Friday, December 26, 2014

SHORT STORY
*
உ ரு மா ற் ற ம்
*
*
ம்.ஜி.சுரேஷ்

நான் அந்த மனநல மருத்துவரின் வரவேற்பறையில் அவரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தேன். என்னைப் போலவே வேறு சிலரும் காத்திருந்தார்கள். நல்ல வேளையாக எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கே வந்திருக்கவில்லை என்பது மனசுக்கு ஆறுதலாக இருந்தது. வரவேற்பறை தூய்மையாக இருந்தது. டீபாயில் வார மாத இதழ்கள் சிதறி இருந்தன. அவற்றை யாரும் பொருட்படுத்தவில்லை. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணின் உடையும், அவள் சிரித்த போது வெளித்தெரிந்த பற்களும் தூய்மையாக இருந்தன. 

மருத்துவரின் அறையில் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வெறுமனே உட்கார்ந்திருப்பதில் சலிப்படைந்து டீபாயில் இருந்த ஒரு வார இதழை எடுத்துப் புரட்டினேன். படித்த உடனேயே மறந்து விடக்கூடிய விஷயங்கள் வண்ணப்படங்களுடன் அச்சிடப்பட்டிருந்தன. அதைப் போட்டு விட்டு இன்னொரு வார இதழை எடுத்தால், அது நாட்டின் ஊழல் பற்றியும், அரசியல்வாதிகளின் அலட்சியம் பற்றியும் ஆத்மவிசாரத்துடன் கவலைப்பட்டிருந்தது. தற்செயலாக ஒரு நாளிதழைக் கையில் எடுத்த எனக்குத் திகீர் என்றது. அதில் ஒரு வட இந்தியப் பல்கலைக் கழகப் பேராசிரியரின் படம் பிரசுரிக்கப் பட்டிருந்தது. சட் டென்று அந்த நாளிதழை மூடி வைத்தேன். வேறு யாராவது அதைக் கவனித்திருப்பார்களா என்று சுற்றிலும் பார்த்தேன். பின்னர்அந்த நாளிதழின்  மேல் பிற இதழ்களைக் குவித்தேன். வரவேற்பறை இளம் பெண் எனது செய்கையைக் கவனித்தாள். அது எனக்கு வெட்கம் தருவதாக இருந்தது.

அப்போது மருத்துவரின் அறையில் இருந்து  ஒரு இளைஞனும், அவனுக்குத் துணையாக வந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் வெளியே வந்தார்கள். அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. என்ன பிரச்சனையோ? இளைஞன் அழகாகத் தோற்றமளித்தான். அவனுக்கு மனக்கோளாறு இருப்பதாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

வரவேற்பறைப்பெண் என்னைப் பார்த்து, ‘நெக்ஸ்ட்’ என்றாள். வரவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசின மாதிரி தெரிந்தாள். உடனே வரவேற்பறையில் இருந்த அனைவரும் என்னையே பார்த்தார்கள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. சட்டென்று  நான் எழுந்து மருத்துவரின் அறையை நோக்கி நடந்தேன். என் முதுகைப் பார்வைகள் துளைப்பதை உணர்ந்தேன்.  அதைத் தவிர்க்க அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

நான் எதிர்பார்த்ததை விட  அறை சின்னதாக இருந்தது ஏமாற்றமளித்தது. ஒரு பெரிய அறை; அதில் ஒரு பெரிய மகாகனி மேஜையின் பின்னால் மருத்துவர் அமர்ந்திருப்பார்; அவருக்குப் பக்கவாட்டில் ஒரு சாய்வு நாற்காலி; அதன் பின்னால் ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கும்; மருத்துவரின் முதுகுக்குப் பின்னால் சுவரில் ஃப்ராய்ட், குஸ்தாவ் யங் போன்றோரின் புகைப்படங்கள் தொங்கியபடி புன்னகைக்கும் என்றெல்லாம் நினைத்தபடி உள்ளே நுழைந்த என்னை ஒரு குட்டி அறை வரவேற்றது. அதில் ஒரு குட்டி மேஜை போடப்பட்டிருந்தது. அதன் பின்னால் மருத்துவர் பிளாஸ்டிக் நார் பின்னப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.  எதிரில் இருந்த மரநாற்காலி எனக்காகக் காத்திருந்தது. மருத்துவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நானும் பதிலுக்குப் புன்னகை செய்தேன். அவர் சைகைக்குப் பணிந்து மரநாற்காலியில் உட்கார்ந்தேன்.

‘இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் மருத்துவர். ‘எதில் பயப்பட ஒன்றும் இல்லை’ என்று நினத்தபடியே நானும் பதிலுக்கு அசட்டுத்தனமாகச் சிரித்தேன். 

