீட்சியாகத்தான் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு தமிழ்மகன் இன்று பதிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இந்த யுகம் ஓர் அரிய யுகம். இந்த யுகம்தான் எழுத்தை எழுத்தாளன் ஆளவில்லை. எழுத்துதான் எழுத்தாளனை ஆள்கிறது என்பதை அறிவித்த யுகம். அதே போல், எழுதப்பட்ட பிரதிகளும் புதிய தன்மையை எய்தியதும் இந்த யுகத்தில்தான். ஆசிரியனை அவன் இருந்த பீடத்திலிருந்து தள்ளிவிட்டு, விமர்சகனை முன்னிலைப்படுத்திய யுகமும் இதுதான்.

பாண்டிய மன்னன் செண்பகமாறனின் மனைவியின் கூந்தலுக்கு எப்படி இயற்கை மணம் இல்லையோ, அதே போல் எந்த ஒரு புத்தகத்துக்கும் இயற்கை குணம் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொருள்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது. புத்தகம் அதேதான். படிப்பவர்கள்தான் வேறு. அவர்கள்தான் வேறு வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். அதனால்தான், ஒரு சிலருக்கு ஒரு புத்தகத்தைப் பிடிக்கிறது. வேறு சிலருக்கு அதைப் பிடிப்பதில்லை.  இதைப்பற்றி லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹே சொல்லுவார்: ‘ஒரு புத்தகத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது உங்களுக்காக எழுதப்படவில்லை’

ஏன் இப்படி?

ஏன் என்றால் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான புத்தகம் என்ற ஒன்று எப்போதுமே எழுதப்பட்டதில்லை.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மொழி, பயன்படுத்தப்பட்ட சொற்கள், புழக்கத்தில் இருக்கும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட கருத்துகள் இவற்றையெல்லாம் தொகுத்து ஓர் எழுத்தாளன் தன் புத்தகத்தை எழுதுகிறான். இதை ஒரு வாசகன் எதிர்கொள்ளும்போதுதான் அது இயங்குகிறது. வாசகன் இல்லாத பிரதி கறுப்பு மை பூசப்பட்ட வெள்ளைக்காகிதங்கள் மட்டுமே.

வாசகன் தன் மனத்தில் ஏற்கனவே பதிந்திருக்கும் கருத்தை, தான் படிக்கும் புத்தகங்களில் தேடுகிறான். தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் மனோபாவத்துடன், ஒரு புத்தகத்தில் தன் முகத்தைப் பார்க்க விரும்புகிறான். அதில் அவன் முகம் தெரியும் போது மகிழ்ச்சி அடைகிறான். அது நிகழாதபோது அந்தப் பிரதி அவனுக்குப் பிடிக்காமல் போகிறது. கம்பனை ஒட்டக்கூத்தருக்குப் பிடிக்காது. ஒட்டக்கூத்தரை ஔவையாருக்குப் பிடிக்காது. ‘ஒட்டக்கூத்தனின் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள்’ என்று எழுதினார் ஔவையார்.

புதுமைப்பித்தனுக்குக் கல்கியைப் பிடிக்காது. கல்கியும் புதுமைப்பித்தனைப் புறக்கணித்தார். அவர்கள் இருவரும் மறைந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆகி விட்டது. இன்று இருவரது புத்தகங்களுமே வாசகர்களால் கொண்டாடப் படுகின்றன. தாஸ்தாயெவ்ஸ்கியை உலகம் கொண்டாடுகிறது. ஆனால், விளாதிமீர் நபக்கோவுக்கு தாஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்காது . ‘தாஸ்தாயெவ்ஸ்கி தகுதிக்கு மேல் கொண்டாடப்பட்டவர். அவர் ஒரு மூன்றாம் தர எழுத்தாளர்’ என்று அவர் சொன்னார். ஏனெனில், நபகோவின் முகத்தை தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்ணாடி காட்டவில்லை. இதுதான் பிரச்சனை. இன்றைக்கு இருவரது புத்தகங்களுமே கொண்டாடப் படுகின்றன.

எழுத்தாளர்கள் கண்ணாடிகளை உருவாக்குகிறார்கள். பதிப்பாளர்கள் அந்தக் கண்ணாடிகளைத் தயாரித்து விற்கிறார்கள். சில கண்ணாடிகள் துல்லியமாகக் காட்டுவதுபோல் தோன்றுகிறது. சில கண்ணாடிகள் மங்கலாகக் காட்டுகின்றன. வேறு சில கண்ணாடிகளோ ஒன்றைப்பார்க்க வேறு ஒன்றைக் காட்டுகின்றன.

புத்தகத்தில் நல்ல புத்தகம் கெட்ட புத்தகம் என்றெல்லாம் இல்லை. இரண்டே விதமான புத்தகங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, effective. அடுத்தது ineffective. அதாவது, பாதிப்பை ஏற்படுத்தும் புத்தகம். பாதிப்பை ஏற்படுத்தாத புத்தகம். இதை மீறி மூன்றாவதாக ஒரு புத்தகம் இல்லை.

