சவத்துடன் ஒரு பயணம்
(guantanamera – Cuba - 1995)
• • •
எம்.ஜி. சுரேஷ்
கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் வசிக்கும்
யோயிதாவுக்கு திடீரென்று ஓர் ஆசை முளைக்கிறது. தனது சொந்த ஊரான குவாண்டனமோவுக்குப்
போக வேண்டும் என்பதுதான் அது. அங்கிருந்து ஹவானாவுக்கு வந்த பிறகு, கடந்த ஐம்பது ஆண்டுக்காலத்தில்
ஒரு தடவை கூட குவாண்டனமோவுக்கு அவள் போனதே இல்லை. தனது உற்றார், உறவினர், நண்பர்கள்
என்று பலரும் குவாண்டனமோவில்தான் இருக்கிறார்கள். சாவதற்குள் ஒருமுறை அவர்களைப் பார்த்துவிடவேண்டும்
என்று நினைக்கிறாள். அதற்கான சந்தர்ப்பமும் வருகிறது. யோயிதா ஒரு பாடகி. அவளை குவாண்டனமோ
ஊர் மக்கள் பாராட்டி கௌரவிக்க விரும்புகிறார்கள். அதற்கான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்கிறார்கள். உடனே அவளும் புறப்பட்டு வருகிறாள்.
குவாண்டனமேரா
என்றால் குவாண்டனமோவைச் சேர்ந்த பெண் என்பது பொருள். தவிரவும் குவாண்டனமேரா என்பது
புகழ்பெற்ற கியூபாவின் நாடோடிப் பாடலும் கூட. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான
யோயிதா ஒரு பாடகி என்பதால், இந்தப் படத்தில் அந்தப் பாடல் ஆங்காங்கே பின்னணியாக இசைக்கப்பட்டிருப்பது
நேர்த்தியாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.
குவாண்டனமோ
விமானநிலையத்துக்குப் பறந்து வரும் உலோகப்பறவை தரை இறங்கி, ரன்வேயைத் தொடும் காட்சியுடன்
படம் ஆரம்பிக்கிறது. இவளை வரவேற்பதற்காக உறவுக்காரியான ஜார்ஜினா விமான நிலையத்துக்கு
வந்திருக்கிறாள். அவளைப்பார்த்ததும் யோயிதா பரவசமடைகிறாள். தொடர்ந்து போகும் வழியில்
தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று பலரைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள். எல்லாவற்றுக்கும்
உச்சமாக கிழவர் கேண்டிடோவைப் பார்த்து அளவற்ற ஆனந்தம் அடைகிறாள். ஐம்பது ஆண்டுகளுக்கு
முன் கேண்டிடோ அவளது காதலனாக இருந்தார். இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர். அந்தக்
காலத்து நினைவுகள் அவர்களை எங்கெங்கோ இழுத்துப் போகின்றன.
’உனக்குத்
தெரியுமா? நீ கொடுத்த நீல ரிப்பனை நான் இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறேன்?’ என்கிறார்
கேண்டிடோ.
’அப்படியா?’
என்று அளவற்ற வியப்புடன் கேட்கி|றாள் யோயிதா. மனம் நெகிழ்ந்து அப்படியே அவரை அணைத்துக்
கொள்கிறாள். அவரும் அவளை பதிலுக்கு அணைத்துக் கொள்கிறார். உணர்ச்சிப் பெருக்கில் அவள்
கைகால்கள் துவள்கின்றன. அந்தத் தருணத்தில் அவள் உயிர் சட்டென்று பிரிந்து விடுகிறது.
இப்போது
ஒரு பிரச்சனை முளைக்கிறது. யோயிதாவின் உடலை இங்கிருந்து ஹவானாவுக்குக் கொண்டு போகவேண்டும்.
அங்குதான் சவ அடக்கம் செய்ய வேண்டும். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், அது அத்தனை சுலபமான
காரியம் அல்ல.
கியூபா
நாட்டுச்சட்டப்படி ஒருவர் எங்கு இறக்கிறாரோ, அந்தப் பிராந்தியத்துக்குரிய நகரசபைதான்
அந்தச் சடலத்துக்குப் பொறுப்பு. இறந்த நபர் அதே ஊரில் அடக்கம் செய்யப்படாமல், வேறு
ஊருக்குக் கொண்டுபோய் அடக்கம் செய்யக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுமானால், அதற்கான ஏற்பாடுகளையும்
அந்த நகரசபைதான் செய்ய வேண்டும். அதாவது, இறந்த உடலை, எந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டுமோ,
அந்த ஊருக்கு நகரசபைதான் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான வாகனம், ஓட்டுநர், எரிபொருள்
எல்லாவற்றையும் அதுதான் ஏற்க வேண்டும்.