‘பலர் நினைப்பது போல் மனப்பிறழ்வு என்பது ஒரு நோயே அல்ல; நம் உடம்பில் உள்ள திரவங்களில் சமனிலை குலையும் போது சில அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை வரும் போது அதை டயபடீஸ் என்கிறோம். அதே போல் தைராய்ட், ஆண்ட்ரோஜன், எஸ்ட்ரோஜன் திரவங்கள் சரியான முறையில் சுரக்காவிட்டால் அதை அந்தந்த வியாதி  என்று சொல்லி விடுகிறோம். மனநலமும் சுரப்பிகள் சம்பந்தப் பட்ட்தே. நம் உடலில் செரடோனின் என்ற திரவத்தின் சமனிலை வித்தியாசப்ப்படும் போது நமது மன்நிலை பாதிக்கப்படுகிறது. அதை மனநோய் என்கிறோம். மாத்திரைகள் மூலம் அதை சரி செய்து விடலாம்’ என்றார் மருத்துவர்.

நான் விரக்தியாகச் சிரித்தேன். இது செரடோனினையே மிஞ்சும் பிரச்சனை என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.

‘சரி உங்கள் பிரச்சனை என்ன? சொல்லுங்கள் சரி செய்துவிடலாம்’ என்றார் மருத்துவர் தீவிர நம்பிக்கையோடு.

எனக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ‘சரி செய்யக்கூடிய பிரச்சனையா என்னுடையது?’ என்று நினைத்துக் கொண்டேன்.

 ’என்ன யோசனை? சொல்லுங்கள். சொன்னால்தானே நான் உங்களுக்கு உதவ முடியும்?’ என்று ஊக்குவித்தார் மருத்துவர்.

சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.ஆனால்,  நடப்பது என்னவோ உண்மை. போன வாரத்திலிருந்துதான் இப்படி நடக்க ஆரம்பித்திருக்கிறது. துல்லியமாகச் சொல்வது என்றால், போன வாரம் எதிர்த்த வீட்டு லக்‌ஷ்மணன் வந்து பேசிய போதுதான் அது நடந்தது.

லக்‌ஷ்மணன் வானிலை மாற்றம் பற்றிப் பேசியதாக ஞாபகம். ‘சரியான வெய்யில்’, ‘முன் கத்திரி’, ‘பின் கத்திரி’ போன்ற சொற்களைப் பிரயோகித்தார். நானும் பதிலுக்கு ஆமோதித்தேன். அதே அலைவரிசையில் பேசினேன்.  அந்த நிமிடத்தில் அவர் என்ன சொன்னாலும் நான் ஆமோதிக்கத் தயாராக இருந்தேன். அந்த மனநிலை எனக்கு வியப்பளிப்பதாக இருந்தது. நான் எப்போதுமே அவர் என்ன சொன்னாலும் எதிர்ப்பு தெரிவிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பவன். அப்படி இருக்கையில் இப்போது மட்டும் ஏன் அவருக்கு நான் தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த போதே என்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வதை நான் உணரலானேன்.

 நான் ஒல்லி ஆசாமி. சதா முகச்சவரம் செய்து முகத்தைப் பளபள என்று வைத்துக் கொண்டிருப்பேன். லக்‌ஷ்மணனோ மரண குண்டு. ஆட்டைப் போல ஒரு குறுகிய தாடி வேறு வைத்திருப்பார். அவர் அருகில் இரண்டு அடி இடைவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று  என்னுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக உப்ப ஆரம்பித்தது. என் மோவாயில் ஆட்டுத்தாடி முளைக்க ஆரம்பித்தது. லக்‌ஷ்மணன் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். சட்டென்று பின் வாங்கினார். சொல்லாமல் கொள்ளாமல் நடையைக் கட்டினார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. வராந்தாவில் இருந்த நிலைக்கண்ணாடியைப் பார்த்தேன். எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு மனிதனாக எனக்கே நான் தெரிந்தேன். லக்‌ஷ்மணனைப் போன்ற குண்டு உடலும், ஆட்டுத்தாடியுமாக நான் இருந்தேன். எனக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தேன்.  கொஞ்ச நேரத்துக்குப் பின் என் உடல் பழையபடி மாற ஆரம்பித்தது. கால் மணி நேரத்தில் நான் பழைய ஆசாமியாக மாறிவிட்டேன்.  அனிச்சையாக எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன். கலவரத்துடன் இரண்டு கண்கள் என்னை வெறித்தன. லக்‌ஷ்மணனின் மனைவி.

வாசற்கதவைச் சாத்தினேன். நேராக நிலைக்கண்ணாடி முன் போய் நின்றேன். என்னை ஒரு தரம் மேலிருந்து கீழே பார்த்துப் பரிசீலனை செய்தேன். என் உடல் எப்போதும் இருப்பது போல் இயல்பாக இருந்தது.

அன்றொரு நாள். நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். சரியான கூட்டம். உட்கார இடமின்றி நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. சிலர் இறங்கினார்கள். சிலர் புதிதாக ஏறினார்கள். ஏறியவர்களுள் ஒருவர் போலீஸ் அதிகாரி. அவர் நேராக வந்து என் அருகே நின்றார். அவரது காக்கி சீருடையின் வாசனை என் மூக்கில் வந்து மோதும் அளவுக்கு அவர் எனக்கு வெகு அண்மையில் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு உள்ளூர உதறல் எடுத்தது. அவர் என்னை ஒரு முறை உற்றுப் பார்த்த மாதிரி இருந்தது. எனக்குப் பகீர் என்றது. உடனேயே என்னுள் ஒரு வேதியல் மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். என் உடல் படிப்படியாக அவரைப் போலவே மாறிக் கொண்டிருந்தது. திடுக்கிட்ட நான் உடனடியாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, பேருந்தில் நிகழ இருந்த ஒரு குழப்பத்தைத் தவிர்த்தேன்.  