ஹெமிங்வே, செகாவ், காளிதாசன், கம்பன், மௌனி, கல்கி, புதுமைப்பித்தன் போன்றோர் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதிகளை எழுதியவர்கள். அதனால்தான் அவை காலத்தை மீறி நிற்கின்றன. இன்றும் விற்கின்றன. தமிழ்மகன் பாதிப்பை ஏற்படுத்தும் எழுத்தை எழுதத் தெரிந்தவர்.  பாதிப்பை ஏற்படுத்தும் எழுத்துகளை அடையாளம் காணத்தெரிந்தவர். எனவே, அவரால் சமூகத்தில் பாதிப்பை நிகழ்த்தும் புத்தகங்களை வெளியிட முடியும்.  அவர் தொடர்ந்து இயங்கி பல வீரியம் மிக்க புத்தகங்களை வெளியிடவேண்டும், விரிந்த வாசகப்பரப்பைப் பெறவேண்டும் என்று அவரையும், பொக்கிஷம் புத்தக அங்காடி பதிப்பகத்தையும் வாழ்த்துகிறேன்.
                   
  <><><><><>
    
     

Friday, February 13, 2015

காலங்கள் தோறும்

திருடன் – போலீஸ்

கருத்தியல் 


எம்.ஜி. சுரேஷ்

காகவி காளிதாசனின் ‘சாகுந்தலம்’ என்ற நாடகத்தின் ஆறாம் சர்கத்தில் வரும் ஒரு காட்சி அந்தக் காலக்கட்ட சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறது.

     இரு காவலர்கள் ஒரு மனிதனை,  இரு கைகளையும் கயிற்றால் பின்புறம் கட்டி இழுத்து வருகின்றனர். அப்போது அரசனின் மனைவியின் தம்பி எதிரில் வருகிறான். அவர் தான் நீதிபதி. அவர் முன்னிலையில் இரு காவலர்களும் கயிற்றால் கட்டி இழுத்து வரப்பட்ட மனிதனை அடிக்கின்றனர்.

     ’திருடனே, ராஜாவின் முத்திரை பொறிக்கப்பட்ட இந்த விலையுயர்ந்த மோதிரத்தை எங்கிருந்து திருடினாய்?’ என்று கேட்டு அடிக்கின்றனர். அதற்கு அவன், ‘ஐயா, அதுபோன்ற காரியத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்’ என்கிறான்.

      ’பின்னே, இவரு பெரிய ஐயரு. அதனாலே, உனக்குப் பரிசா ராஜா குடுத்துட்டாரு, இல்லே?’ என்று ஒரு காவலன் ஏளனம் செய்கிறான்.

     அவன் தான் ஒரு மீனவன் என்றும், வலையில் மீன் பிடித்து அதில் தானும் தன் குடும்பமும் வாழ்வதாகக் கூறுகிறான்.

     அதற்குக் காவலர்கள், ’என்ன தூய்மையான தொழில்’ என்று நக்கலாகப் பேசுகிறார்கள்.

     ’ஐயா, நான் ஒரு பெரிய ஆற்று மீனைப் பிடித்தேன். அதை அறுத்தபோது அதன் வயிற்றில் இது இருந்தது’ என்கிறான்.

     நீதிபதி ஒரு காவலனைப் பார்த்து, அருவருப்புடன், ‘இந்த நாற்றம் பிடித்த மீனவனை நாம் நன்கு விசாரிக்க வேண்டும். நாம் நேரே அரண்மனைக்குப் போவோம்’ என்கிறார்.

     உடனே இரு காவலர்களும், அந்த மனிதனை இழுத்துக் கொண்டு போகிறார்கள்.
     அரண்மனை வருகிறது. அரண்மனை வாயிலில் மீனவனை காவலில் வைத்து விட்டு மோதிரத்துடன் நீதிபதி உள்ளே போகிறார்.

     கொஞ்ச நேரம் ஆகிறது.  மன்னரைப் பார்த்துவிட்டு வர நீதிபதிக்கு இவ்வளவு நேரமா ஆகும் என்று ஒரு காவலன் இன்னொரு காவலனிடம் கேட்கிறான். அரசரை உடனே பார்க்க முடியுமா. நேரம் காலம் பார்க்க வேண்டாமா என்கிறான் மற்றவன்.

     ’இவன் கழுத்தில் தூக்குமாலையை மாட்ட என் கை அரிக்கிறது’ என்கிறான் ஒரு காவலன். ’அப்படியெல்லாம் காரணமில்லாமல் ஒரு மனிதனைக் கொல்வது பற்றி நீ யோசிக்கக் கூடாது’ என்கிறான் இரண்டாவது காவலன். அப்போது தன் கையில் ஒரு கடிதத்துடன் நீதிபதி வருகிறார். அதைப்பார்த்த ஒரு காவலன் கைதியைப் பார்த்து, ‘அதோ மன்னரின் தண்டனைக் கடிதத்துடன் நீதிபதி வருகிறார். உனக்கு மரணம் நிச்சயம். என்கிறான்.

     வெளியே வரும் நீதிபதி ஒரு காவலனைப் பார்த்து,’சுசாகா, அந்த மனிதனை விடுதலை செய்’ என்கிறார்.

     ’விடுதலையா!, காவலர்கள் இருவரும் திடுக்கிடுகின்றனர். மீனவனின் கைக்கட்டை சுசாகா என்று விளிக்கப்பட்ட காவலன் அவிழ்த்து விடுகிறான்.