வழக்கமான இந்தச் சட்டத்தை அரசு உயர் அதிகாரியான
அடால்ஃபினோ மாற்றுகிறான். அவனது புதிய சட்டப்படி, ஒரு சடலத்தை வேறு ஊருக்குக் கொண்டுபோக
வேண்டுமானால், அந்தச் சடலத்தை அப்படியே ஒரே வண்டியில், போக வேண்டிய ஊருக்குக் கொண்டு
போய்விடமுடியாது. வழியில் வரும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கல்லறை நிலையங்களில் வண்டியை
நிறுத்தி, அங்கிருந்து வேறு ஒரு வண்டியில் சடலத்தை மாற்றி வைத்துக் கொண்டு அடுத்த ஊர்
வரை கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் வாகனம், எரிபொருள், டிரைவர் பயன்பாடு ஆகியவற்றில்
சோஷலிசத்தை பிரயோகம் செய்ய முடியும். அடால்ஃபினோ ஜார்ஜினாவின் கணவன். ஜார்ஜினாவின்
அத்தையான யோயிதாவின் மரணத்தின் மூலம் இப்போது அவன் குடும்பத்திலேயே ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது.
தனது புதிய சட்டத்தைத் தானே பரிசோதித்து சரிபார்க்க முடியும். அதில் அவனுக்கு மகிழ்ச்சி.
இப்போது
யோயிதாவின் உடலை குவாண்டனமோவிலிருந்து ஹவானாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப்
பொறுப்பை ஜார்ஜினாவின் கணவன் அடோல்ஃபோ சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான். அடால்ஃபோ ஒரு சிடுமூஞ்சி.
ஆணாதிக்கவாதி. மனைவியை அடிமைபோல் நடத்துபவன். ஜார்ஜினா அவனுடன் விருப்பமின்றி வாழ்க்கை
நடத்துகிறாள். கம்யூனிஸ்ட் கியூபாவின் அதிகார வர்க்கத்தினரில் அவனும் ஒருவன். சடலத்தை
ஆங்காங்கே மாற்றி மாற்றி எடுத்துப் போக வேண்டும் என்ற ஆலோசனையை முன் வைத்திருக்கிறான்.
எனவே, இப்போது இது வெற்றி அடைந்தால் இந்த முறை தொடர்ந்து கையாளப்படும். அவனுக்கும்
பேரும் பதவி உயர்வும் கிடைக்கும்.
அடோல்ஃபோ, அவன் மனைவி ஜார்ஜினா, யோயிதாவின் பால்யகால
காதலர் கேண்டிடோ ஆகிய மூவரும் ஒரு காரில் டிரைவருடன் ஹவானாவுக்குப் புறப்படுகின்றனர்.
அவர்களுக்கு முன்பாக யோயிதாவின் உடலைச் சுமந்து செல்லும் சவ ஊர்தி போகிறது.
இவர்கள்
மூவரும் புறப்படும் அதே சமயத்தில், குவாண்டனமோவிலிருந்து இரண்டு பேர் ஹவானாவுக்குப்
புறப்படுகின்றனர். டிரைவர் மரியானோவும் அவனது நண்பர் ரேமனும்தான் அந்த இரண்டு பேர்.
ஆங்கிலத்தில் friend, philosopher, guide என்று சொல்வார்களே அதைப் போல்தான் மரியானோவுக்கு
ரேமன். அவனுக்கு சதா அறிவுரைகள் வழங்கியபடியே இருப்பார். மரியானோ பாவாடைகளின் பின்னால்
சுற்றித் திரிபவன். லாரி டிரைவரான அவனுக்குப் போகும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு காதலி இருக்கிறாள்.
அவர்களைச் சமாளிப்பதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. இப்போது கூட அவன் ஹவானாவுக்குப்
போவதே தனது உள்ளூர்க் காதலியிடமிருந்து (மணமாகி கணவனுடன் வாழ்பவள்!) தப்பி ஒடுவதற்காகவே.