இன்னொரு நாளும் அப்படித்தான். அதிகாலை நேரம். நான் குடியிருந்த பிராந்தியத்தில் இருந்த ஒரு சிறு பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னாலும் பின்னாலும் பலர் நடந்து போய்க்கொண்டிருந்தனர். அப்போது எனக்குப் பின்னாலிருந்து ஒரு மனிதர் என்னை வேகமாகக் கடந்தார். தற்செயலாக என்னை ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். அவர் நெற்றியில் பட்டையாகத் திருநீறு அணிந்திருந்தார். அதன் குறுக்கே சிவப்பு நிறத்தில் சூலம் வரையப் பட்டிருந்தது. அந்தக் கணத்தில் அந்த விபூதியும், சூலமும் என்னுள் இனம் புரியாத கலவரத்தை ஏற்படுத்தின. அடுத்த கணமே அந்த மனிதரைப் போல் என் தோற்றம் மாற ஆரம்பித்தது. உடனே நான் நடைப்பயிற்சியை நிறுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். நான் வீடு போய்ச் சேர்வதற்கும் எனது பழைய தோற்றம் வருவதற்கும் சரியாக இருந்தது.  என் மனைவி என்னைக் குழப்பமாகப் பார்த்தாள். ‘என்ன, அதற்குள் வந்து விட்டீர்கள்? வாக்கிங் போகவில்லையா’ என்று கேட்டாள். நான் பதிலேதும் சொல்லவில்லை.

நடந்ததையெல்லாம் மருத்துவரிடம் சொன்னேன். ‘இதுதான் டாக்டர் என் பிரச்சனை’ என்றேன். அவர் சிரித்தார். ‘இது ஒரு மனோபாவம். தட்ஸ் ஆல்’ என்றார்.

‘என்ன காரணத்தினாலோ நீங்கள் இன்னொருவராக மாற விரும்புகிறீர்கள். அந்த விழைவில் உங்கள் மனம் உங்களை அந்த இன்னொரு நபராக நினைத்துப் பார்க்கிறது. இதில் பயப்பட ஒன்றும் இல்லை. இதை மல்டிபிள் பர்சனாலிடி சிண்ட்ரம் என்பார்கள். இதை சரி செய்து விடலாம்’

‘ஐயோ டாக்டர், நான் இன்னொரு நபராக என்னை மனதளவில்  நினைத்துப் பார்க்கவில்லை. அந்த நபராக உண்மையிலேயே உடல்ரீதியாகவே மாறி விடுகிறேன்’

அவர் நம்பாமல் சிரித்தார்.

‘காந்தியை கோட்ஸே சுட்டபோது நீங்கள் மட்டும் காந்தியின் பக்கத்தில் நின்றிருந்தால் நீங்கள் காந்தியைப் போல் மாறி இருந்திருப்பீர்கள். கோட்ஸே இரண்டு காந்திகளில் யார் அசல் காந்தி என்று தெரியாமல் குழம்பிப் போய் சுட முடியாமல் திரும்பிப் போய் இருப்பான். காந்தி சாகாமல் இருந்திருப்பார்’ என்று ஜோக் அடித்தார். என் நிலைமை தெரியாமல் இப்படி அவர் ஜோக் அடித்ததில் எனக்கு வயிறு எரிந்தது.

‘டாக்டர் பீ சீரியஸ். உங்களிடம் ஜோக் கேட்டு சிரிக்க வரவில்லை. மருத்துவ உதவிக்காக வந்திருக்கிறேன்’ என்றேன் கடுமையாக.

‘ஸாரி’ என்றார்.  சீரியசாக மாறினார்.

 என்னையே வெறித்துப் பார்த்தார். நான் சொல்வதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை என்று தோன்றியது. தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். தனக்குள் வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டார். பின்பு எழுந்து நின்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றார். எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. நான் அவரையே பார்த்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்தேன்.

‘சில சமயம் பிரமைகள் உண்மை போலவே தோன்றும்’ என்று ஒரு வேதாந்தி போல் சொன்னார்.

பின்பு என்னிடம் திரும்பி நின்று, ‘இப்படி நீங்கள் உருமாறும் போது கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

‘பார்த்திருக்கிறேன். என் உருவம் மாறி இருப்பதை நான் என் கண்களால் பார்த்துப் பயந்ததனால்தானே உங்களிடம் வந்திருக்கிறேன்’

மருத்துவர் என்னை நம்பவில்லை போல் தோன்றியது.