     ’அந்த மோதிரத்தின் மதிப்பு என்னவோ அதற்கு இணையான பரிசுகளை அவனுக்குத் தரச்சொல்லி மன்னர் உத்தரவிட்டிர்க்கிறார்’ என்கிறார் நீதிபதி. அவர் கையில் சில ஆபரணங்கள் இருக்கின்றன.

     காவலர்கள் இருவரும் விழிக்கின்றனர்.

     ’இவன் தூக்குக் கம்பத்தின் கீழ் நிற்பதிலிருந்து, யானையின் முதுகில் உட்காருமளவுக்கு உயர்ந்துவிட்டான்.’ என்று காவலர்களில் ஒருவன் வாயைப் பிளக்கிறான்.

     ’இந்த வெகுமதியைப் பார்த்தால் மன்னர் இந்த மோதிரத்தை மிகவும் சிறந்த அரியவகைக் கல்மோதிரம் என்று நினைக்கிறார் என்று தெரிகிறது.’

     ’அப்படியெல்லாம் இல்லை. இந்த மோதிரத்தைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. அவருக்குப் பிரியமான யாருடைய ஞாபகமோ வந்த மாதிரி இருந்தது. அவர் மனம் கிலேசமடைந்திருந்தது’ என்றார் நீதிபதி.

     ’சரியான நேரத்தில் மன்னருக்கு அணுக்கமாக சேவை செய்துவிட்டீர்கள்’ என்கிறார்கள் காவலர்கள்.

     ’இந்த மீன்களின் ராஜாவுக்கும் செய்ய வேண்டிய சேவையைச் செய்யுங்கள்’ என்றபடி ஆபரணங்களை நீதிபதி தருகிறார்.

     ’அதுதான் நியாயம்’ என்கிறான் முதல் காவலன்.

     ’மீனவனே, என் இனிய நண்பனே. மகத்தான மனிதனே, நாம் நமது நட்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, மது விடுதிக்குச் சென்று மது அருந்துவோம்’ என்று அழைக்கிறார் நீதிபதி.

     அவர்கள் அனைவரும் மேடையை விட்டு உள்ளே போகிறார்கள்.

காட்சி முடிகிறது.
*
இந்த நாடகத்தில் காளிதாசன் சில முக்கியமான செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்.

     ஒருவன் திருடன் என்று பிடிபட்ட உடன் அவனைக் காவலர்கள் அடித்து, அவமானப்படுத்தித் துன்புறுத்துகிறார்கள். அவனுக்குத் தண்டனை வாங்கித்தரத் துடிக்கிறார்கள். அரசருக்குப் பிடித்த விஷயம் ஒன்றைச் செய்து, அவரிடம் பரிசு வாங்கிவிட்டான் என்று தெரிந்ததும் நீதிபதி முதல் காவலர்கள் வரை எல்லோரும் அந்தர் பல்டி அடிக்கிறார்கள். சந்தேகக் கேஸ் திருடன் என்று பிடித்து வரப்பட்ட அவனுடன் சேர்ந்து மது அருந்தும் அளவுக்கு நட்புபாராட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

     நீதிபதி அரசனின் மனைவியின் சகோதரன் என்று குறிப்பிடுகிறார் காளிதாசன். அதாவது அரசி என்று குறிப்பிடவில்லை. அரசனுக்குப் பல மனைவிகள் இருக்கலாம். அரசி என்பவள் ஒருத்திதான் இருக்க முடியும். அரசனுக்கு வேண்டப்பட்டவர்கள் உயர்ந்த பதவிகளில் இருந்ததை காளிதாசன் கிண்டலாகச் சுட்டிக் காட்டுகிறார்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ருஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செகாவ் ஒரு கதை எழுதி இருக்கிறார். தமிழில், ‘பச்சோந்தி’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கதையில் ஒரு போலீஸ்காரன் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருப்பான். அப்போது ஓர் இடத்தில் கூட்டமாக மக்கள் கூடி இருப்பார்கள். என்னவென்று போய்ப்பார்த்தால், ஒரு ஆறு வயதுச் சிறுவனும் ஒரு சின்ன நாய்க்குட்டியும் இருப்பது தெரிகிறது.

     போலீஸ்காரர் என்ன ஏது என்று விசாரிப்பார்.

     ஒருவன் சொல்வான். ‘இந்த நாய் அந்தச் சிறுவனைக் கடித்து விட்டது’

     ’ஐயய்யோ…பாவம் இந்தக் குழந்தையை  நாய் கடித்துவிட்டதா. யார் பொறுப்பில்லாமல் இப்படி நாயைத் தெருவில் விட்டது’ என்று கண்டிப்புடன் கேட்பார் போலீஸ்காரர்.

     ’அது பார்ப்பதற்கு இந்த ஊர்ப்பிரமுகர் வீட்டு நாய் போல் இருக்கிறது’ என்று கூட்டத்தில் இருந்த ஒரு மனிதன் சந்தேகத்தைக் கிளப்புவான்.