அவளுக்குப் பயந்து ஹவானாவுக்குத் தெறித்து ஓடுகிறான். ரேமன் அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.
‘இப்படி எத்தனை நாளைக்குத்தான் ஓடிக்கொண்டிருப்பாய்? யாராவது ஒருத்தியுடன் செட்டில்
ஆகப்பார். இளமையில் இந்த வாழ்க்கை ருசியாகத்தான் இருக்கும். வயதான பின் யாரும் வரமாட்டார்கள்.
நீ தனிமையில் வாழ்ந்து சாக வேண்டும். நீ சாகும்போது உன் கண்களை மூட, கண்ணீர் சிந்த
ஒரு பெண் வேண்டாமா? யோசி’
லாரியில்
ஏறும் முன் ரேமன் மதுவைக் கொப்பளித்து லாரியின் டயர்களில் துப்புகிறான். பின்பு சிகரெட்டைப்
பிடித்து டயர்களில் ஊதுகிறான். இது கியூப நாட்டு ஐதீகம். நீண்ட பயணம் மேற்கொள்ளும்
போது, இப்படிச் செய்தால், போகும் வழியில் வாகனத்துக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்பது
நம்பிக்கை. பின்பு, இருவரும் லாரியில் ஏற லாரி புறப்படுகிறது.
போகும்
வழியில் ஒரு உணவு விடுதியில் ரேமன் வண்டியை நிறுத்துகிறான். அங்கே ஒரு பெண்ணின் மீது
மரியானோ இடித்துக் கொள்கிறான். ‘ஸாரி’ சொல்லத் திரும்பும் அவன் திடுக்கிடுகிறான். இடிக்கப்பட்ட
அந்தப் பெண்ணும் திகைக்கிறாள். இருவர் மனங்களிலும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன. அந்தப்
பெண் வேறு யாருமல்ல. அடோல்ஃபோவின் மனைவி ஜார்ஜினாதான். பல ஆண்டுக்கால இடைவெளிக்குப்
பின்னர் இப்போது எதிர்பாராதவிதமாக மரியானோவும் ஜார்ஜினாவும் சந்தித்திருக்கின்றனர்.
வியப்பில் ஆழ்கின்றனர். அவள் அவனது முதல் காதலி.
வாழ்க்கையில் மறக்கவே முடியாத விஷயங்களில் ஒன்று முதல் காதல் அல்லவா?
மரியானோ கல்லூரியில் படித்த காலத்தில், அதே
கல்லூரியில் ஜார்ஜினா பேராசிரியராக இருந்தாள். இளைஞனான மரியானோவுக்கு அவள் மேல் ஒரு
மயக்கம் இருந்தது. அவளோ ஓர் ஆசிரியை. இவனோ மாணவன். இவர்களுக்குள் காதல் எப்படி சாத்தியப்படும்?
எனவே, அவளிடம் தன் காதலை வெளிப்படுத்துவதில் அவனுக்கு மனத்தடை இருந்தது. இருந்தாலும்
ஒருநாள், அவன் தன் காதலை வெளிப்படுத்தி ஒரு கடிதம் எழுதி ஒரு புத்தகத்தில் வைத்து அவளிடம்
கொடுத்து விட்டான். அதன் பிறகு அவளை அவன் பார்க்கவே இல்லை. அந்தக் கடிதத்துக்கான அவளின்
எதிர்வினையைக் கூட அவனால் பெற முடியவில்லை. அதற்குப் பின் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவோ
நடந்து விட்டன. அவள் தன் வேலையை விட்டு விட்டாள். அடோல்ஃபோவுடன் திருமணம் ஆகிவிட்டது.
இவன் பொறியியல் படிப்புப் படித்துவிட்டு லாரி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
காலம்தான் எத்தனை விரைவாக ஓடிவிட்டது. அந்த நிகழ்வுக்குப் பின்னர் இப்போதுதான் அவளை
மீண்டும் பார்க்கிறான். அவளும்தான்.
இந்தச்
சந்திப்பு இருவருக்குள்ளும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தி விடுகிறது. இருவராலும் ஒன்றும்
பேச முடிவதில்லை. பக்கத்தில் சிடுமூஞ்சிக் கணவன் அடோல்ஃபோ. கூடவே இருக்கும் வயோதிகர்
கேண்டிடோ. நடப்பதையெல்லாம் உற்றுக் கவனிக்கும் டிரைவர். இவர்கள் முன்னிலையில் என்ன
பேசுவது. ஹலோ, சௌக்கியமா போன்ற முகமன் வார்த்தைகளுடன் அந்தச் சந்திப்பு அகாலமாக முடிந்துவிடுகிறது.