மருத்துவர் என்னை நம்பாமல் போனதில் எனக்குள் ஒரு வித மனநெருக்கடி உண்டாயிற்று. உள்ளுக்குள் ஒரு ‘திகீர்’ பரவியது. உடனே எது நடக்கக்கூடாது என்று விரும்பிக்கொண்டிருந்தேனோ அது நடக்க ஆரம்பித்து விட்டது.

நான் படிப்படியாக அந்த மருத்துவர் போலவே உருமாற ஆரம்பித்தேன். மருத்துவருக்கு முன் வழுக்கை. என் முன் மண்டையில் மயிர் உதிர ஆரம்பித்தது. அவருக்குக் குழி விழுந்த கன்னங்கள். என் கன்னங்கள் இரண்டிலும் குழி விழுந்தன. அவரது தொப்பை, வலசைக்கால்கள், குடை காதுகள் என்று அவரது சகல அடையாளங்களையும் நான் வரித்துக் கொண்டு விட்டேன்.  மருத்துவர் ஆடிப்போய் விட்டார்.

‘திஸ் ஈஸ் அன்பிலீவபிள்’ என்றார். ரோபோ போல் என்னருகில் நடந்து  வந்து ‘எக்ஸ்கியூஸ் மி’ சொல்லிவிட்டு என்னைத் தொட்டுப் பார்த்தார். தடவிப்பார்த்தார். ‘இன்க்ரடிபிள்’ என்றார்.

‘இதுதான் டாக்டர் என் பிரச்சனை’ என்று நான் சொன்னபோது என் குரல் அவர் குரலாக ஒலித்தது. இதனால் இருவருமே திடுக்கிட்டோம்.

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. எங்கள் இருவருக்குமே என்ன பேசுவது என்று தோன்றவில்லை. சூழலின் இறுக்கம் தளர்ந்ததும் நான் பழையபடி நானாக மாற ஆரம்பித்தேன். ஒரு ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படத்தில் வரும் கிராஃபிக் காட்சியைப் பார்ப்பது போல் நான் மாறுவதையே மருத்துவர் வாய் பிளந்து பார்த்தார். பின்னர் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தம்ளரை எடுத்து அதிலிருந்த தண்ணீரை மட மடவென்று குடித்தார். ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

கொஞ்ச நேரம் யோசித்தார். பின்பு என் கண்களைப் பார்த்துப் பேசினார்.

‘காஃப்கா என்ற  ஜெர்மன் எழுத்தாளர் ‘உருமாற்றம்’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி இருக்கிறார். அதில் வரும் கதாநாயகன் ஒரு வேலை இல்லாத இளைஞன். சதா தன் தந்தையால் புறக்கணிக்கப்படுபவன். தந்தையின் புறக்கணிப்பு, எதிர்காலம் குறித்த பயம், தன்னையே நிந்தித்துக் கொள்ளல் போன்ற நெருக்கடிகள் அவனை வாட்டி வதைக்கின்றன. ஒரு நாள் இரவு தூங்கப் போனவன் மறுநாள் காலை விழித்துப் பார்க்கும் போது ஒரு பிரமாண்டமான கரப்பான் பூச்சியாக மாறிவிடுகிறான். அவன் மனிதனாக இருந்த போதே அவனை அவன் குடும்பத்தினர் ஒரு கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போல் அருவருப்பாகத் தான் பார்த்தார்கள். இப்போது அவன் அசல் கரப்பான் பூச்சியாகவே மாறிவிட்ட பிறகு என்ன செய்வார்களாம்? ‘ என்ற ரீதியில் கதை நகரும்.

இந்த இன்ஸ்பிரேஷனில் ஹாலிவுட் டைரக்டர் உடி ஆலன் ‘ஜெலிக்’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்தார். ஹிட்லர் காலத்துப் பின் புலத்தில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் வரும் கதாநாயகன் ஒரு யூதன். ஹிட்லரால் சித்திரவதை செய்யப்பட்டு யூதர்கள் செத்துக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவன். அவனுக்கும் இதே பிரச்சனை வருகிறது. திடீரென்று ஒரு நாள் அவன் யாரைப் பார்த்தாலும் அவரைப் போலவே மாறிவிடுகிறான். ஹிட்லர் யூதர்களுக்குக் கொடுத்த நெருக்கடி அவனை இது போல் சுய அடையாளத்தை இழக்கச் செய்து விட்டது என்ற ரீதியில் அவர் கதை சொல்லி இருந்தார். இப்போது உங்கள் பிரச்சனை என்ன என்று தெரிகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வேண்டும்’ என்று தனது சிற்றுரையை முடித்து விட்டு என்னைப் பார்த்தார் மருத்துவர்.

நான் மௌனமாக இருந்தேன். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு கணம் தடுமாறினேன். பின்பு சொன்னேன்.

‘டாக்டர், பொதுவாக எனக்குப் பயங்கரவாதம் என்றாலே குலை நடுக்கமாக இருக்கிறது. தினமும் பத்திரிகை, டீவி, சினிமா என்று எதைப் பார்த்தாலும் பயங்கரவாத்ததைப் பற்றியே பேசுகின்றன. இது என்னை சதா பதற்றத்தில் ஆழ்த்துகிறது’

‘சரி’

‘அந்தப் பதற்றம்...அதைத் தொடர்ந்து வரும் அதீத பயம்...’