     உடனே திடுக்கிட்ட போலீஸ் ‘ஓ அப்படியா, நான் கூட அப்படித்தான் நினைத்தேன். நாயைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது’’ என்று சொல்லிவிட்டுப் பையனைப் பார்த்து, ’ஏன் நாயைத் துன்புறுத்தினாய். அதனால்தான் கடித்திருக்கிறது’ என்று பையன் மேல் பாய்வார்.

     ’இந்த நாயைப் பார்த்தால் அந்தப் பிரமுகர் வீட்டு நாய் போல் தெரியவில்லை. இது தெருநாய்தான்’ என்பார் வேறு ஒரு மனிதர்.

     ’நான் கூட அப்படித்தான் நினைத்தேன்’. என்று சுதாரிக்கும் போலீஸ், ‘இது யாரோட நாய்..யார் இப்படி தெருவில் விட்டது’ என்று கர்ஜிப்பார்.

     அப்போது ஒருவன் சொல்வான். ‘ஐயா, இது பிரமுகர் வீட்டு நாய்தான். நேற்று இந்த நாயை அந்தப் பிரமுகர் வீட்டில் பார்த்தேன்’   உடனே திடுக்கிட்ட போலீஸ் அந்தப் பையனைப் பார்த்துத் திட்டுவார். ‘ஏண்டா உனக்கு அறிவில்லே. பாவம் அந்த நாயோட வாய்லே நீ விரல் வச்சிருப்பே, அதான் கடிச்சுடுச்சு. பாவம் அந்த நாய்’ என்று நாய்க்காக உருகுவார்.

     அதற்குள் வேறு ஒருவன், ‘நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாய் வேறு. இந்த நாய் வேறு’ என்பார்.

     மீண்டும் திடுக்கிட்ட போலீஸ்……….

     என்ற ரீதியில் கதை நகரும். ஒரு நூற்றாண்டுக்குமுன் ஜார் கால ருஷ்யாவில் நிகழும் இந்தக் கதையும் போலீஸ் – திருடன் கருத்தியல் கதைதான். கி.பி. 4ஆம் நூற்றாண்டு காளிதாசன் நாடகக்காட்சியும்  போலீஸ் – திருடன் கருத்தியல்தான்.

இந்தியாவாக இருந்தாலும் சரி, சென்ற நூற்றாண்டு ருஷ்யாவாக இருந்தாலும் சரி. போலீஸ் – திருடன் கருத்தியல் – கால தேச வர்த்தமானமின்றி எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்று தெரிகிறது. பொதுவாகப் பார்க்கும் போது, போலீஸ் சேவை செய்வது அரசுக்கு மட்டுமல்ல, அரசை ஆள்பவர்களுக்கும், நிர்ப்பந்தத்தின் பொருட்டு, ஆள்பவர்களின் அதிகார வளையத்தில் வளைய வரும் ஆசாமிகளுக்கும் சேர்த்துத்தான் என்ற கசப்பான  உண்மையை இந்தக் கதைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

யோசித்துப் பார்க்கும் போது இது என்றில்லை, பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் இப்படித்தான் எதிர் – நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. இதை ஆங்கிலத்தில் ஐரனி என்பார்கள். வாழ்க்கையையும், இலக்கியத்தையும் சுவையுள்ளதாக்குவது இந்த ஐரனிதான்.

<><><>     <><>

Friday, February 6, 2015

JAMES JOYCE

* *

நவீன 

எழுத்தின் 

வரைபடத்தை 

மாற்றியவன்
 * *

எம்.ஜி.சுரேஷ்

ஜிம் தனது முதல் நாவலை எழுதியபோது அவனுக்கு வயது முப்பத்தி நான்கு. அதற்கு முன்னால் அவன் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதி இருந்தான். அடுத்து என்ன செய்வது என்கிற கேள்வி அவன் முன்னால் கால் பரப்பி நின்றது. பிழைப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே. பாடகனாகலாமா? ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடலாமா? சினிமா விநியோகத் தொழிலில் இறங்கலாமா அல்லது ஆங்கில நாடகங்கள் தயாரிக்கலாமா… எந்தத் தொழிலும் அவனுக்குச் சரிப்பட்டு வரவில்லை. நடு நடுவில் அவன் எழுதவும் செய்தான். அவன் எழுத்துக்களும் பிரசுரமாகாமல் இழுத்தன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அதிரடியாக ஒரு பெண் அவன் வாழ்க்கையில் குறுக்கிட்டாள். அவள் பெயர் நோரா. ஓர் உணவு விடுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த அவளுக்கு ஜிம்மை மிகவும் பிடித்துவிட்டது. ஜிம் தனது லட்சியக் காதலியை அவளிடம் கண்டான். போராட்டங்கள் நிறைந்த அவன் வாழ்க்கையில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்ட அவள், வாழ்விலும் தாழ்விலும் அவனுடனேயே இருந்தாள். அவனுடைய உலகப் புகழ் பெற்ற நாவலின் முக்கியக் கதாபாத்திரமாக அவள் இயங்கினாள்.