இருவரும் மனச்சுமையுடன் அவரவர் வாகனங்களில் புறப்பட்டுப் போகின்றனர். அதன் பிறகு அவர்கள்
தொடரும் தங்கள் பயணத்தில் வழி நெடுக அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். பெட்ரோல்
பங்க், உணவு விடுதி, சிற்றூர், வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில்வே கேட், சவத்தை வேறு
வண்டியில் மாற்றும் நிலையங்கள் என்று பல இடங்களில் அவர்களுக்கிடையே சந்திப்புகள் நிகழ்கின்றன.
அந்த இடங்களில் முன்னாள் காதலிகளைச் சந்திக்கும் தருணங்களும் நிகழ்கின்றன. பழைய காதலிகள்
ஜார்ஜினாவின் கணகளில் படாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு அவனைப் பிடித்து ஆட்டுகிறது.
அடிக்கடி
நிகழும் இந்தச் சந்திப்புகளின் போது இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் துண்டுத் துண்டாகத்
தெரிந்து கொள்கின்றனர். இருவருக்குள்ளும் ஒளிந்திருந்த காதல் துளிர்விட ஆரம்பிக்கிறது.
இதற்கிடையில்
யோயிதாவின் சடலம் ஆங்காங்கே சவ நிலையங்களில் நிறுத்தப்பட்டு வேறு வேறு வாகனங்களில்
மாற்றப்படுகிறது. அடோல்ஃபோ எரிச்சலும் கோபமுமாக இருக்கிறான். கார்ப்பயணத்தின் போது,
ஜார்ஜினாவும் கிழவர் கேண்டிடோவும் சகஜமாகப் பேசிகொண்டே வருகின்றனர். கிழவர் யோயிதாவின்
மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி உருகுகிறாள் ஜார்ஜினா. தன் கணவன் இப்படி இல்லையே என்று
நினைக்கிறாள். கிழவரும் தன் மனைவி ஜார்ஜினாவும் இப்படி வழி நெடுகப் பேசியபடியே வருவது
அடோல்ஃபோவுக்குப் பிடிப்பதில்லை.
போகும் வழிதோறும் தொண்ணூறுகளில் இருந்த கியூபா
படம் பிடித்துக் காட்டப்படுகிறது. கியூபாவின் வீடுகள், சாலைகள், நிலப்பரப்பு ஆகியன
அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சோவியத் யூனியனின்
வீழ்ச்சியைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாடுகளில் கியூபாவும் ஒன்று. கியூபாவில் உடனடியாக
பணவீக்கம், உற்பத்தியில் தேக்கம், அத்தியாசவசியமான பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியன
ஏற்படுகின்றன. கடைகளில் கியூபாவின் கரன்சியை யாரும் மதிப்பதில்லை. அமெரிக்க டாலர் இருந்தால்தான்
பொருள் வாங்க முடியும். மக்கள் வேண்டிய உணவுப் பொருள் கிடைக்காமல் வாழைப்பழங்களைத்
தின்று காலத்தை ஓட்டுகின்றனர். எங்கும் ரேஷன். எதிலும் ரேஷன். தொண்ணூறுகளில் கியூபா
கடத்தல்காரர்களின் சொர்க்கமாக இருந்தது. படித்தவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காது. பயணம்
செய்பவர்களுக்கு நேரத்துக்கு பஸ் கிடைக்காது. வழியில் வரும் லாரி, வேன் என்று எது கிடைக்கிறதோ
அதில்தான் பிரயாணம் செய்ய முடியும்.. அது கூட
நிம்மதியான பயணமாக இராது. பாதி வழியில், யாராவது ஓர் அரசு அதிகாரி நினைத்தால் போதும்.
போகும் வாகனத்தின் செல்லும் திசையை மாற்றிவிட முடியும். கிழக்கு நோக்கிப் பயணம் செய்பவன்
தன் விருப்பத்துக்கு மாறாக மேற்கு நோக்கிப் பயணம் செய்ய வேண்டிய தர்மசங்கடம் நேரும்.