‘யெஸ், பானிக் அட்டாக்ஸ்’ 
‘இதெல்லாம்தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்று நினைக்கிறேன் டாக்டர்’

‘சரி, நீங்கள் ஒரு பயங்கரவாதியா?’

‘ஐய்யய்யோ, இல்லை டாக்டர்’

‘உங்களுக்கு வேண்டிய யாராவது பயங்கரவாதியாக இருக்கிறார்களா?’

‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’

‘பிறகு ஏன் பயங்கரவாதம் பற்றிப் பேசினாலே உங்களுக்குப் பயம் வருகிறது?’

’முன்பெல்லாம் நான் நன்றாகத்தான் இருந்தேன் டாக்டர். மும்பை குண்டு வெடிப்புக்குப் பின் என் மன நிம்மதி குலைந்து விட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தைப் பிறர் சந்தேக பாவத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் வன்முறைச்சம்பவங்கள்; அதைப் பெரிது படுத்தும் மீடியாக்கள்; முஸ்லீமகளை பயங்கரவாதிகளாகக் காட்டும் திரைப்படங்கள் போன்றவை முஸ்லீம் சமூகத்தினரை விரோத பாவத்துடன் பார்க்குமாறு தூண்டுகின்றன. இதுதான் என் பிரச்சனைக்கு மூல காரணம்’

‘சரி. இதற்கும் உங்கள் உருமாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?’

‘இருக்கிறது டாக்டர். ஒரு நாள் பயங்கரவாதி என்று கருதப்படும் ஒரு நபரின் புகைப்படத்தைப் பிரசுரித்து அவனை போலீஸ் தேடுவதாகச் செய்தித் தாளில் செய்தி வந்திருந்தது. அதே புகைப்படத்தை டீவியிலும் காட்டினார்கள். அன்று முதல் எனக்கு இந்தப் பிரச்சனை ஆரம்பித்து விட்டது’

‘ஏன்? அப்படி அந்தப் புகைப்படத்தில் என்ன பிரச்சனை?’

‘அந்தப் புகைப்படத்தில் இருந்த அந்த நபர் பார்ப்பதற்கு என்னைப் போலவே இருந்தான். என் மனைவியும் குழந்தைகளும் கூட , ‘அவன் தான் நீங்கள் என்று பிடித்துக் கொண்டு விடப்போகிறார்கள்’ என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். அவர்கள் விளையாட்டாகச் சொன்ன போதிலும் அது எனக்குள் திக்கென்றது. தொடர்ந்து திகில் வந்தது.  எப்போது வீட்டை விட்டு வெளியே போனாலும், யாராவது என்னையே உற்றுப் பார்ப்பது போல் தோன்றும். இதோ இந்த ஆள் என்னைப் பார்த்து விட்டான். என்னைப் பின் தொடர்ந்து வரப்போகிறான். என்றெல்லாம் தோன்றும். சில சமயம் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடப்பேன். இது முற்றிப் போய் ஒரு நாள் இப்படி மாற ஆரம்பித்தேன். இப்பொதெல்லாம் நான் வெளியே போவதையே விட்டு விட்டேன். ஆஃபீசுக்குக் கூட லாங் லீவ் போட்டு விட்டேன். வீட்டில் அடைந்து கிடக்கிறேன்’

’ஓகே.  இது தகவமைப்பு. பரிணாம வளர்ச்சியில் மண்புழு மனிதனாக உருமாறியதற்கே இந்தத் தகவமைப்புதான் காரணம். நீங்கள் அந்தப் பயங்கரவாதியைப் போல் இருந்ததால்,  நான் அவன் இல்லை என்று நிரூபிக்கும் பொருட்டு நீங்கள் உங்களை வேறு மாதிரி மாற்றிக் கொள்ள விரும்பி இருக்கிறீர்கள். உடனடியாக எதிரில் இருந்த நபர் போலவே மாறி இருக்கிறீர்கள்.’ என்றார் டாக்டர்.

’இருக்கலாம்’ என்றேன்.

‘அது சரி, அந்தப் பயங்கரவாதி யார்?

‘அவன் பெயர் அப்துல் சமத். வட இந்தையப் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறான். பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்த உதவியவர்களில் அவனும்  ஒருவன் என்று அரசு அறிவித்திருக்கிறது.’

ஆமாம், நான் கூட பேப்பரில் பார்த்தேன்....’

மருத்துவர் ஒரு கணம் யோசித்தார்.  பின்பு சொன்னார்.

‘எல்லாம் சரி. உங்களுக்கு வந்திருக்கும் இந்த வியாதி...வியாதி என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இந்த உருமாறும் விளைவு எப்படி ஏற்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதை அறிவியல் ரீதியாக விளக்க முடியாது. எனக்குத் தெரிந்து இதற்கு மருந்து மாத்திரைகளும் இல்லை’ என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. இதிலிருந்து நான் தப்பிக்கவே முடியாதா என்று ஏங்கினேன். காலம் முழுக்க இப்படியேதான் என் வாழ்க்கை கழிந்து விடுமோ....