ஜிம் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘டப்ளினர்ஸ்’ பதிப்பாளர்களால் முதலில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தொடர்ந்து தனது முதல் நாவலான, ‘ஓர் இளம் கலைஞனைப் பற்றிய சொல்லோவியத்’ தை எழுத ஆரம்பித்திருந்தான். அந்த நாவலைத் தொடராக வெளியிட ஒரு லண்டன் பத்திரிகை ஒப்புக்கொண்டது. பின்பு அது புத்தகமாகவும் வெளிவந்தது. அது தந்த உற்சாகத்தில் தனது அடுத்த நாவலை எழுத ஆரம்பித்தான் ஜிம். அதுதான் உலிஸிஸ். அது வரை சாதாரண் ஜிம் என்று குறுகிய வட்டாரத்தில் அறியப்பட்டிருந்த அவன் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற புகழ் பெற்ற மனிதன் ஆனது அப்போதிலிருந்துதான்.

ஆரம்ப கால எழுத்துகள் ஒரு மாதிரி. டப்ளினர்ஸ் வேறு மாதிரி. உலிஸிஸ் முற்றிலும் வேறு மாதிரி. உலிஸிஸ் மூலம் ஜேம்ஸ் ஜாய்ஸ் மட்டுமல்ல, ஆங்கில இலக்கியமும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியது. நவீனஇலக்கியப் பரப்பின் வரைபடம் மாற்றி வரையப்பட்டது.

பிரசுரமான நாளிலிருந்தே உலிஸிஸ் – கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக – சர்ச்சைக்குரிய நாவலாகவே இருந்து வருகிறது. சொல் விளையாட்டு, பகடி, ஒன்றைக் கூறி வேறொன்றை உணர்த்துதல் போன்ற தன்மைகளுடன் இயங்கும் அந்த நாவல் ஒரு முக்கியமான பங்களிப்பை இலக்கிய உலகுக்கு வழங்கி இருக்கிறது. அது நனவோடை உத்தி. இவருக்குப் பிறகு பலர் அந்த உத்தியைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தனர். இதனால் எழுத்துக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது. மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் நனவோடை உத்தியில் பெரிதும் கிளர்ச்சி அடைந்தார்கள். புதுமைப்பித்தன் நனவோடை உத்தியில் எழுதி இருக்கிறார். தொடர்ந்து மௌனி, லா.ச.ரா போன்றோரும் எழுதினார்கள். பல சிற்றிதழ்களில் பலர் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இவையாவும் நவீனஇலக்கிய வகைப்பாட்டுக்குள் வருகின்றன.

நவீனநாவல் உலகில் ஈடு இணையற்ற நாவல் என்று கொண்டாடப்படும் ‘உலிஸிஸ்’ பின்-நவீன இலக்கியப் பரப்பிலும் முதல் இடம் வகிக்கிறது. இதை ‘கதை மீறும் கதை’ என்று பின்-நவீனத்துவம் வகைப்படுத்துகிறது. புகழ் பெற்ற பின் நவீனவாதியான லக்கான் ஜேம்ஸ் ஜாய்ஸின் வாசகர். ஜாய்ஸின் ‘ஃபினிகன்ஸ் வேக் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதப்பட்ட நாவல். ‘நேரற்ற கனவு விவரணையில்’ எழுதப்பட்ட இந்த நாவல் விசித்திர பாணியிலான மொழியில், நேரற்ற விவரணையில், கனவின் தர்க்கம் மீறிய நிகழ்வுகள் போல் உருவாக்கப் பட்டுள்ளது. ‘இதில் கற்பனையும், யதார்த்தமும், குறியீடும் இணைகின்றன’ என்பது லக்கானின் கருத்து. ஃபினிகன்ஸ் வேக் நாவலை,மொழியை மீறும் மொழியில் எழுதப்பட்ட, கதையை மீறும் கதை என்று சொல்லலாம். (metafiction written in a meta language)

மணிக்கொடிக் கால எழுத்தாளர்களுக்குப் பிறகு, தமிழில் ஜாய்ஸை கையில் எடுத்துக் கொண்டவர்களாக பின்-நவீன எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம்.

தொண்ணூறுகளில் சில்வியா என்ற புனைபெயரில் ஓர் எழுத்தாளர் சிறுகதைகள் எழுதினார். அவர்தான் ரமேஷ்-ப்ரேம், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்களுக்கு ஆதர்சம் என்று தோன்றுகிறது. சில்வியாவின் கதைகளைப் படிப்பவர்களுக்கு பின்னவர்களின் எழுத்துகளில் அவரது பாதிப்பு இருப்பது தெரியும். பாலியல் வக்கிரம் தவிர்த்த எழுத்து சில்வியாவினுடையது. பாலியல் வக்கிரத்தைப் பற்றி எழுதலாம். அதில் திளைத்துத் துய்த்து அல்ல; அதிலிருந்து விலகி நின்று எழுத வேண்டும். அந்தத் திறமை சில்வியாவுக்கு உண்டு. அவரது ‘பிரமனைத் தேடி’ என்ற தொகுப்பில் உள்ள சிறுகதைகள் நனவோடை உத்தியில் எழுதப்பட்டுள்ளன. கதாபாத்திரத்தின் சிந்தனையும், கதைசொல்லியின் சிந்தனையும் ஒன்றோடொன்று கலந்து விடுவதை நனவோடை உத்தி எனலாம். புனைவும் எழுதுபவனும் ஒன்றாகிவிடும் இந்த அனுபவம் இலக்கியத்தில் ஒரு புதிய திறப்பு.  இதை சில்வியா தனது கதைகளில் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.