கியூப மக்களின் வாழ்க்கையில் அரசின் அதிகாரவர்க்கம் (Bureacracy) நுழைந்து எப்படியெல்லாம்
மக்களை அலைகழிக்கிறது என்பதை இந்தப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.
இவர்கள் பயணம் தொடர்கிறது. மக்கள் ஆங்காங்கே
அகதிகள் போல் திக்குத் தெரியாமல், திசை புரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஓரிடத்தில்
தெருவில் ஒரு ஆள் வெள்ளைப்பூண்டு விற்றுக் கொண்டிருக்கிறான். உடனே, அடோல்ஃபோவும், கார்
டிரைவரும் அவனிடம் பூண்டு வாங்கிக் கொள்கின்றனர். எந்தப் பொருள் எங்கே கிடைக்கிறதோ
அதை உடனே வாங்கிக் கொண்டால்தான் உண்டு. இப்போது விட்டால் அப்புறம் கிடைக்காது. இந்த
அவலமான சூழ்நிலையில் மரியானோ - ஜார்ஜினாவின் காதல் பூத்துக் குலுங்குவது இயற்கையின்
விசித்திரம்.
ஒரு துணிக்கடையில் பெண்களுக்கான அழகிய உடை
ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கிழவர் அதை ஜார்ஜினாவிடம் சுட்டிக் காட்டி,
’என்ன அழகான உடை, இதை யோயித அணிந்தால் எத்தனை அழகாக இருக்கும் தெரியுமா?’ என்கிறார்.
ஜார்ஜினாவுக்கு அந்த உடையைப் பிடித்து விடுகிறது. அவள் உடனே அதை வாங்கி அணிந்து கொள்கிறாள்.
இதைப் பார்த்த அடோல்ஃபோ, ‘என்ன சிங்காரம் வேண்டிக் கிடக்கிறது? என்று அவளைத்திட்டுகிறான்.
‘எல்லாம் இந்தக் கிழப்பயாலால் வந்தது, என்று அவரைத் திட்டுகிறான். பின்பு தன் மனைவியை
சாலையில் அடி அடி என்று அடித்து நொறுக்குகிறான். அப்போது அங்கே வரும் மரியானோ ஓடி வந்து
ஜார்ஜினாவைக் காப்பாற்றுகிறான். கிழவர் காரை விட்டு இறங்கி விடுகிறார். தனியே ஹவானாவுக்குப்
போக முடிவு செய்கிறார். பல வாகனங்களில் மாறி மாறி அவர் பயணம் செய்கிறார்.
போகு வழியில் ஒரு ரயில்வே கிராஸிங்கில் வேலை
செய்யும் ஒரு பெண் மரியானோவிடம் நெருக்கமாக நடந்து கொள்கிறாள். இதைப் பார்க்கும் ஜார்ஜினா
மனம் உடைந்து போகிறாள். அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு அழுதபடியே போகிறாள். மரியானோவும்
செய்வதறியாது விழிக்கிறான்.
போகும் வழி முழுக்க அடோல்ஃபோவும், ஜார்ஜினாவும்
சண்டை போடுகின்றனர். அவள் அணிந்திருக்கும் புதிய உடை நாகரிகமாக இருப்பது அவனுக்குப்
பிடிக்கவில்லை. அதைக் கழற்றி எறியுமாறு வற்புறுத்துகிறான். அவள் முடியாது என்று மறுக்கிறாள்.
ஒரு வழியாக கார் ஓரிடத்தில் உணவுக்காக நிற்கிறது. அப்போது அங்கு வரும் மரியானோ ஜார்ஜினாவிடம்
கொடுக்குமாறு சொல்லி ஒரு கடிதத்தை டிரைவரிடம்
கொடுக்கிறான். அவன் வாங்கி வைத்துக் கொண்டு அடோல்ஃபோவுக்குத் தெரியாமல் ஜார்ஜினாவிடம்
ரகசியமாகக் கொடுக்கிறான். அதைப் படிக்கும் ஜார்ஜினா ஒரு முடிவுக்கு வருகிறாள்.
கடைசியில் அவர்கள் ஹவானாவுக்கு வருகின்றனர்.
அங்கே இருக்கும் கல்லறை அலுவலகத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கே கிழவரும் வந்து சேர்கிறார்.
யோயிதாவின் சவப்பெட்டி ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் திறந்து பார்க்கும்
கிழவர் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுகிறார். அனைவரும் கிழவரை நோக்கி ஓடி வருகின்றனர்.