‘டாக்டர், எனக்கு வேறு வழியே இல்லையா?’ என்று கெஞ்சினேன் பரிதாபமாக. என் நிலைமையை நினைக்கையில் எனக்கே பாவமாக இருந்தது.

‘ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், ஒன்று செய்யலாம். உங்களுக்கு ட்ராங்க்விலைசர்கள் தருகிறேன். அவற்றை விழுங்கி விட்டு நிம்மதியாகத் தூங்கலாம். விழித்திருந்தால்தானே பிரச்சனை’

பின்பு மருத்துவர் சில மருந்து பாட்டில்களைக் கொடுத்தார்.  ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்றார்.  ‘தேங்க்யூ டாக்டர்’ என்றேன்.
ன் சொந்த ஊர் மதுரை. மதுரையில் தேர்முட்டி என்று வழங்கப்படும் தேர் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்திலிருந்து பாண்டிய வேளாளர் தெரு ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நேராகப் போனால் மீனாக்‌ஷி டாக்கீஸ் வரும். அதற்குச் சற்று முன்னதாக காஜிமார் தெரு குறுக்கிடும். அங்குதான் என் வீடு இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கூரைப்பள்ளிக் கூடத்தில்தான் நான் படித்தேன். அப்போதேல்லாம் இது போன்ற பிரச்சனைகள் ஏதும் இருந்ததில்லை. எங்கள் தெருவில் இந்துக்களின் மாரியம்மன் திருவிழாக்களும் நடக்கும். முஸ்லிம்களின் சந்தனக்குடம் திருவிழாவும் நடக்கும். யாருக்கும் எந்தப் பிரச்சனைகளும் வந்ததில்லை. எனக்கு இந்து, கிறிஸ்தவ நண்பர்கள் உண்டு. எங்கள் நட்புக்கு மதம் ஒரு குறுக்கீடாக இருந்ததே இல்லை. எனக்கு நாயுடு நண்பர்களும் உண்டு. நாயுடு சமூகத்தினரும் முஸ்லீம்களும் ‘மாமா’ ‘மாப்பிள்ளை’ என்று உறவு கொண்டாடிக் கொள்வோம். இதெல்லாம் எப்போது மாறியது. எதனால்? இப்போதெல்லாம் எங்களுக்குள் ஒரு மெல்லிய திரை தோன்றி இருப்பது போல் தோன்றுகிறதே, ஏன்?

மதத்தின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது மிகப் பெரிய தவறு என்றே தோன்றுகிறது. பிரிட்டிஷ்காரனிடமிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை கிறிஸ்தவனிடமிருந்து இந்துக்கள் பெற்ற சுதந்திரமாக அடையாளப்படுத்தவில்லை அல்லவா? அப்படி இருக்கும் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததை மட்டும் எப்படி மத அடிப்படையிலான பிரிவினையாக ஆக்கினார்கள்? இதனால்தானே இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்த்துக் கொள்ள நேர்ந்தது? இந்த வெறுப்பை மேலும் மேலும் ஊதி வளர்த்து இரண்டு நாட்டின் அரசியல்வாதிகளும் ஆதாயம் பெற்றதுதான் மிச்சம்.  இப்படியெல்லாம் யோசித்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

என் மனைவி என்னை கவலையுடன் எதிர்கொண்டாள்.  ’டாக்டர் என்ன சொன்னார்? என்றாள்.

‘இதை ஒண்ணும் பண்ண முடியாதாம்’

‘ஐயய்யோ’

‘அதனால் பயப்பட ஒன்றும் இல்லை. கொஞ்சம் மாத்திரை கொடுத்திருக்கிறார். சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமாம். விழித்திருந்தால்தானே பிரச்சனை. தூங்கிவிட்டால் ஒரு பிரச்ச்னையும் வராதே’ என்றேன் நான்.

அவள் கொஞ்சம் நிம்மதி அடைந்தவள் போல் தோன்றினாள்.

‘அப்படின்னா மாத்திரை மருந்தை சாப்பிட்டுட்டு பேசாம துங்குங்க’ என்றாள்.

‘சாப்பிட்டுட்டு சாப்பிட்டுட்டு தூங்குனா சோத்துக்கு என்ன பண்றது? என்றேன் எரிச்சலாக.

கொஞ்ச நாட்கள் கழிந்தன. இப்போதெல்லாம் பிரச்சனை ஏதும் வரவில்லை. வேளா வேளைக்குச் சாப்பிடுவது. மாத்திரைகளை விழுங்கி விட்டுத் தூங்குவது. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது. இதுதான் என் வாழ்க்கை. ஆஃபீஸுக்கு மட்டும் மருத்துவச் சான்றிதழ் அனுப்பி என் விடுப்பை நீட்டித்தபடி இருந்தேன்.
அதற்கும் ஒரு நாள் பங்கம் வந்தது. இரண்டு மாதங்கள் மட்டும்தான் சேர்ந்தாற்போல் மருத்துவ விடுப்பு எடுக்க முடியும், அதற்கு மேல் மருத்துவ விடுப்பு எடுத்தால் மருத்துவக் குழுவிடம் இரண்டாவது கருத்து கோரி நம்மை அனுப்பி விடுவார்கள்.  என்னை சென்னை அரசு மருத்துவமனக்குப் போய் அங்குள்ள மருத்துவக் குழு முன் ஆஜாராகும்படி நான் வேலை பார்க்கும் அலுவலகம் எனக்குக் கடிதம் அனுப்பி இருந்தது.