பின்-நவீனத்துவத்துக்கு ஜாய்ஸ் நனவோடை உத்தியை வழங்கி இருக்கிறார். பதிலுக்கு பின்-நவீனத்துவம் ஜாய்ஸுக்கு ‘கதை மீறும் கதை’ சொல்லி (metafiction writer) என்ற அடையாளத்தை வழங்கி இருக்கிறது.


<><><> 

Friday, January 30, 2015

chetan bhagat

தமிழ்

இனி

மெல்ல

மாறும்

எம்.ஜி.சுரேஷ்

* * *     

மீபத்தில் எழுத்தாளர் சேத்தன் பகத் ஓர் ஆங்கில நாளிதழில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

     ’மொழியைக் காப்போம், ரோமன் இந்தியைக் கைகொள்வோம்’ என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் சில விஷயங்கள் தமிழ்நாட்டுக்கும் பொருந்தி வருகிறமாதிரி தோன்றுகிறது.

     ’நமது சமூகத்தில் தொடர்ந்து நடந்து வரும் விவாதம் நமக்குத் தேவை இந்தியா அல்லது ஆங்கிலமா என்பதே’ என்று ஆரம்பிக்கும் அவர் மேலும் தொடர்கிறார்.

     ’நாம் நமது பிராந்திய மொழிகளை ஆங்கிலத்துக்கு இழக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் தத்தம் மொழிகளுக்கு எதிரான போட்டியாக இந்தியைக் கருதுகின்றன. மத்திய அரசு இந்தி வளர்ச்சிக்குப் பாடுபடுகிறது. மாநில அரசுகள் தத்தம் மொழிகளைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்கின்றன. ஆனால், எந்தவிதமான் ஆதரவும் இன்றி ஆங்கிலம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்கிறார் பகத். அவர் சொல்லும் சூழ்நிலை தமிழ் நாட்டிலும் இருக்கிறதல்லவா?’

     தமிழ் நாட்டில் தமிழ்வழிக்கல்விக்கு எதிராக தமிழ் மாணவர்களின் பெற்றோரே எதிர்ப்புத் தெரிவித்ததை நாம் அறிவோம். மாணவர்களும் தமிழை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். இதே நிலை வடக்கிலும் நிலவும் அவலத்தை பகத் சுட்டிக் காட்டுகிறார். அதற்குக் காரணங்களாக பகத் கீழ்க்காணும் விஷயங்களைச் சொல்கிறார்.

1.   சமூகத்தில் ஆங்கிலம் மரியாதைக்குரிய மொழியாகப் பார்க்கப்படுகிறது.
2.   புதிய உலகமான தகவ்ல் துறை ஆங்கிலம் சார்ந்தது.
3.   கணினி, மொபைல் போன் போன்ற எல்லாமே ஆங்கில மையம் கொண்டவை.
4.   என்னதான் வட்டார மொழிகளில் கணினி விசைப்பலகைகள் வந்து விட்டாலும், ஆங்கிலத்தை விட்டுத் தனித்து இயங்குவது கடினமே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று கேட்கும் பகத் ஒரு ஆலோசனையையும் வழங்குகிறார். அதன்படி இந்தி லிபியை ஆங்கில லிபியாக மாற்றிவிட வேண்டும் என்கிறார். அதிர்ச்சி தரும் இந்த ஆலோசனைக்கு ஆதாரங்களாக பின் வரும் தகவல்களை அடுக்குகிறார்.

ஆங்கிலம் ஏககாலத்தில் நம்நாட்டின் எல்லா இடங்களிலும் இருக்கிறது. கணினியின் விசைப்பலகைகளில், அலைபேசியின் தொடு திரைகளில். அவரவர் வட்டார மொழிகளை ஆங்கில லிபியில் எழுதும் பழக்கம் ஏற்கனவே கோடிக்கணக்கான இந்திய மக்களிடம் இருக்கிறது. வாட்ஸப் சாதனத்தில் உரையாடல் இந்தியில் இருந்தாலும், தட்டும் லிபி ஆங்கில லிபியாக இருக்கிறது. எனவே, இதை ஒரு புது விஷயமாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. இன்றைக்கு இந்தித் திரைப்பட விளம்பரங்கள், டீவி விளம்பரங்கள் எல்லாமே பெரும்பாலும் ஆங்கில லிபியால் எழுதப்படும் இந்தி மொழியில்தான் இருக்கின்றன.

ஆனால் தூய இந்திவாதிகள் இதைக் கவனிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் இந்தி சுத்தமாக தூய இந்தியில்தான் எழுதப்படவேண்டும் என்கிறார்கள். மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்கள் என்கிறார் பகத். ஏற்கனவே, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகள் தங்கள் மொழிகளை ஆங்கில லிபியில் எழுதுவதை உதாரணம் காட்டுகிறார். ஆதியில் இந்தியாவில் உருதுக் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை உருது லிபியில் எழுதவில்லை. இந்தி லிபியான தேவநாகரியில்தான் எழுதினார்கள் என்கிறார். ஒரு மொழியை இன்னொரு லிபியில் எழுதுவதில் தவறே இல்லை என்று வாதிடுகிறார் பகத்.