மூடி திறந்த நிலையில் இருக்கும் சவப்பெட்டியை
எட்டிப் பார்க்கும் அடோல்ஃபோ திடுக்கிடுகிறான்.
ஏனெனில், அதில் யோயிதாவின் சடலம் இல்லை. வேறு யாரோ ஒரு ஆப்பிரிக்க மனிதனின் சவம் இருக்கிறது.
அதைப் பார்த்துதான் கிழவர் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறான்.
சுற்றுமுற்றும் பார்க்கிறான். யாரும் கவனிக்கவில்லை. யாரும் பார்ப்பதற்குள் சட்டென்று
சவப்பெட்டியை மூடிவிடுகிறான் அடோல்ஃபோ. வழி நெடுக சவப்பெட்டிகளை மாற்றி மாற்றிக் கொண்டு
வந்ததில் குளறுபடி நேர்ந்துவிட்டது தெரிகிறது. வழியில் எங்கோ பிணம் மாறிவிட்டது. இருந்தாலும்
இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. மயங்கி விழுந்த
கிழவரும் சுவாதீனம் வராமல் இறந்து விடுகிறார். பிணம் மாறியதற்கு ஒரே சாட்சி
அவர்தான். அவரும் இறந்து விட்டார். தனது புதிய திட்டம் தோல்வி அடைந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாமல்
கமுக்கமாக இருந்துவிடுகிறான். பின்பு சவப்பெட்டியை அதற்குரிய காஸ்கட்டில் போட்டு மூடிவிடுகிறான்.
பிணம் மாறிவிட்ட உண்மையை மறைத்துவிட்டு தனது
இரங்கல் உரையை நிகழ்த்துகிறான் அடோல்ஃபோ. யோயிதா எவ்வளவு சிறந்த பெண்மணி. அன்பான ஆத்மா.
என்றெல்லாம் புகழ்ந்து பேசுகிறான். பக்கத்திலேயே கிழவரின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.
இருவரும் எவ்வளவு சிறந்த காதலர்கள். இறக்கும் போது இப்படி சேர்ந்து விட்டார்களெ என்றெல்லாம்
பேசுகிறான். அப்போது மழை பிடித்துக் கொள்கிறது. அடாத மழையிலும் விடாது பேசுகிறான் அடால்ஃபோ.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, ஜார்ஜினா
அங்கிருந்து தனியே புறப்பட்டுப் போகிறாள். அடோல்ஃபோவிடமிருந்து விலகும் மனோபாவம் அவளிடம்
தெரிகிறது. சற்றுத் தொலைவுக்கு வரும் அவளை நோக்கி ஒரு சைக்கிள் வருகிறது. அதை மரியானோ
ஓட்டி வருகிறான். அவளருகே வந்து நிறுத்துகிறான். இருவரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்கின்றனர். அதில் ஆயிரம் அர்த்தங்கள் தெரிகின்றன. மரியானோ ஜார்ஜினாவை முத்தமிடுகிறான்.
பின்னர், ஜார்ஜினா சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்து கொள்ள மரியானோ ஒட்டிக்கொண்டு
போகிறான். இவ்விதமாக இந்தப் படம் முடிகிறது. கியூபாவில் அதிகாரவர்க்கம் கொண்டு வரும்
எந்தச் சீர்த்திருத்தமும் நடைமுறையில் வெற்றி அடைவதில்லை என்ற விமர்சனத்தை இந்தப் படம்
பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது.

ஒரு சோஷலிஸ தேசத்தை ஒரு சோஷலிஸ்டே இப்படி
விமர்சிக்கலாமா என்று எழுந்த கேள்விக்கு, ஏலியா பின்வருமாறு பதில் சொன்னார்: ‘புரட்சி
வளர்வதற்கும், நமது தேசம் சுபிட்சம் பெறுவதற்கும், விமர்சனம் கண்டிப்பாக அவசியம்’
நமது யுகத்தில் திரைப்படங்கள் வெறும் கதையையும்
கேளிக்கைகளையும் மட்டுமே நம்பி இருக்கலாகாது. கதையை மீறிய சமூக அக்கறை மற்றும் உள்ளொளி
பாய்ச்சும் தருணங்களையும் கொண்டதாக அது இருக்க வேண்டும். அதுதான் நமது காலத்தின் தேவை.
இந்தப்படம் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
• • •
No comments:
Post a Comment