குறிப்பிட்ட தினத்தன்று நான் மருத்துவக் குழுவின் முன் போய் நின்றேன். மூன்று மருத்துவர்கள் அந்தக் குழுவில் இருந்தார்கள். குழுவின் தலைவர் மூலவியாதி வந்தவர் போல் சிடு சிடுத்தார்.

‘என்னய்யா பிரச்சனை உனக்கு?’ என்றார்?’

என்ன சொல்வது; எப்படிச் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன்.

‘என்னய்யா முழிக்கிறே? மொதல்லே வேலை இல்லாம திரியறது. ஏதாவது வேலை கெடக்காதான்னு ஏங்குறது. அப்புறம் வேலை கெடச்சதும் வேலைக்குப் போகாம மெடிகல் லீவ் போட்டுட்டு ஊரச் சுத்துறது.. சுத்த நான்சென்ஸ்’ என்று சீறினார்.

எனக்குக் கண்கள் கலங்கி நீர் கண்களை மறைத்தது.

‘சார் ... வந்து...’

‘என்னய்யா முழுங்கறே...வாயிலே என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே?’ என்றார் தலைவர் கோபமாக. உடனே பக்கத்திலிருந்த இன்னொரு பெண்மணி ‘சார், இவரு கொழுக்கட்டை திங்கற ஆளு இல்ல’ என்று கிசுகிசுத்தாள். உடனே என் மருத்துவச் சான்றிதழில் எழுதப்பட்டிருந்த என் பெயரைப் பார்த்துவிட்டு ஓ! என்று சொல்லிவிட்டு, ‘வாட் மேன், வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்? என்றார்.

நான் ஒன்றும் பேசாமல் நின்றேன்.

‘என்ன நாளைக்கே போய் வேலைக்கு சேர்ந்துடறியா?

‘இல்ல சார் எனக்குக் கொஞ்ச நாள் லீவ் வேணும்’

‘வாட். என்ன தைரியம். என் முன்னாடி நின்னுக்கிட்டு என் கிட்டேயே மெடிகல் லீவ் அதுவும் பொய் சர்டிஃபிகட் கேப்பே..ஹவ் டேர்’ என்று கூச்சலிட்டார்.
                
மறு வினாடி மள மளவென்று என் உருவம் அவரைப் போல மாற ஆரம்பித்து விட்டது. அவர் ஆறடி உயரம் கொண்ட ஆஜானுபாகு ஆசாமி. நானோ ஒல்லி ஆசாமி. சில வினாடிகளில் நான் அவரைப் போலவே முழுதும் மாறிவிட்டேன். மருத்துவக் குழு வாயைப் பிளந்தது. குழுத்தலைவர் இரத்த அழுத்த நோயாளி. அவருக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி மூக்கில் இரத்தம் வடிந்தது. இதில் கொடுமை என்னவென்றால் எனக்கும் இரத்த அழுத்தம் எகிறி என் மூக்கிலும் இரத்தம் வடிய ஆரம்பித்தது.

வாயடைத்துப் போன மருத்துவக் குழு மறு பேச்சின்றி எனக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மருத்துவ விடுப்பை நீட்டித்து அனுமதி வழங்கியது.

இதற்குள் விஷயம் அரசல் புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பத்திரிகைக்காரர்களும், டீவிக் காரர்களும் என்னைத் தேடி வர ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பூந்தமல்லியில் இருந்த என் தங்கை வீட்டுக்குப் போய் ஒளிந்து கொண்டேன்.
 பூந்தமல்லியில் பகலெல்லாம் வீட்டில் முடங்கிக் கிடப்பேன். இரவில் மட்டும் வெளியே போய் நடமாடிவிட்டு வருவேன். அப்போது ஒரு நாள் அப்துல் சமத் கைது செய்யப்பட்ட விஷயம் பேப்பரில் வெளியானது. படுபாவி ஃபோட்டோவில் அப்படியே அச்சாக என்னைப் போலவே இருந்தான். அப்பாடா ஒருவழியாக அவனைப் பிடித்து விட்டார்கள். இனி எனக்குப் பிரச்ச்னை இல்லை என்றே தோன்றியது

மறுநாளே மன நல மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். பயங்கரவாதி கைதான தகவலைச் சொன்னேன். தானும் அந்தச் செய்தியைப் பேப்பரில் பார்த்து விட்டதாகவும், அப்போது என் ஞாபகம் வந்ததாகவும் சொன்னார். இனி எனக்கு இந்தப் பிரச்சனை வராது என்றும் அபிப்ராயம் தெரிவித்தார்.

கொஞ்ச நாட்கள் கழிந்தன.