இன்றைய உலகமயமாக்க சூழலில், இந்தி ஒரு உலகளாவிய அளவில் வெல்வதற்கு இது முக்கியம் என்கிறார் அவர்.

அவர் சொன்ன சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கணினியில் முகநூல், ட்விட்டர்களில் ஆங்கில லிபியில் தமிழ் எழுதுகிறோம். மின் – அஞ்சலில் ஆங்கில லிபித் தமிழில் உரையாடுகிறோம். பேசும் தமிழில் தொண்ணூறு சதவீதம் ஆங்கிலச் சொற்களைக் கலந்தே பேசுகிறோம். ‘பஸ் இன்னிக்கு லேட்’ என்ற வாக்கியத்தில் இன்னிக்கு என்ற ஒரு வார்த்தை மட்டுமே தமிழ். மற்ற இரு சொற்கள் ஆங்கிலமாக இருக்கிறது. டீவி நிகழ்ச்சிகள் கூட இந்தத் தமிங்லிஷ் மொழியில்தான் நடத்தப்படுகின்றன. நமது மரபணுவிலேயே ஆங்கிலம் காலூன்றிவிட்டதோ என்று சந்தேகம் வருகிறது.

இதைத் தமிழுக்கும் அமல்படுத்தினால் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகிவிடாது. நாம் தற்போது உபயோகித்து வரும் தமிழ் எழுத்துகள் எப்போதுமே இப்படி இருந்ததில்லை. தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்த எழுத்து என்று காலங்கள் தோறும் மாறித்தான் வந்திருக்கிறது. இப்போது அதுவல்ல பிரச்சனை. இப்படிச் செய்வதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும்.

தமிழ் படிப்பதில் ஆர்வம் இல்லாத கான்வெண்ட் பிள்ளைகளுக்கும், ஆங்கிலவழிக் கல்வி பயிலும் தமிழ்க் குழந்தைகளுக்கும் தமிழ் மேல் ஆர்வம் வருமா?’ அதுதான் முக்கியம்.  அதை அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. ஆங்கில லிபியில் எழுதப்பட்டத் தமிழ்ப்புத்தகம் தப்பித் தவறி, ஆங்கிலப் புத்தகங்களுக்குள் கலந்து விட்டால் கூட அதைத் தனியே பிரித்து எடுத்து வைத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

தமிழ் பேச மட்டுமே தெரிந்த, எழுதப்படிக்கத் தெரியாத தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, கயானா, பிஜி, ட்ரினிடாட் போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே, ஒரு வேளை ஆங்கில லிபியில் தமிழை எழுதினால் அவர்களால் தமிழைப் படிக்க(?) முடியும். ஒருவேளை, சேத்தன் பகத் சொல்லும் ஆலோசனை இவர்களுக்குப் பயன்படக்கூடும்.

உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனமொழி. அவர்கள் மொழியான மாண்டரின் ஆங்கில லிபிக்கு மாறிவிட்டது. அதை பின்யின் என்கிறார்கள். இருந்தாலும், சீனலிபியிலும் மாண்டரின் மொழியை எழுதுகிறார்கள். ஒருவேளை, இந்தியை ரோமன் லிபிக்கு மாற்றினாலும், பழைய லிபியில் இந்தி எழுதுபவர்களும் இருக்கவே செய்வார்கள். அதை மாற்ற முடியாது. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற திடீர் மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும். அதற்கு ஆதரவும் கைவிரிப்பும் ஏக காலத்தில் இருக்கவே செய்யும்..

ஒரு காலத்தில் சம்ஸ்கிருதக் கலப்பு என்ற அபாயம் வந்தது. அதையும் மீறி தமிழ் ஜீவிக்கிறது. இப்போது ஆங்கிலக் கலப்பு அபாயம் வந்து அச்சுறுத்துகிறது. பாரதியார் வேறு ஏற்கனவே தமிழ் இனி மெள்ளச் சாகும் என்று பயமுறுத்திவிட்டு சென்றிருக்கிறார். இருந்தாலும் அஞ்சவேண்டியதில்லை. இது போன்ற ஆபத்துகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.  என்ன பிரச்சனை வந்தாலும், தமிழ் சாகாது, ஆனால், மெல்ல மாறும் என்று தோன்றுகிறது.

Friday, January 23, 2015

சனிக்கிழமைதோறும்

திப்பு சுல்தானின்

கொள்ளுப்பேத்தி




எம்.ஜி.சுரேஷ்
  •  

ஹாலிவுட் திரைப்படங்களில் அடிக்கடி காட்டப்படும் காட்சி போல் அது இருந்தது. நள்ளிரவு நேரம். உயரமான மதில் சுவரின் அருகே அந்த இளம்பெண் தரையில் மண்டியிட்டு அமர்கிறாள். அவள் முதுகின் பின்னே நிற்கும் ஒரு நாஜி சீருடை அணிந்த அதிகாரி, அவளது பின்னங்கழுத்தில் தனது பிஸ்டலை வைத்துச் சுடுகிறார். பின்னந்தலையில் இருந்து ரத்தம் குபுகுபுக்க, அந்தப் பெண் கொஞ்சமும் பயமின்றி, ‘சுதந்திரம்’ என்று ஒரு முறை குரல் கொடுத்துவிட்டுப் பின்பு ஒரு பொட்டலம் போல் மடிந்து விழுந்து சாகிறாள்.

