Monday, February 16, 2015

பொக்கிஷம் புத்தக அங்காடி வாழ்த்துரை

பொக்கிஷம் புத்தக அங்காடி:
புதிய பதிப்பகம்
தொடக்க விழா வாழ்த்துரை

எம்.ஜி. சுரேஷ்

து ஒரு அரிய தருணம். இந்தத் தருணத்தில் ஒரு பதிப்பகம் தன்னை வெளியிட்டுக் கொள்கிறது. இதன் மூலம் ஓர் எழுத்தாளர் பதிப்பாளராகத் தன்னை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.  பொக்கிஷம் புத்தக அங்காடி என்ற புதிய பதிப்பகத்தை, எழுத்தாளர் தமிழ்மகன் ஆரம்பித்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களாகவும், பதிப்பாளர்களாகவும் மாறுவது இயல்பான வளர்ச்சியே. பி.எஸ். ராமையா, கல்கி, சுந்தரராமசாமி போன்றோர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த மரபின் நீட்சியாகத்தான் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு தமிழ்மகன் இன்று பதிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இந்த யுகம் ஓர் அரிய யுகம். இந்த யுகம்தான் எழுத்தை எழுத்தாளன் ஆளவில்லை. எழுத்துதான் எழுத்தாளனை ஆள்கிறது என்பதை அறிவித்த யுகம். அதே போல், எழுதப்பட்ட பிரதிகளும் புதிய தன்மையை எய்தியதும் இந்த யுகத்தில்தான். ஆசிரியனை அவன் இருந்த பீடத்திலிருந்து தள்ளிவிட்டு, விமர்சகனை முன்னிலைப்படுத்திய யுகமும் இதுதான்.

பாண்டிய மன்னன் செண்பகமாறனின் மனைவியின் கூந்தலுக்கு எப்படி இயற்கை மணம் இல்லையோ, அதே போல் எந்த ஒரு புத்தகத்துக்கும் இயற்கை குணம் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொருள்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது. புத்தகம் அதேதான். படிப்பவர்கள்தான் வேறு. அவர்கள்தான் வேறு வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். அதனால்தான், ஒரு சிலருக்கு ஒரு புத்தகத்தைப் பிடிக்கிறது. வேறு சிலருக்கு அதைப் பிடிப்பதில்லை.  இதைப்பற்றி லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹே சொல்லுவார்: ‘ஒரு புத்தகத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது உங்களுக்காக எழுதப்படவில்லை’

ஏன் இப்படி?

ஏன் என்றால் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான புத்தகம் என்ற ஒன்று எப்போதுமே எழுதப்பட்டதில்லை.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மொழி, பயன்படுத்தப்பட்ட சொற்கள், புழக்கத்தில் இருக்கும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட கருத்துகள் இவற்றையெல்லாம் தொகுத்து ஓர் எழுத்தாளன் தன் புத்தகத்தை எழுதுகிறான். இதை ஒரு வாசகன் எதிர்கொள்ளும்போதுதான் அது இயங்குகிறது. வாசகன் இல்லாத பிரதி கறுப்பு மை பூசப்பட்ட வெள்ளைக்காகிதங்கள் மட்டுமே.

வாசகன் தன் மனத்தில் ஏற்கனவே பதிந்திருக்கும் கருத்தை, தான் படிக்கும் புத்தகங்களில் தேடுகிறான். தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் மனோபாவத்துடன், ஒரு புத்தகத்தில் தன் முகத்தைப் பார்க்க விரும்புகிறான். அதில் அவன் முகம் தெரியும் போது மகிழ்ச்சி அடைகிறான். அது நிகழாதபோது அந்தப் பிரதி அவனுக்குப் பிடிக்காமல் போகிறது. கம்பனை ஒட்டக்கூத்தருக்குப் பிடிக்காது. ஒட்டக்கூத்தரை ஔவையாருக்குப் பிடிக்காது. ‘ஒட்டக்கூத்தனின் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள்’ என்று எழுதினார் ஔவையார்.

புதுமைப்பித்தனுக்குக் கல்கியைப் பிடிக்காது. கல்கியும் புதுமைப்பித்தனைப் புறக்கணித்தார். அவர்கள் இருவரும் மறைந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆகி விட்டது. இன்று இருவரது புத்தகங்களுமே வாசகர்களால் கொண்டாடப் படுகின்றன. தாஸ்தாயெவ்ஸ்கியை உலகம் கொண்டாடுகிறது. ஆனால், விளாதிமீர் நபக்கோவுக்கு தாஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்காது . ‘தாஸ்தாயெவ்ஸ்கி தகுதிக்கு மேல் கொண்டாடப்பட்டவர். அவர் ஒரு மூன்றாம் தர எழுத்தாளர்’ என்று அவர் சொன்னார். ஏனெனில், நபகோவின் முகத்தை தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்ணாடி காட்டவில்லை. இதுதான் பிரச்சனை. இன்றைக்கு இருவரது புத்தகங்களுமே கொண்டாடப் படுகின்றன.

எழுத்தாளர்கள் கண்ணாடிகளை உருவாக்குகிறார்கள். பதிப்பாளர்கள் அந்தக் கண்ணாடிகளைத் தயாரித்து விற்கிறார்கள். சில கண்ணாடிகள் துல்லியமாகக் காட்டுவதுபோல் தோன்றுகிறது. சில கண்ணாடிகள் மங்கலாகக் காட்டுகின்றன. வேறு சில கண்ணாடிகளோ ஒன்றைப்பார்க்க வேறு ஒன்றைக் காட்டுகின்றன.

புத்தகத்தில் நல்ல புத்தகம் கெட்ட புத்தகம் என்றெல்லாம் இல்லை. இரண்டே விதமான புத்தகங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, effective. அடுத்தது ineffective. அதாவது, பாதிப்பை ஏற்படுத்தும் புத்தகம். பாதிப்பை ஏற்படுத்தாத புத்தகம். இதை மீறி மூன்றாவதாக ஒரு புத்தகம் இல்லை.

ஹெமிங்வே, செகாவ், காளிதாசன், கம்பன், மௌனி, கல்கி, புதுமைப்பித்தன் போன்றோர் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதிகளை எழுதியவர்கள். அதனால்தான் அவை காலத்தை மீறி நிற்கின்றன. இன்றும் விற்கின்றன. தமிழ்மகன் பாதிப்பை ஏற்படுத்தும் எழுத்தை எழுதத் தெரிந்தவர்.  பாதிப்பை ஏற்படுத்தும் எழுத்துகளை அடையாளம் காணத்தெரிந்தவர். எனவே, அவரால் சமூகத்தில் பாதிப்பை நிகழ்த்தும் புத்தகங்களை வெளியிட முடியும்.  அவர் தொடர்ந்து இயங்கி பல வீரியம் மிக்க புத்தகங்களை வெளியிடவேண்டும், விரிந்த வாசகப்பரப்பைப் பெறவேண்டும் என்று அவரையும், பொக்கிஷம் புத்தக அங்காடி பதிப்பகத்தையும் வாழ்த்துகிறேன்.
                   
  <><><><><>
    
     

No comments:

Post a Comment