அந்தப் பயங்கரவாதியைப் பற்றிய செய்திகள்தான் பேப்பரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவனை எப்படி, எங்கே போலீசார் சாமர்த்தியமாக வலை விரித்துப் பிடித்தார்கள் என்று விலாவாரியாக வண்ணப் புகைப்படங்களுடன் செய்திகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. அந்த மனிதனின் மனைவியை போலீசார் சித்திரவதை செய்த்தில் கர்ப்பிணியான அவளுக்கு அபார்ஷன் ஆன செய்தி என்னை என்னமோ செய்தது.

இப்பொதெல்லாம் எனக்கு உருமாற்றம் நிகழ்வதில்லை. அப்துல் சமத் போலீசில் சிக்கிக் கொண்டு விட்டதால் என் பதற்றம் விலகி நான் நார்மலாக மாறிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் என் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி பல நாட்களாகி விட்டன. எனது உருமாற்றம் உண்மையில் நடந்ததா அல்லது அது ஒரு கனவா என்று நினைக்கும் அளவுக்கு என் நிலைமை மாறி விட்டது. இப்போது என் ஜாகை பூந்தமல்லியிலிருந்து என் வீட்டுக்கே மாறி விட்டது.
ன்றைய தினத்தை ஒரு நல்ல நாள் என்றுதான் சொல்ல வேண்டும். என் தங்கை என் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுடைய இரண்டு வயதுக் குழந்தை அர்ஷியாவிடம் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவள் என்னிடம் ஓடி வந்து ஒரு நாளிதழைக் காட்டிச் சொன்னாள். ‘அண்ணா உன்னை மாதிரியே இருப்பானே ஒரு ஆள். அந்த ஆளை நிரபராதின்னு சொல்லி கோர்ட்லே விடுதலை பண்ணிட்டாங்க; இங்கே பாரேன்’ என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் உண்மைதான். என்னைப் போலவே இருந்து போலீசாரால் தேடப்பட்டுப் பின்னர் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுக் கிடந்த அந்த நபரை ஒரு வழியாக விடுவித்து விட்டார்கள். ஒரு பெரிய பாரம் நீங்கிய மாதிரி இருந்தது.

கண்கள் கலங்க கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

‘ஆமா, இப்ப நிரபராதின்னு சொல்லி விட்டுட்டாங்களே, அப்ப அந்த ஆள் இத்தனை நாள் ஜெயில்லே இருந்தது எவ்வளவு பெரிய வேஸ்ட்? பாவம் இல்லே அந்த ஆள்’ என்றாள் என் தங்கை.

‘அது மட்டும் இல்ல. தேவை இல்லாம அந்த ஆளோட பேரு, மானம், மரியாதை எல்லாமே கெட்டுப் போயிடுச்சு. அவரோட மனைவியை வேற  சித்திரவதை செஞ்சாங்க.’

‘இதுக்கெல்லாம் நஷ்ட ஈடு யார் தர்றது?’

நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.

தன் பிறகு சுத்தமாக உருமாற்றப் பிரச்சனையே  வரவில்லை. நான் வழக்கம் போல என் வேலைகளைச் செய்யலானேன். ஆஃபீஸில் போய் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தேன்.  எனக்கு நடந்தது எல்லாமே ஒரு கெட்ட கனவு போலவே தோன்றியது.
ன்றைக்கு டீவியில் செய்தி சொன்னார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் குண்டு வைப்பதற்காக தீவிரவாதிகள் எடுத்த முயற்சியைப் போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், அதில் சிலர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், ஒரு சிலர் தலை மறைவாகத் திரிவதாகவும் செய்தியில் சொன்னார்கள். இப்போதெல்லாம் செய்திகள் என்னை அச்சுறுத்துவதில்லை. எனவே டீவியைப் போட்டுப் பார்ப்பதில் எனக்குப் பயமில்லை. நான் ஆஃபீஸுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என் ஐந்து வயது மகள் ஷா நாஸ் டீவீ பார்த்தபடி ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தாள். உள்ளே இருந்த என் மனைவி ஷா பானு கத்தினாள். ‘பாடம் படிக்கறப்ப என்ன டீவி?’ ஏங்க அந்த டீவி எழவை ஆஃப் பண்ணுங்களேன்’

நான் டீவியை அணைக்க முற்பட்ட போது குழந்தை ஷா நாஸ், ‘அபு ...அம்மி அம்மி’ என்று என்னிடம் சொன்னாள். அவள் சுட்டிக் காட்டிய இடத்தில்   டீவியில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்கள். அந்தப் பெண் ஒரு ஆபத்தான தீவிரவாதி என்றும் அவளைப் பற்றிய தகவல் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்தார்கள்.  எனக்குத் திகீர் என்றது. உருமாறும் போது எனக்குள் ஏற்படுமே அந்த உணர்வு எனக்குத் தோன்றுவது போல் இருந்தது.அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண் அசப்பில் பார்ப்பதற்கு என் மனைவி ஷா பானுவைப் போலவே இருந்தாள்.

 *
                                   (இருவாட்சி ஆண்டுமலர், 2012)

No comments:

Post a Comment