1944ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சி வரலாற்றின் புறக்கணிக்கப்பட்ட பக்கங்களுக்குள் போய்ப் புதைந்து கொண்டது.

திப்பு சுல்தானின் பேரன் இனாயத் கான் ஒரு சூஃபி அறிஞர். தேர்ந்த இசைக் கலைஞரும் கூட. அவர் தனது இந்துஸ்தானி இசையையும், சூஃபிக் கோட்பாட்டையும் மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு இல்லை என்ற போதிலும், ஓரா பேக்கர் என்ற இளம்பெண்ணின் காதல் கிடைத்தது. பிறகு அமெரிக்காவிலிருந்து பிழைப்பைத் தேடி ஐரோப்பாவுக்குப் போன அவருக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது அவரது அமெரிக்கக் காதலி ஓராவும் வந்து சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுகுப் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு நூர் என்று பெயர் வைத்தனர். நூர் பிறந்த நேரம் ரஷ்யா புரட்சிப் புயலில் சிக்கி இருந்தது. அதன் விளைவாக இனாயத் கான் தன் மனைவி ஓராவையும், மகள் நூரையும் அழைத்துக் கொண்டு பிரான்ஸ் போய்ச்சேர்ந்தார். அங்கே நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. மேலும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர் கான் தம்பதிகள்.

தன் மகளுக்கு இலக்கியம், இசை, சூஃபித்தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார் இனாயத் கான். நூர் இளம் பெண்ணாக வளர்ந்த போது ஹிட்லர் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்திருந்தான். உலகமே அவனைக் கண்டு நடுங்கியது. அவனால் உலகப் போர் மூண்டிருந்தது. அந்தத் தருணத்தில் எந்தப்பெண்ணும் செய்யத்தயங்கும் காரியத்தைச் செய்யத் துணிந்தாள் நூர். ஹிட்லரின் எழுச்சியால் உலகம் நடுங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நாஜிகளுக்கு எதிராகத் தான் ஏதாவது பங்களிப்பைச் செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? அந்த நேரத்தில் நூர் மோர்ஸ் தந்தியடிக்கும் கலையைக் கற்றிருந்தாள். ஓர் எழுத்தாளராக அறிமுகம் அடைந்திருந்தாள். ஜெர்மனியில் யூதர்கள் அழிக்கப்படுவதைக் கண்டித்து ‘உடைந்த கண்ணாடி’ என்ற தலைப்பில் ஓர் உருவகக் கதை எழுதி இருந்தாள். அவள் எழுதியதைப் பதிப்பிக்க பதிப்பாளர்களும் தயாராக இருந்தனர். ஆனால், அவள் மனம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது.

அவளுக்குத் தெரிந்த மோர்ஸ் தந்திக் கலை விரைவிலேயே அவளை உளவுத்துறையில் கொண்டு போய்ச்சேர்த்தது. நேச நாடுகளுக்காக பிரான்சிலிருந்து இயங்கும் உளவாளியாக மாறினாள் நூர். நாஜிகளின் உளவு நிறுவனமான கெஸ்டபோவின் கண்களில் விரலை விட்டு ஆட்டினாள். அவரது கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் பிரிட்டிஷ்காரர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். தலைவலியாக இருந்தார். இவளோ நாஜிகளுக்குத் திருகுவலியாக இருந்தாள். வித விதமான தோற்றங்கள், புதுப் புதுப் பெயர்கள் என்று தன்னை மாற்றிக்கொண்டு பிரான்ஸ், லண்டன் என்று திரிந்தாள். அவளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் பிராங்குகள் தருவதாக நாஜிகள் அறிவித்தனர். கடைசியில் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளது சினேகிதியே இவளைக் காட்டிக் கொடுத்தாள்.

கெஸ்டபோ அவளைக் கைது செய்து ‘ஆபத்தான கைதி’ என்று முத்திரை குத்தி வதை முகாமுக்கு அனுப்பியது. கொடிய சித்திரவதைக்குப்பின் டச்சாவ் என்ற இடத்தில், ஹிட்லரின் ஒப்புதலோடு வடிவமைக்கப்பட்ட வதை முகாமில் நூர் சுட்டுக் கொல்லப்பட்டாள். உலகப் போர் முடிந்த பின்னால், ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு நூருக்கு பிரான்ஸ் நினைவுச்சின்னம் அமைத்தது. ஆண்டுதோறும் ராணுவ மரியாதை செய்கிறது. இப்படி ஒரு இந்தியப்பெண் இருந்தாள், உலகப் போரின் போது நாஜிகளுக்கு எதிராகப் போராடி உயிர் துறந்தாள் என்ற செய்தி நம்மிடையே பெரிதாக கவனப்படுத்தப்படவில்லை. சானா கான், முமைத் கான் என்று கிறங்கிக் கொண்டிருக்கும் நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு நூர் இனாயத் கானின் வரலாறு என்றைக்கு எட்டும் என்று தெரியவில்லை.

<<>> 

            (வெளிவர இருக்கும் ‘நிகழ்த்தப்பட்ட மரணங்கள்’ தொகுப்பிலிருந்து)